முதல் ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டி - ராஜ்கோட்
இந்தியா vs இங்கிலாந்து
இந்தியா - 387/5
இங்கிலாந்து 229
ஸ்டேண்ட்ஃபோர்ட் கோப்பையில், மும்பை மூன்றாம்தர அணியுடனான டூர் மேட்சில் எல்லாம் சாதிக்காத ஒன்றையா இங்குவந்து இங்கிலாந்து சாதித்து விடப்போகிறது என்று நான் இங்கிலாந்தின் இந்தத் தோல்விக்குத் தயாராகவே இருந்தேன். அசார் தலைமையில் இந்திய அணி சென்ற இடமெல்லாம் உதை வாங்கும். அதுபோல இருக்கிறது இங்கிலாந்து. இத்தனைக்கும் இவர்கள்தான் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் வாலை சுருட்டி வைத்தவர்கள்.
இந்திய அணிக்கு நாளுக்கு நாள் புது பொலிவு கிடைத்து வருகிறது. அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தவர்கள் புதுவேகம் கொள்கிறார்கள். ஃபார்மில் இருக்கிறவர்கள் இன்னும் அதிகமான வெறியோடு ஆடுகிறார்கள். ஏற்றுகிற விளக்கெல்லாம் பிரகாசமாக எறிகிறது.
யூசுஃப் பதானை நம்பி நிறைய முதலீடுகள் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால் அண்ணனும் தம்பியும் கொடுக்கிற வாய்ப்புகளையெல்லாம் வீணடித்துவிடுகிறார்கள். வெளியே பத்ரிநாத், உத்தப்பா, விஜய் எல்லோரும் உள்ளே நுழைய முண்டியடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரைனாபோல அக்கறையோடு விளையாடுவது யூசுஃப் பதானின் எதிர்காலத்துக்கு உதவும். அந்தத் தம்பி புரிந்துகொள்வாராக.
சுரத்தில்லாமல் ஆடப்பட்டு வந்த ஒருநாள் போட்டிக்குப் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது ஐசிசி. மூன்றாவது பவர்பிளேயை பேட்டிங் டீமை வைத்து முடிவு செய்யச் சொல்லியது தொலைந்துபோன சுவாரசியத்தை மீட்டெடுத்தது போலிருக்கிறது. இன்று மூன்றாவது பவர் பிளேயை 35 ஆவது ஓவரில் எடுத்துக்கொண்டது இந்தியா. இந்த ஒரு காரணத்துக்காக இங்கிலாந்தின் சிற்ந்த பவுலர்களான ஃபிளிண்டாஃபும் ஹார்மிஸனும் பவர்பிளேவில் முழுமூச்சாக பந்துவீசினார்கள். இதனால் அவர்களுடைய ஓவர் கோட்டா குறைந்துபோனது. 40 ஓவருக்குப் பிறகு மிக எளிதாக ஆடி, தொட முடியாத ஸ்கோரைத் தொட்டது இந்தியா.
யுவ்ராஜ் சிங். டெஸ்ட் மேட்சுக்கு நீ லாயக்கு கிடையாது என்கிற குற்றச்சாட்டை மட்டும் எந்த வீரராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஆனால் சமீபகாலமாக இந்தப் பழி யுவ்ராஜ்மீது அதிகமாகவே விழுந்தது. அவருக்குப் பிறகு முளைத்த வீரர்களுக்கெல்லாம் இந்திய டெஸ்ட் அணியில் புகலிடம் கிடைத்தது. ஆனால் யுவ்ராஜ் தொடர்ந்து டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.
இந்தக் கோபம் சீற்றமாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரில் மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டம் வாங்குவதே யுவ்ராஜின் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும். அவருடைய அதிரடி ஆட்டம் அதைத்தான் பிரதிபலித்தது. கங்கூலி இடத்தில் தான் அமர்த்தப்படுவதே நியாயமானது என்று அவர் ஆத்மா கதறுவது நன்றாகக் கேட்கிறது. நல்லது. வாழ்த்துகள்.