ச.ந. கண்ணன்

ஐந்து வருடங்களுக்கு முன்பு கல்கியில் நிருபர் பணிக்குச் சேர்ந்தபோதுதான் செல்போன் இல்லாமல் ஜல்லியடிப்பது இனியும் சாத்தியமில்லை என்கிற நிதர்சனம் புரிந்தது. பெரும்பாலும் இளம் பெண்களையே நேர்காணல் செய்ய நேர்ந்ததால் அவர்களிடம் நண்பனின் பிபி எண்ணைக் கொடுக்க எனக்குத் துணிவில்லை. மேலும் மில்லினியம் பிறந்தபிறகு செல்போன் இல்லாதவனும் செருப்பு அணியாதவனும் ஒன்றுபோல உலகம் பார்க்கத் தொடங்கியபிறகு ஆடையை விடவும் செல்போன் அவசிய வஸ்து ஆகிவிட்டது. கேஜெட்மீது ஆசை வைக்காதவன் என்ன மனிதன்! யுனிவர்சலுக்கு நண்பர் அம்ஜத்துடன் சென்றேன்.

 

பார்த்த ஷணத்திலேயே என்னைப் பார்த்து கண்ணடித்தது 1100 மாடல். கையில் எடுத்தால் ஐஸ்க்யூப்போல கையில் நழுவிநழுவிச் சென்றது. சட்டைப்  பாக்கெட்டுக்குள் வைத்தால் இருந்த இடம் தெரியவில்லை. அம்ஜத் இதான் என்று கைகாட்டினேன். அம்ஜத்தை என் நண்பர் என்று சொல்வதைவிடவும் என் கிரடிட் கார்ட் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இப்படித்தான் ஒருநாள் காலை கம்ப்யூட்டர் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் முதல் புத்தகமான ஜாக்கிசானின் வாழ்க்கையை எழுதிய சமயம் அது. தாளில் எழுதினால் ஜென்மத்துக்குப் புத்தகத்தை முடிக்க முடியாது என்கிற நிலைவந்தபோதுதான் கணினிமீது அவா பிறந்தது. உடனேயே அம்ஜத்தை அழைத்தேன். அன்று மாலையே என் வீட்டில் கம்ப்யூட்டர் ஜம்மென்று நின்று கொண்டிருந்தது.

 

எலெக்ட்ரானிக் பொருள்களுக்கென்று ஒரு ஃபோபியா உண்டு. ஆனால் நிறையபேருக்கு அப்படிப்பட்ட சாதனங்கள் பொம்மைபோல. பார்ட் பார்டாகப் பிரித்து அவர்களே அசெம்ப்ளிங்கும் செய்து அதன் அட்டைப்பெட்டியைத் தொடாததுபோல அதே இடத்தில் வைத்துவிடுவார்கள். நான் இவர்களின் எதிரணி. தொட்டுப் பார்த்து விலகிவிடுவேன். சித்திரமும் கைப்பழக்கம் செல்போனும் நாள் பழக்கம். 1100வை இயக்க நான் பெரிதாக பாடுபடவில்லை. சில நாள்களில் சில நொடிகளில் இடதுகையால் 500 வார்த்தைகளை எஸெமெஸ் அடித்து செண்ட் செய்கிறவரை அதன் செயல்முறைகள் எனக்குத் தண்ணிப்பட்டப் பாடாகிவிட்டது. நோக்கியாவின் இயல்பே அதன் எளிமை என்றாலும் 1100வை அரைத்தூக்கத்தில்கூட இயக்கமுடியும்.

 

யுனிவர்சலையா, நோக்கியாவையா? யாரைப் புகழ்வது? என் 1100 ஒருநாள்கூட உடம்புநோகப் படுத்து நான் பார்க்கவில்லை. ஒருமுறை அதை என் நண்பனிடம் பந்துபோல காட்சுக்கு வீசியபோது அவன் திடீரென்று கையைக்கட்டி ஏவிஎம் சரவணன்போல நின்றுகொண்டான். பத்தடி தூரம் ஆறடி உயரத்தில் இருந்து பெருத்த சத்தத்தோடு விழுந்தும் சொடுக்குபோடும் நேரத்தில் தூசிதட்டிக்கொண்டு எழுந்துவிட்டது. ஒருவேளை இது மாஸ்டர் பீஸோ என்றுகூட அடிக்கடி நான் எண்ணுவேன் (விக்கிபீடியா எனக்குமேல். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் விற்ற மாடல் என்று 1100வுக்குக் காவடி தூக்குகிறது). கல்லூரிப் பெண்களிடம் போனில் மணிக்கணக்காகப் பேசநேரிடும்போது வாயிருந்தால் அது அழுகும்டா என்று அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். ஆனால் அது என்னை வாயார வாழ்த்தி மேலும் மேலும் பல நட்புகளை தேடித்தந்தது. தொடர்ந்து அவற்றைக் கட்டிக்காக்க உதவியது. வாங்கிய புதிதில் அதுதான் ஸ்டைலான மொபைல். நான் வாங்கியபோது அதன் விலை ரூபாய்  4300 சொச்சம். அப்போதுதான் மார்க்கெட்டில் உலவவிட்டிருப்பார்கள் போலும்.  கண்மூடிக் கண் திறப்பதற்குள் அதன் விலை இரண்டாயிரத்துக்கு இறங்கிவிட்டது. விளைவு, நாட்டு மக்கள் அத்தனை பேர் கையிலும் 1100. விற்பனையும் அதன் வாடிக்கையாளர் களும் அதிகமாக ஆக 1100 மாடல் வைத்திருப்பவர்களை தொல்மனிதர்களாக காட்சி தந்தனர். கேமரா, ட்ச் ஸ்க்ரீன் மொபைல்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. நான் அசரவேயில்லை.

 

வருடம் செல்லச் செல்ல 1100வின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஆனால் அதன் வண்ணத்திலும் பொலிவிலும்தான் அதைக் காணமுடியும். அதன் உழைப்பு, ஸ்திரத்தன்மையை மட்டும் விட்டுக் கொடுக்கவே யில்லை.  நாட்டில் செல்போன் கடைகள் பொட்டிக் கடைகளைவிடவும் அதிகமாகப் பெருகவே அவற்றின் உதவியோடு கொஞ்சம் பூச்சு வேலை செய்தேன். இதயத்தையும் (சர்கியூட்) மூளையும் (பேட்டரி) மாற்றவில்லை. மற்றபடி ஆறுமாதத்துக்கு ஒருமுறை ஒண்ணுமில்லைடா கண்ணா ஒண்ணும் ஆகலை என்று அதைத் தடவிக்கொடுத்தபடி கீபேட், முதுகுப் பகுதிகளை நைசாக மாற்றி உறைக்குள் மாட்டி விடுவேன். இப்படி பலமுறை வெள்ளை அடித்தும்கூட விஜய்காந்த்போல அதன் வயதை மறைக்கவே முடியவில்லை. 

 

அதற்குள் என் செல்லம்  ஐந்து பிறந்தநாள்களைக் கடந்திருந்தது. நாட்டில் சாவி, பேனாவைத் தொலைத்தவர்களை விடவும் செல்போன் தொலைத்தவர்கள் அதிகமாகிக் கொண்டேயிருந்தார்கள். அதிசயமாக நான் 1100வைத் தொலைக்கவும் இல்லை. அப்படியும் ஒருமுறை டாக்ஸியில் தவறவிட்டபோது டாக்ஸி டிரைவர் வீடுதேடி வந்து கொடுத்துவிட்டுப் போனார். பார்த்துப் பார்த்து வளர்த்தக் குழந்தை நொடியில் கைவிட்டுப் போகுமா என்ன! வாங்கிய ஒருவருடத்தில் அதைக் கடாசிவிட்டு கேமரா மொபைலைக்கு மாறியவர்கள் நிறையபேர். ஆனால் நான் மாடுபோல வேலை வாங்கினாலும் சரியான ஊட்டம் (சார்ஜ்) கொடுத்து 5 வருடம்வரை வைத்துக் காப்பாற்றியதால் அதற்கு என்மீது எக்கச்சக்கமான எஜமான் பாசம். பாசம் அதிகமானதோ ஊட்டம் அதிகமானதோ அல்லது ஆயுள்தான் அதிகமானதோ அதன் மூளை உப்பிப் போக ஆரம்பித்தது. இனி தேறாது என்று பார்க்கும்போதே தெரிந்தது. எனக்குப் போன் பேசவே பயமாகிப் போனது. இப்படித்தான் தென் கொரியாவுல ஒருத்தர் வீங்கிப்போன பேட்டரியை யூஸ் பண்ணியிருக்காரு. ஒருநாள் டாய்லெட்ல பேசிட்டு இருந்தபோது டமால்னு வெடிச்சுடுச்சு. அந்த ஃபார்வர்டு மெயில் உனக்கு வரலையா என்று அருகில் இருந்தவர்கள் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தார்கள். நான் 1100வைப் பார்த்தேன். அதனால் நிமிர்ந்துகூடப் பார்க்கமுடியவில்லை. ஆனாலும் ஏதோவொரு வைராக்கியம். தம் கட்டி சேவகம் செய்துகொண்டிருந்தது. நல்ல நிலையில் இருக்கும்போதே அதைக் கருணைக் கொலை செய்துவிட முடிவு செய்தேன். அம்ஜத்தை அழைத்தேன்.

 

இந்தியாவின் தேசிய மொபைல் நோக்கியாதான். எத்தனைநாள்தான் த்ரிஷாவையே பார்ப்பது. கொஞ்சம் ஜெனிபர் லோபஸின் ரசிகன் ஆகலாம் என்று அம்ஜத்தின் உதவியோடு தடாலடியாக மோட்டோவுக்கு மாறினேன் (மோட்ரோலாவை மோட்டோ என்றுதான் சொல்லவேண்டுமாம்). கேமரா மொபைல். 2 மெகா பிக்ஸல். 4 ஜிபி இடவசதி. இண்டர்நெட் வசதி, ஹாண்ட்ஸ் ஃப்ரீ, லொட்டு லொசுக்கு என்று கந்தசாமி சிபிஐ ஆபிஸ்போல பக்கா ஹைடெக்காகவே இருக்கிறது மோட்டோ. ஆனால் எனக்கு இத்தனையும் ரொம்பவே அதிகம். செல்போன் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவேன். மொபைலில் பாட்டு கேட்க மாட்டேன். அது கொடுக்கும் புகைப்படத் துல்லியம் எனக்குப் போதாது. அலுவலகத்திலும் வீட்டிலும் இணைய வசதி இருக்கும்போது செல்போன் இணையத்தை எங்கு பயன்படுத்துவது? என்னது டிராவலிலா? பிறகு நான் எங்கு, எப்போது புத்தககம் வாசிப்பதாம்?

 

என் மனைவி ஜிடி நாயுடு ஊர்ப் பெண் அல்லவா! 'அடடா.. பேட்டரிதாங்க போச்சு' என்று அவளுடைய பழைய நோக்கியா மொபைலை வெளியே எடுத்தாள். அதன் பேட்டரியில் எவ்வித தேய்மானமும் கிடையாது. ஆனால் மொபைலின் இதர பாகங்கள் செயலிழந்து போயிருந்தன. இரண்டு பேரின்  செல்போன் உதிரிப் பாகங்களையும் அருகருகே வைத்தாள். முதலில் 1100வின் பேட்டரியை குப்பைக்கூடைக்குள் எறிந்தாள். தன் பழைய மொபைல் பேட்டரியை எடுத்து 1100விற்குள் பொருத்தினாள். சிம்கார்டையும் சொறுகினாள். சிவாஜி படத்தில் ரஜினியின் உயிரைத் திரும்பிக் கொண்டுவருவதுபோல ஒருகாரியம். அவ்வளவுதான் கண்ணை மூடிக்கொண்டு பட்டனை மெதுவாக அழுத்தினேன். சில நிமிடங்களில் மங்களாக ஆரம்பித்த விளக்கொளி அதன் உடல்முழுக்க வெள்ளமாகப் பரவி ஜொலித்தது. மறுஜென்மம் எடுத்திருக்கிறது என் 1100.

 

நோக்கியாவில் இந்தமாடலை இப்போது முடக்கி வைத்திருக்கிறார்கள்.