கிழக்கு (2008) - சிறந்த 10 புத்தகங்கள்
புத்தகக் கண்காட்சி இன்னும் சிலநாள்களில் ஆரம்பம். என்ன புத்தகம் வாங்கலாம், எது நல்ல புத்தகம் என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தில் 2008-ம் ஆண்டில் வெளியான புத்தகங்களில் சிறந்தவை என்று நான் பரிந்துரைப்பது -
மாயவலை - பா.ராகவன்
குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டாண்டு காலமாக வெளிவந்து வரவேற்பைப் பெற்ற சர்வதேசத் தீவிரவாதிகள் பற்றியத் தொடர், இப்போது நூல் வடிவில்.
இருளர்கள் - குணசேகரன்
இருளர்கள் என்றொரு பழங்குடி இனத்தைப் பற்றிய முக்கியப் பதிவு இந்நூல். சென்ற புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’நான் வித்யா’ போல இதுவும் ஓர் அரிய முயற்சி. விஷய ஞானத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நூல்.
கேண்டீட் - வோல்ட்டேர் - தமிழில் பத்ரி சேஷாத்ரி
உன் கருத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. ஆனால் உன் உரிமையைக் காப்பாற்ற நான் உயிரையும் கொடுப்பேன் என்கிற புகழ்பெற்ற வாசகத்தைச் சொன்ன வோல்ட்டேரின் சரித்திரப் புகழ் வாய்ந்த நூல் இப்போது தமிழில். பொதுவாக மொழி பெயர்ப்புகள் சிலசமயங்களில் நம் மூளையை வெடிக்கச் செய்துவிடும். ஆனால் பத்ரியின் மொழிபெயர்ப்பில் அந்தச் சிக்கல் இல்லை. வாசிப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
ஓ பக்கங்கள் - ஞாநி
தமிழில் மூன்று பேருடைய அரசியல் கட்டுரைகளை மட்டும் தவறாமல் படிப்பேன். ஞாநி, சாரு நிவேதிதா, பத்ரி. வெகுஜனப் பத்திரிகைகளில் பரவலாக வாசிக்கப்பட்ட அரசியல் விமரிசகர் ஞாநி. அவர் 2007-ம் ஆண்டில் எழுதிய கட்டுரைகள் இப்போது கிழக்கு பதிப்பக நூலாக.
ஒபாமா பராக் - ஆர். முத்துக்குமார்
ஒபாமா பற்றிய பேச்சு தொடங்கியவுடனேயே தமிழ் பதிப்புலகம் சுறுசுறுப்பு அடைந்துவிட்டது. பொதுவாக இதுபோன்ற வாழ்க்கைச் சரிதைகளில் எல்லோரும் செய்கிற ஒரு தவறு - சம்பந்தப்பட்ட நபரைப் போற்றிப் புகழ்வது. தெரியாமல் செய்கிற தவறு - சரித்திரத்தைத் தவறவிடுவது. ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் இந்தப் புத்தகத்தில் கிடையாது. ஆர். முத்துக்குமார் என்கிற 30 வயதைத் தொட இருக்கும் ஓர் இளைஞனின் சிறந்த முயற்சியில் உருவான நூல்.
கிறிஸ்தவம்: ஒரு முழுமையான வரலாறு - சேவியர்
கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல். மதத்துக்கு அப்பாற்பட்டு வரலாறாக அணுகவேண்டிய நூல் இது.
பிரபாகரன் : ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி
இன்றைய தேதியில் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின்மீதான கவலையைவிட கிளிநொச்சி, முல்லைத் தீவு பற்றிய செய்திகளில்தான் அதிக அக்கறை. அதிகக் கவலை. பிரபாகரன் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் சரியான, அறிமுகநூல்கூட இல்லாத ஒரு குறையை சென்ற வருடம் மருதன் எழுதிய எல்.டி.டி.இ புத்தகம் தீர்த்து வைத்தது. இந்தப் புத்தகம் பிரபாகரனை இன்னும் நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. அனைத்துத் தமிழர்கள் இல்லத்திலும் இருக்கவேண்டிய புத்தகம்
சுபாஷ் சந்திரா - என். சொக்கன்
ஐசிஎல் வெர்ஸஸ் பிசிசிஐ பரபரப்பினால் அதிகம் பேசப்பட்டவர் சுபாஷ் சந்திரா. ஜீ என்கிற மகா சாம்ராஜ்ஜியத்தின் மூளை. அம்பானி, இன்போசிஸ் மூர்த்தி வாழ்க்கை மட்டுமல்ல, சுபாஷ் சந்திராவின் வாழ்க்கையும் கனவு காண்பவர்களுக்கான கையேடாகும்.
இந்தியப் பிரிவினை - மருதன்
ஆனந்த விகடனில் வெளிவரும் பாஸ்போர்ட் கட்டுரைகள் மூலமாக அதிகக் கவனம் பெற்றிருக்கும் மருதனின் சமீபத்திய நூல். வெகுஜன மக்களிடையே காஸ்டிரோவையும் சேகுவேராவையும் கொண்டுசென்றவர் மருதன். இவர் என்ன எழுதினாலும் அதைப் படிக்கும் கூட்டம் ஒன்று உருவாகி வருகிறது. சுஜாதாவுக்குப் பிறகு நான் அதிகம் எதிர்பார்க்கும் எழுத்தாளர். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். இந்தியப் பிரிவினையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மருதனின் எழுத்து உங்களுக்கு உதவும்.
தோல்விகளைத் துரத்தி அடி -எழில் கிருஷ்ணன்
பொதுவாக சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்க நம்மை யாராவது உற்சாகப்படுத்தவேண்டும். மொழி நடையும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒட்டடை உதாரணங்களும் எனக்கு அட்வைஸே வேண்டாம்டா என்று கதறச் செய்யும். ஆனால் எழில் கிருஷ்ணன் எழுதிய எதிரி என்சைக்ளோபீடியா புத்தகத்தில் இந்தக் குறைகள் இருக்கவில்லை. தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூல்களில் ஒன்று. எழில் கிருஷ்ணனின் அடுத்த உபயோகமான நூலே, தோல்விகளைத் துரத்தி அடி.
****
என் விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருடம் நான் கிழக்கில் மூன்று நூல்களும் ஐந்து நூல்கள் பிராடிஜி பதிப்பிலும் எழுதியுள்ளேன். அதுபற்றிய சில குறிப்புகள்.
சிவாஜி - பிரம்மாண்டத்தின் பின்னால்
சிவாஜி திரைப்படத்தின் கலை நுணுக்கங்களை விவரிக்கும் இந்நூலின் ஆசிரியர் கலை இயக்குநர் தோட்டாதரணி. அவருடைய எண்ணங்களை நான் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறேன். சிவாஜி படத்தில் பிரமிக்கப்பட்ட அரங்குகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டன, அதன் பின்னால் உள்ள உழைப்பு என்னென்ன என்பதை விரிவாகச் சொல்லும் இந்நூல் தமிழில் மேற்கொள்ளப்பட்ட அரிதான முயற்சிகளில் ஒன்று.
ப்ரூஸ் லீ - இறக்காதவன்
நான் எழுதிய ஜாக்கி சானின் வாழ்க்கை வரலாற்று நூல் கருணாநிதிவரை சென்றது மகிழ்ச்சியே. ஜாக்கி சானின் மானசீகக் குருவான ப்ரூஸ் லீயின் வாழ்க்கை இதுவரை தமிழில் பதிவு செய்யப்படவில்லை. உலகின் முதல் சிக்ஸ் பேக் அப்ஸ் நடிகர். அழியாப் புகழ் கொண்ட நாயகனின் சரித்திர வாழ்க்கையை தமிழ் வாசகர்களிடையே பகிர்ந்துகொள்வதில் பெரும் உவகை அடைகிறேன்
அப்துல் கலாம் - ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை
அப்துல் கலாமே சுயசரிதை எழுதி முடித்தபின் இன்னொரு நூல் எழுதவேண்டிய அவசியம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் இந்த நூலிலேயே உள்ளது.
****
இதுதவிர பிராடிஜியில் ப்ரூஸ் லீயும், ஜாக்கி சானும் சிறு நூல்களாக வெளிவந்துள்ளார்கள். கல்கியில் பணிபுரிந்தபோது +2 ஸ்டேட் டாப்பர்களைச் சந்தித்து நான் எடுத்த பேட்டிகள் ’மேஜிக் ஆணி’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு நீங்கள் வழங்கும் சிறந்த பரிசு நூலாகவே இது இருக்கும்.
உலகம் பார்த்த மிகச்சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவர் சாணக்கியர். அவரைப் பற்றிய முக்கியப் பதிவாக ’சாணக்கியர்’ நூல் அமைந்துள்ளது.
கிழக்கு பதிப்பகத்தில் வெளியிடப்படும் பெரும்பாலான நூல்கள் தமிழின் முதல் முயற்சியாகவே மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆனால் உலக அளவில் சாதனை புரிந்த தமிழனான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு இதுநாள் வரை எந்த மொழியிலும் எழுதப்படவில்லை. முதல்தடவையாக தமிழில் பிராடிஜி பதிப்பில் வெளிவந்துள்ள ’செஸ்வநாதன் ஆனந்த்’ நூல், செஸ் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் ஆனந்தின் வெற்றியில் அக்கறை கொள்ளும் அத்தனை பேரும் படிக்கவேண்டிய ஒன்று.