ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

இரண்டாவது ஒருநாள் போட்டி

இந்தியா vs இங்கிலாந்து

இந்தியா -   292/9
இங்கிலாந்து - 238
 

 

இங்கிலாந்தின் துரதிர்ஷ்டம், ஒருநாள் தொடர் தொடங்கியபோது கடுமையான அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தார் யுவ்ராஜ் சிங். பின்னால் அவர் இடத்தை நிரப்ப ஆறு பேருக்கு மேல் காத்து இருந்தார்கள். நடுஜாமத்தில் துணைத் தலைவர் பதவி பிடுங்கப்பட்டது. சேலஞ்சர் டிராபியில்வேறு ஊருக்கு முன்னால் அவுட் ஆனார். தன்னை மட்டும் தனிமைப்படுத்தி  நரகக்குழியில் தள்ளுவதாக யுவ்ராஜ் சிங் உணர்ந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  கோபத்தில் இருக்கும்போது கையில் சிக்குகிறவரை நையப்புடைப்போம் இல்லையா, அப்படி ஒரு தருணத்தில்தான் யுவ்ராஜ் கையில் சிக்கியது இங்கிலாந்து அணி. இனிமேல் யாராவது நாக்கு மேல் பல் போட்டு பேசுவீர்கள்!

 

நேற்று இரவுவரை சைட்பாட்டம் ஆடுவார்,யுவ்ராஜ் ஆட வாய்ப்பில்லை என்பதுதான் உறுதியானத் தகவலாக இருந்தது. ஆனால் காலையில் 9 மணிக்கு இரண்டுமே மாறிப்போனது. அணிப்பட்டியலில் யுவ்ராஜின் பெயர். அப்போதே பாதி தோற்றுவிட்டது இங்கிலாந்து.

 

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பேட்டி கொடுத்திருந்தார் கோலிங்வுட். அண்ணாரின் ஆசைப்படியே முதல் மூன்று விக்கெட்டுகளை முதல் பத்து ஓவர்களில் காவு கொடுத்தது இந்திய அணி. சீக்காளியாக நினைக்கப்பட்ட யுவ்ராஜ் சிங் மைதானத்துக்கு வந்து இறங்கியவுடன் ராஜ்கோட் நிகழ்வுகள் மீண்டும் சம்பவித்தன. 

 

வீரத் கோலி அணியில் இடம் பெறாததற்கு அவர் ஒரு தவறும் செய்துவிடவில்லை. ஆனால் தோனிக்கு இறுதி பத்து ஓவர்களில் அடித்து ஆட யூசுப் பதானின் திணவெடுத்த தோள்கள் தேவைப்பட்டன. அவரை வைத்து ஒரு சூதாட்டம் ஆடிப்பார்த்தார்  தோனி. கைமேல் பலன்.

 

நல்ல பேட்ஸ்மேன்கள் நாலு பேருக்கு மேல் இருந்து தொலைப்பதுதான் இங்கிலாந்தின் தலையாயப் பிரச்னை. பெல்  மூன்றாவதாக இறங்குவதுதான் ஆரோக்கியம். பிரியரை பின்னால் இறக்கலாம். நாலாவது, ஐந்தாவதாக பீட்டர்சன், ஃபிளிண்டாஃப் வந்தாகவேண்டும். ஆறாவதாக பொபரா. அடுத்தது கோலிங்வுட். ஆச்சா என்றால் உள்ளேன் ஐய்யா என்கிறார்கள் படேலும் பிராடும். என்னய்யா விளையாடுகிறீர்களா?

 

ஐபிஎல்-லில் ஐதராபாத்தின் அணியின் வீரியத்தைப் பார்த்த அத்தனை பேரும் அவர்களை நம்பி தங்கள் சொத்தை ஒப்படைப்பதாக இருந்தார்கள். ஆனால் அந்த அணிதான் முதலில் சுருண்டு விழுந்தது. ஓர் உறைக்குள் ஒரு கத்திதான் இருக்கமுடியும் என்று காலம்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் திறமை மலிந்து கிடக்கிறது. குறிப்பாக பேட்டிங்கில். அதுவே பல குளறுபடிகளுக்கு காரணமாகி விட்டது.