'உன் பேர் என்னப்பா?' என்று கேட்பார் பிரகாஷ் ராஜ். அவருடைய மகள் வீட்டுக்கு ஒரு பிச்சைக்காரனைக் கூட்டி வந்திருப்பாள். 'அப்பா இவர் இனிமேல் நம்ம வீட்லதான் தங்கணும்' என்று அடம்பிடிப்பாள். சிரமத்துடன் பிரகாஷ் ராஜ் பிச்சைக்காரனிடம் பேச்சு கொடுப்பார்.

 

'எனக்கு பேரே இல்லைங்க' என்பான் அவன்.

 

'சரி, இன்னைக்கு உனக்கு ஒரு பேர் வைச்சிடலாம். என்ன பேர் வைக்கலாம்?'

 

'ரவி சாஸ்திரி'.

 

'என்னது... ரவி சாஸ்திரியா?!!!'

 

'ஆமாங்க. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.'

 

'ஓ! நீ கிரிக்கெட் எல்லாம் பார்ப்பியா? எங்க பார்ப்பே?'

 

'வசந்த அண்ட் கோ!'

 

'வசந்த் அண்ட் கோ?????'

 

'ஆமாங்கய்யா. அந்தக் கடை வெளியில நின்னு பார்ப்பேன். ராசியா இருக்கணும்னு ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு டிவியில பார்ப்பேங்க.'

 

இந்தக் காட்சியில் சிரிக்காதவர் யாராவது இருக்கமுடியுமாஅழகிய தீயே, மொழி இரண்டும் புதிய கலவையோடு வெளிவந்த படங்கள். தமிழ் படங்களில் நகைச்சுவையை எத்தனை சிட்டிகைகள் பயன்படுத்தலாம் என்று அவை பாடம் புகட்டின. அதிலும் மொழியில் கையாளப்பட்ட சில  உளவியல் பூர்வமான காட்சிகள் தமிழ் சினிமா இயக்குநர்கள் அதுவரை முயற்சிக்காதவை. மனம் விட்டு சிரிக்க வைத்து கூடவே மனம் முழுக்க மல்லிகை பூவை நிரப்பி ரசிகனை மயக்க நிலைக்குக் கொண்டு சென்ற மொழி தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. (சிறந்த படங்கள் என்றால் அழுவாச்சி படங்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று விதிகள் இல்லையே?). அந்தப் படத்தின் ஒரே சறுக்கல், வித்யா சாகரின் பின்னணி இசை.

 

அழகிய தீயே, மொழி படங்களில் காதல்தான் மையம். ராதா மோகனின் இரண்டாவது படமான பொன்னியின் செல்வன்  தாய் - மகன் உறவைச் சொன்ன படம். அபியும் நானும் தந்தை - மகள் உறவைச் சொல்வதாக எடுக்கப்பட்ட படம். ஆனால் கதை பண்ணும்போது ராதா மோகனுக்கு ஏற்பட்ட உணர்வுகளும் பாதிப்புகளும் சந்தோஷங்களும் திருப்திகளும் ரசிகனுக்கு ஏற்படாததுதான் படத்தின் ஆகப்பெரிய சோகம்.

 

மகளின் கையில் வெந்நீர் கொட்டிவிட்டது என்று பிரகாஷ் ராஜ் பதறுவதும் மகளின் அட்மிஷனுக்காக பிரகாஷ் ராஜ் இரவெல்லாம் தேர்வுக்குத் தயாராகும் காட்சிகளும் ஆரம்பத்தில் ரசிகனை இன்னொரு 'மொழி'க்குத் தயார் செய்கின்றன. ராதா மோகனிடமிருந்து இன்னொரு சிறந்த படம் கிடைக்கப்போகிறது என்கிற நம்பிக்கையை விதைக்கின்றன. அதேசமயம் அப்போதே முழு படத்தையும் பிரகாஷ் ராஜ் மட்டுமே தாங்குகிறாரே என்கிற அபாய மணியும் ஒலிக்கிறது.

 

பிரகாஷ் ராஜிடம் த்ரிஷா தன் காதலைச் சொல்லும் வரைக்கும்தான் அபியும் நானும் ஒரு தரமான   படம். அதன்பிறகு சக்கரத்தில் சிக்கிக்கொண்ட எலுமிச்சையாகிவிடுகிறது..

 

அழகிய தீயே, மொழி போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்கள் மிக நுணுக்கமாக அணுகப் பட்டிருப்பார்கள். வாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு கதாபாத்திரங்களின்  பிரதிபலிப்பான்களாக, உயிரோட்டத்துடன் அவை படைக்கப்பட்டிருந்தன. ஆனால் அபியும் நானும்-ல் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தைத் தவிர இதர துணை கதாபாத்திரங்கள் அனைத்துமே வீண். தலைவாசல் விஜய்யின் புத்திர சோகமும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் பிரிவும் கிளிஷேக்கள்.

 

மகளாக வருகிற த்ரிஷா பல தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகளுக்கு இடையே இந்தப் படத்துக்கு நடித்துக்கொடுத்ததுபோல ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார். மேலும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உண்மையான பாசமே இல்லை (அதேசமயம் சிறுவயது த்ரிஷா - பிரகாஷ் ராஜ் இடையே கவித்துவமான காட்சிகள் உண்டு). பிரகாஷ் ராஜ் அந்த உருகு உருகிறார். த்ரிஷாவோ அவரை இடது கையால் கையாள்கிறார். அதுவும் தன் திருமண தேதியை த்ரிஷாவே தந்தையிடம் அறிவிப்பது அராஜகம். இயல்பான படமாக பிரகடனப்படுத்தப்பட்ட அபியும் நானும் இந்த இடத்தில் சினிமா உடையை அணிந்துகொள்கிறது. அதே த்ரிஷா இறுதிக் காட்சியில் அப்பா வந்தாதான் கல்யாணம் என்று ரிஜிஸ்டர் முன்பு சிணுங்கும்போது அந்த அழுகையில் தந்தைப் பாசத்துக்குப் பதில் கிளிசரின்தான் தென்படுகிறது.

 

அப்பா - மகள் பாசத்திலேயே இத்தனை பொத்தல்கள். சரி, வருகிற மருமகப் பிள்ளையாவது படத்தைத் தூக்கி நிறுத்துவார் என்றால் அவரோ படத்தில் ஒட்டிக்கொண்டிருந்த சிறு சுவாரசியத்தின் வேரையும் அடியோடு வெட்டி வீழ்த்தி விடுகிறார்.

 

த்ரிஷா ஒரு பஞ்சாபியை காதல் செய்கிறார். த்ரிஷாவின் காதலை முழுமையாகக் காண்பிக்காததால் இயக்குநர் தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் என்று நான் எண்ணுகிறேன். த்ரிஷாவின் மனப்போராட்டங்களை அங்கே காண்பிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த இடத்தில் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரத்தில் தென்பட்ட ஒரு பிழையையும் சொல்லிவிடுகிறேன். கல்லூரிக் காலத்தில் திரிஷாவை அவருடைய பால்ய தோழன் ஒருவன் காதல் செய்கிறான். த்ரிஷாவுக்குக்  காதல் கடிதம் கொடுக்கிறான். உடனே த்ரிஷா அப்பாவிடம் சென்று முறையிடுகிறார். படம் முழுக்க த்ரிஷாவுக்கு ஒன்றென்றால் பதறிப்போய் நடுங்கும் பிரகாஷ் ராஜ் இந்தக் காட்சியில் மட்டும் அதீத பக்குவம் கொண்ட தந்தையாக நடந்துகொள்கிறார். அப்படியே மறைத்து விடு. யாரிடமும் முறையிடாதே. பல சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்கிறார். பிரகாஷ் ராஜின் இயல்பான குணம் இதுவல்ல. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டுமே அவர் அபியின் அப்பா. 

 

மருமகனுக்கு வருவோம். த்ரிஷா சிறுவயதில் பிச்சைக்காரர் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிவந்ததுபோல வளர்ந்த பிறகு இன்னொரு பிச்சைக்காரரை காதலர் என்று கைக்காட்டவில்லை  என்கிற செய்தியைச் சொல்லவந்த ராதாமோகன் கண்டபடி யோசித்துவிட்டார். விளைவு, பஞ்சாபி   கூட்டிவந்த அத்தனை பேரும் அவருடைய உறவினர்கள் அல்லர் (வீட்டுக்கு வந்த முதல் நாளே அவர்களைப் பற்றி விசாரிக்காமல் ஒருவாரம் கழித்து ஆமா யாரு இவங்க என்று கேட்கிறார் பிரகாஷ் ராஜ்! ), அவர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு கலவரங்களில் தந்தை, தாய், உறவினர்களை இழந்தவர்கள், அவர்கள் அனைவரையும்  த்ரிஷாவின் காதலரே  காப்பாற்றுகிறார் என்றெல்லாம் ரசிகர்களுக்குப் போதிக்கப்படுகிறது. கூடவே இந்திய பிரதம மந்திரியும் பஞ்சாபியும் சிநேகிதர்கள் என்று புதுக்கதை ஆரம்பித்து பிரதமர் அந்த சிங்குக்கு போன் செய்கிற அபத்த காட்சியெல்லாம் படத்தில் வருகிறது. தமிழ் சினிமா இயக்குநர்கள் திரைக்கதை அமைப்பில் எப்படியெல்லாம் தடுமாறுகிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

 

த்ரிஷாவின் காதலையும் பஞ்சாபி மருமகனையும் ஏற்றுக்கொள்ளாத பிரகாஷ் ராஜ் இறுதிவரை அதே மனநிலையில் இருக்கிறார். மாப்பிள்ளையின் பின்புலங்களைக் கண்டு வியந்தாலும்  ஒரு வெறுமை இருந்துகொண்டே இருக்கிறது.  தன் காதலையும் காதலனையும் ஏற்றுக் கொள்ளும்படி த்ரிஷாவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் படத்தின் கதையமைப்பும் அதன் சுவாரசியங்களும் வலுவிழந்து போகின்றன. இறுதி அரை மணி நேரத்தில் ராதா மோகன் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இதனால் தமிழின் முக்கியப் படமாக வந்திருக்க வேண்டிய ஒரு படம் முடிவில் சராசரி ஸ்தானத்தை அடைந்துவிடுகிறது.

 

மொழிக்கு முன்னால் ராதாமோகன் எடுத்த பொன்னியின் செல்வன் தோல்விப் படம். அதற்கு முன் இயக்கிய அவருடைய முதல் படமான அழகிய தீயே தரமான ஒரு வெற்றிப் படம். மொழி போன்ற ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்த ராதா மோகனின் அடுத்த படமான அபியும் நானும் ஓர்  அரைவேக்காடு.

 

நீதி -  வெற்றி ராதா மோகனைத் தடுமாற வைக்கிறது.

 

பி.கு - இந்தப் படம் தந்தைக் குலங்களையும் பெண்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா இடத்தில் அவர்கள் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டு மனப்பூர்வமாக குறைகளை மன்னித்து விடுகிறார்கள் அல்லது படத்தைக் குறையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தந்தைக் குலங்களின் சார்பாக பல பதிவர்கள் விமரிசனங்கள் எழுதிவிட்டார்கள். பேச்சுத் தமிழில் சுவாரசியமான பதிவுகள் எழுதும் ப்ரியா கதிரவனிடம் படத்தைப் பற்றி கேட்டேன். அவருடைய சிறு விமரிசனம் -

 

அபியும் நானும் படம் பத்தி நான் எழுதினா, அது ரொம்ப biassed ஆக இருக்கும். காரணம் -

 

1.அப்பாக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்ற படம்.

2.ராதாமோகன்.

3.டூயட் மூவிஸ்.

4. த்ரிஷா.

 

ஆனா அந்த படத்த பத்தி நெனச்சதும் சட் ன்னு எனக்கு  ஞாபகம் வந்த மூணு விஷயங்கள்.

 

1.'மூங்கிலை விட்டு பிரிந்த பிறகு பாட்டுக்கும் மூங்கிலுக்கும் என்ன உறவு' 'மகள் தனியறை புகுந்த போது ஒரு பிரிவிற்கு ஒத்திகை பார்த்தேன்' என்று தன்னால் மட்டும்தான் இப்டி எல்லாம் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளும், 'அம்மா பத்தின பாட்டுன்னா கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் உங்க எல்லார் ஞாபகத்துக்கும் வர்ற மாதிரி, பொண்ணு பத்தின பாட்டுன்னா என் ஞாபகம் வரணும்' ன்னு ஒரு முடிவோட அந்த பாட்டை பாடி இருக்குற மதுபாலகிருஷ்ணன் குரலும். 

 

2. "எனக்கு பிகினி மட்டும் தான் டிசைன் பண்ண தெரியும்னு நெனைக்காதீங்க, இப்டி அழகா அம்சமா டிரஸ் டிசைன் பண்ணுவேனாக்கும்" என்று (பில்லா புகழ்) அனு வர்தன், த்ரிஷாக்கு டிசைன் பண்ணி இருக்கும் costumes.

 

3. "Children grow up, Sometimes parents must too"  என்ற அழகான caption.