எது நடந்துவிடும் என்று நினைத்தேனோ அது அப்படியே நடந்துமுடிந்துவிட்டது. பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிகளுக்காக ஜரூராக திராவிடும் லஷ்மணும் டாக்காவுக்குக் கிளம்பிச் சென்றபோதே என்னிடம் சில கேள்விகள் இருந்தன. இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அடுத்த தலைமுறையைக் கண்டெடுக்க வேண்டிய சரியான நேரமிது. முடியவில்லை என்று தெண்டுல்கர், திராவிட், லஷ்மண் என இந்த மூன்று பேரில் யார் விலகவேண்டிய நிலை வந்தாலும் உடனே அவர்கள் இடத்தை நிரப்ப ஒரு சரியான ஆட்டக்காரர் தேவை. அதற்காக விட்டுச் சென்ற இடங்களை நிரப்பும் வீரர்களை சில ஆட்டங்கள் பழக்கியபிறகே பெரிய ஜாம்பவான்களிடம் மோதவிட வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். எனவே இந்தச் சமயத்தில் பங்களாதேஷ் டெஸ்டில் பத்ரிநாத், கோலி, மிதுன் போன்ற வீரர்களை இறக்கலாமே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். சிட்டகாங் டெஸ்டில் முதல் பந்தை வீசிவிட்டார்கள். இந்திய அணியில் அதே சச்சின், அதே திராவிட், அதே லஷ்மண். சே.
இப்போது தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் திராவிட், யுவ்ராஜ் இல்லை. லஷ்மண் நிலைமையும் 50-50தான். முதல் டெஸ்டிலேயே பத்ரிநாத், விர் விர் என்று வந்து விழும் ஸ்டெய்ன், மார்கல் பந்துகளைச் சமாளித்தாகவேண்டும். விஜய் அணியோடு இரண்டறக் கலந்துவிட்டார். ஆட்டத்தில் நளினம் இருக்கிறது. பயந்து பயந்து ஆடியே இதுவரை எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி இறுதியில் திண்ணையில் ஜம்மென்று துண்டு போட்டுவிட்டார். ஆனால் பத்ரிக்கு இதுதானே முதல் டெஸ்ட். ஒருவேளை தவறான அம்பயர் முடிவால் பத்ரி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? போர்ட் லெவன் பிரசிடெண்ட் அணியைப் பாருங்கள். அதன் அத்தனை பேட்ஸ்மேன்களும் பத்ரியின் தோல்விக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள்.
சென்ற வருடம் பத்ரியின் ஒரு பேட்டியை நியோ
கிரிக்கெட் சேனலில் பார்த்தேன். அதில் கடவுள் நேரில் வந்தால் என்ன கேட்பீர்கள் என்று
தோள்பட்டையெல்லாம் தெரிகிற மாதிரி உடையணிந்து வந்த பெண் கேள்வி கேட்டாள். பத்ரி இதற்கான
பதிலை ஏற்கெனவே தயாராக வைத்திருந்ததுபோல பதிலளித்தார் - கடவுளே, நான் எப்போது டெஸ்ட் டெப்யூ எடுப்பேன்?
ரஞ்சிப் போட்டிகளில் மாடாக உழைத்து தேய்ந்து போனவர் பத்ரி. ஒவ்வொரு சீஸனிலும் மாங்கு மாங்கு என்று ரன் எடுப்பார். பலனே இருக்காது. பல்லைக் கடித்துக்கொண்டு ஆடியவருக்கு 30 வயதை நெருங்கும் சமயத்தில் ரத்தினமான ஒரு வாய்ப்பு. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் விவரமாக அணியில் ஆறு பேட்ஸ்மேன்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனால் தெ. ஆ எதிரான முதல் போட்டியில் பத்ரியும் விஜயும் ஆடுவது உறுதி. இப்போதே சஹாரா லோகோ போட்ட ஷர்ட்டை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
விக்கெட் கீப்பர் சஹா தேர்வில் யாருக்குமே மகிழ்ச்சி இல்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு பங்களார்தேஷூக்கு எதிரான டெஸ்ட்டில் அவர் எடுத்த பூஜ்ஜியத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். அநியாயம். அக்கிரமம். சஹா தேர்வில் உள்ள உண்மை ஒளிந்துகொண்டிருக்கிறது.
விஷயம் என்னவென்றால் ஏற்கெனவே இந்திய அணியில் விஜய், பத்ரி, மிதுன் என்று மூன்று புதியத் தென்னக வீரர்கள். அந்தக் கூட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றால் வடக்கு என்னாவது? இந்தக் கேள்வி ஸ்ரீகாந்த் முன் நிச்சயம் வைக்கப்பட்டிருக்கும். ஸ்ரீகாந்தை லைன் கட்டி கேள்வி கேட்டிருப்பார்கள். ஷோனல் செலக்ஷன் ஒழிக்கப்படாத இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஸ்ரீகாந்த் மட்டும் என்ன, சாட்டையா சுழற்றமுடியும்? கண்ணையும் மனத்தையும் மூடிக்கொண்டு சஹாவுக்கு டிக் செய்துவிட்டார். இது என் அனுமானம்தான் என்றாலும் இந்திய கிரிக்கெட்டில் இதைவிட பயங்கரங்கள் எல்லாம் சாத்தியம் என்பதால் இந்த ஒரு சாதாரண கோரிக்கையும் கேள்வியும் நான்கு சுவற்றுகுள் நிச்சயம் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
சுதீப் தியாகியை விடவும் மிதுன் என்னை அதிகமாகக்
கவர்ந்துவிட்டார். ரஞ்சி இறுதிப் போட்டியில் டெஸ்ட் போட்டியில் மறக்கடிக்கப்பட்ட யார்க்கர்
பந்துகளைக் கொண்டு வரிசையாக விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த முயற்சிக்கே
அவரைக் கண்டு எல்லா ரஞ்சி பேட்ஸ்மேன்களும் பயந்துபோய் விக்கெட்டை மிதுன் கையில் கொடுத்துவிட்டுப்
போனார்கள். பத்ரிநாத் பத்து வருடங்கள் அரும்பாடுபட்டு
இடத்தைப் பிடித்தார் என்றால் மிதுன் ஒரே வருடத்தில் இரும்புக் கதவை உடைத்துத் தள்ளிவிட்டார்.
மிதுனின் டெஸ்ட் டெப்யூவில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் பற்றி அறிந்தவர்களுக்கு ஸ்ரீதரன் ஷரத்தைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இறுதிவரை அவரை இந்தியத் தேர்வுக்குழுவினர் கண்டுகொள்ளவேயில்லை. பொங்கிப் பொங்கியே அவர் விளையாட்டிலிருந்து விலகிச் சென்றார். காரணமே இல்லாமல் சடகோபன் ரமேஷூம் அணியிலிருந்து நீக்கப்பட்டார். முடி கொட்டும் வயதில் ராபின் சிங்குக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தார்கள். இன்றைய தமிழக வீரர்களுக்கு அத்தனை கஷ்டம் இல்லை. எல்லாம்வல்ல ஸ்ரீகாந்த் தாய்போல தனிக்கவனம் செலுத்தி அவர்களை முன்னே தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார். அதைச் சாதகமாக்கிக்கொள்வதில்தான் அவர்களுடைய முழுத் திறமையும் அடங்கியிருக்கிறது.
ஆனாலும் இந்திய அணியில் சிறந்த 11 வீரர்கள்தான் ஆடவேண்டும்; இதில் தமிழ்நாடு, கர்நாடகா என்கிற பேதம் தேவையில்லை என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான்.
ஜனவரி 28, 2010.