நான் ஒரு கத்துக்குட்டி - மிஷ்கின்
தமிழில் சினிமா புத்தகங்கள் என்றால் அது வாழ்க்கை வரலாறுகள்தான். சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி, எஸ்.ராமகிருஷ்ணனின் பதேர் பாஞ்சாலி பற்றிய பதிவு, செழியனின் உலக சினிமா, சாரு நிவேதிதாவின் அலைந்து திரிபவனின் அழகியல் மற்றும் தியோடர் பாஸ்கரின் சில ஆய்வு நூல்கள் என்று மிகக்குறைவாகவே வித்தியாசமான சினிமா புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முக்கியப் படங்கள் குறித்த திரைக்கதை நூல்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன. புத்தகக் கண்காட்சியில் எங்கு பார்த்தாலும் ஆசை, அழகி, பாரதி கண்ணம்மா திரைக்கதை புத்தகங்கள் தென்படுவதைக் காணலாம். படத்தின் வசனங்களையும் காட்சிகளையும் புகைப்படங்களையும் பிணைத்தால் திரைக்கதைப் புத்தகம் தயார். இவை சராசரி வாசகனுக்காகத் தயாரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க சினிமாக்காரர்களைக் குறி வைத்து பதிப்பிக்கப்படும் புத்தகங்கள் இவை.
என் பங்கும் இதில் உண்டு. பாலச்சநதரின் 'சிந்து பைரவி' திரைக்கதை நூல் நானும் நண்பன் முகிலும் சேர்ந்து எழுதியது. சொல்லப்போனால் துப்பாக்கி மொழி மற்றும் இருவரின் தனிப் புத்தகங்களுக்கு முன்னால் நாங்கள் எழுதிப் பார்த்து எங்களைப் பரிசோதித்துக் கொண்டது இந்தப் புத்தகத்தில்தான். தமிழில் உள்ள அத்தனைத் திரைக்கதைப் புத்தகங்களையும் ஒருமுறை புரட்டிப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். இதுவரை தமிழில் எழுதப்பட்ட திரைக்கதை நூல்களிலேயே சிறந்தது, சிந்து பைரவி திரைக்கதை நூல்தான். ஒவ்வொரு வரியிலும் படத்தின் காட்சி கண்முன்னால் விரியும்.
'சிவாஜி' படத்தின் கலை இயக்கம் குறித்த தோட்டாதரணியின் புத்தகம் விரைவில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. அதற்குமுன் கிழக்கிலிருந்து வெளியான 'சித்திரம் பேசுதடி'யின் திரைக்கதை வடிவம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் புத்தகத் தயாரிப்புக்காக இயக்குநர் மிஷ்கின் முதல்முதலில் கிழக்கு பதிப்பகத்துக்கு வந்திருந்தார். கூடவே நான்கைந்து உதவியாளர்களும். விக்ரம்போல அதிரடியாக எடை குறைக்க மிஷ்கின் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பது நன்கு தெரிந்தது. தமிழ் சினிமா கதாநாயகனுக்குரிய அடையாளமாக சிகை வடிவத்தை மறைக்க தொப்பி அணிந்திருந்தார். 'நந்தலாலா' படத்தில் அவர் நடிப்பது அப்போது முடிவாகியிருக்கவேண்டும்.
புத்தகத்தின் லே அவுட் குறித்து பேசும்போது ஃபாண்ட், அலைன்மெண்ட் பற்றி சகஜமாகப் பேசினார். மிஷ்கினுக்குப் புத்தக வடிவமைப்பில் அனுபவம் உண்டு. சினிமாவில் வருவதற்கு முன்பு மிஷ்கின் லேண்ட்மார்க்கில் பணியாற்றியவர்.
இந்தப் புத்தக வேலைக்காக நான் அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. மிஷ்கினின் அலுவலகத்தில் எப்போதும் ஒரு சிறுவன் அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்ததைக் கண்டு, ’மிஷ்கின் பையனா’ என்று உதவியாளரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே, 'நந்தலாலா படத்தின் ஹீரோ' என்று சொன்னார். பாதுகாப்பான இடத்தில் சென்று அமர்ந்தேன். பலமுறை அங்கு சென்றும் ஸ்நிக்தாவை ஒருமுறைக் கூட காண முடியவில்லை.
தமிழ்சினிமாவில் மிஷ்கினைப் போல ஒரு மனிதரைக் காண்பது அரிது. வழக்கமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் இருக்கைக்குப் பின்னால் உள்ள ஷெல்பில் புத்தகங்களை அடுக்கி வைப்பார்கள். ஆனால் மிஷ்கினின் மேஜையில் குறைந்தது நூறு புத்தகங்களாவது இருந்தன. அத்தனையும் ஆங்கிலப் புத்தகங்கள். புத்தகங்களின் இடைவெளியில்தான் மிஷ்கினின் முகம் தெரிந்தது. இதன் நீட்சியாக அவர் தன் புத்தகத்தை திரைக்கதை மேதைகளுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.
அவருடைய அறையில் கண்களைச் சுழலவிட்டபோது சுவற்றில் ஒரு தாள் ஒட்டப்பட்டிருந்தது. 2 மாதங்களில் இருபது கிலோ எடை குறைப்பது எப்படி என்று தலைப்பிட்டு கீழே ஒவ்வொரு மணி நேரத்துக்கும் உட்கொள்ளவேண்டிய உணவுப் பட்டியல் இருந்தது. சூப்பும் பழங்களுமாகச் சாப்பிடச் சொல்லி அது பரிந்துரை செய்திருந்தது. அவருடைய அறையில் எனக்குப் பெயர் தெரியாத ஒரு பயிற்சிக் கருவி ஒன்றும் இருந்தது. அசோகமித்திரனின் சினிமா கதைகள் என் ஞாபகத்துக்கு வந்தன.
'அஞ்சாதே', மிஷ்கினை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அந்தத் தைரியத்தில் நந்தலாலா என்றொரு சீரிய சினிமாவுக்கு முயன்று கொண்டிருக்கிறார். இது கிகுஜூரோ என்கிற ஜப்பானியப் படத்தின் காப்பி என்கிற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டுப் படங்களைக் காப்பியடிக்காத இயக்குநர் தமிழ் சினிமாவில் இன்னும் பிறக்கவில்லை. இப்போது தமிழ் சினிமாவில் பழைய படங்களைக் காப்பி அடிப்பதுதான் ஃபேஷன். ’சுப்ரமணியபுர’த்தில் ஸ்வாதி அறிமுகமாகிற காட்சி அப்படியே ’இதயத்தைத் திருடாதே’ படத்தில் இருக்கிறது. ’குஷி’ படத்தில் வருகிற அந்த இடுப்புக் காட்சி. மிகமோசமாக ’மகேஷ். சரண்யா மற்றும் பலர்’ படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட் படங்களையெல்லாம் விட்டுவிட்டு கிகுஜூரோவைக் காப்பி அடித்து தமிழ் படம் எடுக்கிற ஓர் இயக்குநரை ஆண்மை கொண்டவராகவே நான் பார்க்கிறேன். தமிழ் சினிமா கிகுஜூரோவோடு நின்றுவிடக்கூடாது. சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி வே ஹோம், தி சர்க்கிள், கெள என்று அத்தனை அர்த்தமுள்ள படங்களையும் நகல் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பேரரசு படங்கள்தான் நமக்கென்று விதிக்கப்பட்ட திரைப்படங்களாகிவிடும். பரவாயில்லையா? நந்தலாலா வரட்டும். அப்போது நிறைய பேசுகிறேன்.
'சித்திரம் பேசுதடி' திரைக்கதை நூல் தொடர்பாக மிஷ்கின் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இன்றுவரை அந்தப் பேட்டிக்காகவே அந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறேன்.
’ஒரு ரெளடி கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அதைக்கொண்டு ஒரு கமர்ஷியல் படம் பண்ணவேண்டும் என்பதல்ல என் நோக்கம். ஆனால் வெற்றி ஃபார்முலாவைக் கொண்டு ஒரு படம் பண்ணவேண்டும் என்று நினைத்தது உண்மை. அதை நான் வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.
தமிழ்சினிமாவின் சாபக்கேடாக, கதை சொல்லப் போனால் யார் ஹீரோயின் என்றுதான் முதலில் கேட்கிறார்கள். எனில், நான் என் கதையில் காதல் காட்சிகள் இருந்தாகவேண்டும். காதல் காட்சிகள் இருந்தால் அதற்கேற்றாற்போல ஐந்து பாடல்கள் இருக்கவேண்டும். ஐந்து பாடல்கள் என்றால் அதற்காக ஐந்து லீட் சீன்களைப் புகுத்தியாக வேண்டும். இதற்காக நாற்பது நிமிடம் கதையில்லாமல் படத்தை நகர்த்தியாகவேண்டும். இதைமீறி காம்ப்ரமைஸ் செய்தும் செய்யாமலும் பலவிதமான போராட்டங்களுக்கு இடையேதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.
மற்றபடி தமிழ்சினிமாவின் ரெகுலர் ஃபார்முலாக்களை நான் பின்பற்றவில்லை. அப்படி செய்திருந்தால் படம் தோற்றுப் போயிருக்கும். தமிழ்சினிமா சூத்திரங்களை நான் பின்பற்றியிருந்தால் அப்பா கதாபாத்திரம் விலைமாதுவிடம் செல்கிறாள் என்று கதை பண்ணமாட்டேன்.
கடந்த இரண்டரை வருடங்களில் நான் நான்கு தமிழ்ப் படங்கள் பார்த்திருந்தால் அதிகம். 'அஞ்சாதே'வில்கூட தமிழ்சினிமாவின் பாதிப்பு எங்கும் இருக்காது. சிலபேர் ஆங்கிலப் படங்களின் தாக்கம் அதில் இருந்தது என்றார்கள். இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால், நான் ஆங்கிலப் படங்களையும் பார்ப்பது கிடையாது. நிறையப் படங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். பார்க்கத்தான் நேரம் இல்லை.
என் வாழ்க்கையில் அதிகபட்சமாக ஆறு முக்கியமான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். இந்த குறுகிய அனுபவத்தை வைத்து நான் என்ன கதை எழுதமுடியும்? ஒரு புத்தகம் படிக்கும்போது எழுத்தாளனின் வாழ்க்கையை நான் படிக்கிறேன். தாஸ்தாவெஸ்கியின் ‘கிரைம் அண்ட் பனிஸ்மெண்ட்’ அல்லது அவருடைய வேறு புத்தகங்களைப் படிக்கும்போது நான் தாஸ்தாவெஸ்கியையே முழுவதுமாகப் படிக்கிறேன். ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அறிந்து கொள்கிறேன். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் படிக்கும்போது அவருடைய மொத்த வாழ்க்கையும் எனக்குத் தெரிகிறது. நூறு புத்தகங்களைப் படிக்கும்போது நூறு நாடுகளுக்கு நான் செல்கிறேன், நூறு மனிதர்களைச் சந்திக்கிறேன். எழுத்தாளனின் ரகசியங்கள் முதல் எல்லாமே எனக்குத் தெரிகிறது.
எழுத்தாளன் என்பதால் நான் கட்டாயம் படித்தாக வேண்டும். நான் 15,000 தாள்கள் எழுதி அதை 250 தாள்களாக மாற்றுகிறேன். இதற்காக குறைந்தது நான் 15 லட்சம் தாள்களாவது படித்தாகவேண்டும் இல்லையா! பிறகுதான் எழுதமுடியும். தண்ணீர் இருந்தால்தானே நான் நீச்சல் அடிக்கமுடியும். என்னுடைய தண்ணீர் என்பது எனக்குப் புத்தகங்கள்தான்.
ஓர் அழகியலுக்காகத்தான் 'வாளமீனுக்கும்' பாட்டை எடுத்தேன். அந்தப் பாடலுக்கு மாளவிகா ஆடும்போது எந்தவொரு பாலியல் தூண்டுதலையும் உருவாக்கக்கூடிய நடன அசைவுகள் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். உலகநாதனால் நடனமாட முடியாது. ஆகவே, நீங்கள் பாடினால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டேன்.
சித்திரம் பேசுதடி அஸிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கானத் தகுதியான திரைக்கதை. இது உதிரிப்பூக்கள், பதேர் பாஞ்சாலி வரிசையில் நிற்கிற படம் கிடையாது. திரைக்கதை என்பது என் பரிணாம வளர்ச்சியாகும். சில விஷயங்கள் எழுதத் தெரியவில்லை. சில விஷயங்களை விஷுவலாக மாற்றத் தெரியவில்லை. நிச்சயம் இது தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடக்கூடிய திரைக்கதை கிடையாது.
உங்களுக்கென்று தனி ஸ்டைல் தெரிகிறது என்கிறார்கள். இருபது படம் பண்ணினால் மட்டுமே ஸ்டைல் என்பது வெளிப்படும். இப்போது கத்துக்குட்டி போல சில விஷயங்களை செய்துவருகிறேன். அதை ஸ்டைல் என்று எப்படி ஏற்றுக்கொள்வது? நான் இன்னமும் படமே பண்ண ஆரம்பிக்கவில்லை.'