ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
உலகின் முதல் சிக்ஸ் பேக் நடிகர்

நான் எழுதி இந்தப் புத்தகக் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் 'ப்ரூஸ் லீ - இறக்காதவன்' புத்தகத்திலிருந்து சில பகுதிகள் :

 

நவ தமிழ்சினிமாவில் சிக்ஸ் பேக் என்பது ஃபேஷனாக இருக்கிறது. நடிகர்களுக்கான அடிப்படை உடல்தகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் உலக சினிமாவிலேயே சிக்ஸ் பேக் அப்ஸ் அம்சம் கொண்ட முதல் நடிகராகத் தகுதி பெற்றவர் ப்ரூஸ் லீ. நடிகர்கள் என்றால் முகம் மட்டுமே வசீகரமாக இருக்கவேண்டும் என்கிற கூற்றை உடைத்து தன் உடலையே முகமாகப் பாவித்தவர் லீ.

 

அந்தக் காலத்தில் வெளிவந்த புகழ்பெற்ற பாடிபில்டிங் பத்திரிகைகளின் முக்கிய மாடலாக  இருந்தார் ப்ரூஸ் லீ.  லீயின் வெறும்உடல் புகைப்படத்தை அட்டையில் இடம்பெறச் செய்தால் மக்கள்  ஆர்வமாகவும் நம்பிக்கையோடும் தங்களுடைய பத்திரிகைகளை வாங்குவார்கள் என்று அப்போது இருந்த எல்லா  பத்திரிகைகளும் எண்ணின.

 

சுண்டைக்காய்  போல தேகம் கொண்ட லீயால் எப்படி சிக்ஸ் பேக் அப்ஸ் மனிதனாக மாறமுடிந்தது?

 

சிறுவயதில் ஒருமுறை தன் சக மாணவனோடு வழக்கம்போல சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நீ ஒரு  சோதா, ஆளைப் பாரு. வத்தத்தலும் தொத்தலுமா என்று லீயைப் அவன் பரிகாசம் செய்திருக்கிறான். அடிவாங்கியதுகூட லீயைப் பாதிக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவரை அதிகமாகக் காயப்படுத்தின. உடலை மையமாக வைத்து செய்த விமரிசனமே லீயை உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்லவைத்தது. 

 

தன்னுடைய சிக்ஸ் பேக் அப்ஸ் ரகசியங்கள் என்று ப்ரூஸ் லீ கூறுவது -

  

பாக்கெட் உணவுகளைத் தவிர்

 

உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அது ஒருபோதும் நம் உடலை நோகடிக்கக்கூடாது. இதைக் கட்டாய அறிவுரையாகத் என் மாணவர்களுக்குக் கூறுவேன். நாக்கு என்பது நம் உடலில் உள்ள சிறிய பாகம்தான். ஆனால் அதற்கு அடிமையாகிப் போனால் அது நம் மொத்த உடலையும் பாதிக்கும். ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா வந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியானது அமெரிக்கர்களின் உணவுபழக்க வழக்கங்களைப் பார்த்துதான். நான் பார்த்த அமெரிக்க நண்பர்கள் எல்லோரும் ஜங்க் ஃபுட் எனப்படும் எண்ணெய் உணவுகளின்மீது  அலாதி பிரியம் கொண்டவர்களாக இருந்தார்கள். சப்புக்கொட்டிக்கொண்டு எண்ணெய் ஆகாரங்களைச்  சாப்பிடுவதைப் பார்த்து அரண்டுபோய் அவர்கள் தொடும் உணவை ஒருபோதும் நான் தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

 

மனிதன் தன் உடலை ஓவியமாக மாற்றுவதற்கு அடிப்படைத் தேவை - உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கிய  உணவு. அசாத்தியாமான உடற்பயிற்சியாலும் உணவுக்கட்டுப்பாட்டாலும் தன்னுடைய உடலில் கொளுப்பின்  சதவிகதத்தை பூஜ்ஜியத்துக்குக் கொண்டுவரலாம். நான் அப்படித்தான் என் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் இதைச் சாதித்தேன்.

 

பிஸ்கெட்டுகள்,  கேக்குகளைக்கூட நான் தொடமாட்டேன். இவற்றை எம்ட்டி கலோரிஸ் என்று குறிப்பிடலாம். அதாவது அதிக  கலோரிகள் இருக்கும். அதேசமயம் சத்துகள் ஒன்றுமே இவற்றில் இருக்காது. இதற்குப் பதிலாக இளநீர் அருந்துங்கள். அதில் நிறைய கலோரியும் சத்தும் இருக்கும்.

 

என்னுடைய உணவுமுறை என்பது புத்தமத உணவு கொள்கையை ஒட்டியதாகும். சத்தான உணவுபொருள்களை மட்டுமே உடலுக்குள் செலுத்தவேண்டும். கொழுப்பான உணவுகளை  உட்கொள்வதால் அது நம் சீரான சுவாசத்தைத் தடை செய்கிறது. அது உடலை செயலிழக்கச் செய்துவிடும்.  உங்களுடைய உடலின் அளவுக்கு ஏற்றாற்போல சரியான, முறையான உணவை மேற்கொள்ளவேண்டும்.

 

பால் தேவையா?

 

நான் பாலை நுகரக்கூட மாட்டேன். காபி குடிக்கமாட்டேன். ஆனால் பால் கலக்காத டீயைப் பருகுவேன். பாலில் தயாராகும் எந்தப் பொருளையும் தொடமாட்டேன். எந்த மிருகமும் இன்னொரு மிருகத்தின் பாலைக் குடிப்பதில்லை. எனில் நாம் மட்டும் ஏன் அதுபோல செய்யவேண்டும்?

 

எத்தனை முறை?

 

என்ன சாப்பிடுகிறோம்  என்பதைவிட எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது அதைவிட முக்கியம். மூன்று வேளையும் மூக்கு  முட்ட சாப்பிடுவது சரியானது கிடையாது. என் தேகத்தைப் பார்த்து நிறைய பேருக்கு என் உணவுப் பழக்கத்தின்மீது ஐயம் கொள்வார்கள். நான் என்ன செய்வேன் தெரியுமா? கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடிச்  சாப்பிடுவேன். மீதி நேரங்களில் என்னிடம் எப்போதும் பழங்கள் இருக்கும். நான்கு மணி  நேரத்துக்கு ஒருமுறை உடலுக்குத் தேவையான சத்து உணவுகள்  உள்ளே  சென்று கொண்டிருக்கவேண்டும்.

 

ப்ரூஸ் லீயின் உணவு பழக்கவழக்கங்கள் 

 

காலை உணவு -

 

உலர்ந்த பழங்கள், முந்திரி பருப்புகள்,  ஆரஞ்சு பழம், தேநீர்

 

11 மணிக்கு -

 

பழங்கள் - ப்ரோட்டீன் ட்ரிங், பவுடர் மில்க், முட்டை, பழங்கள்.

 

மதிய உணவு - 

 

இறைச்சி, காய்கறிகள் மற்றும் சாதம், தேநீர்

 

5 மணிக்கு - 

 

பழங்கள் - ப்ரோட்டீன் ட்ரிங்

 

இரவு உணவு -

 

சாலட், ஒரு கிண்ணம் சாப்பாடு, காய்கறிகள், சிக்கன் அல்லது கடல்வாழ் உயிரினம், ஒரு கோப்பை தேநீர்

 

ப்ரோட்டின் ட்ரிங்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்துவார். அதென்ன ப்ரோட்டின் ட்ரிங்? பவுடர் மில்க், முட்டை,  முட்டை ஓடுகள், வாழைப்பழம், தாவர எண்ணெய், சாக்லேட், ஐஸ்க்ரீம் எல்லாம் கலந்தடித்து உருவாக்கப்பட்ட  உணவாகும்.

 

இவைதான் லீயின் உணவுப் பழக்க வழக்கம். 

 

இந்த உணவுமுறைகள் எல்லாம் லீக்கு என்ன சாதித்துக் கொடுத்தன?

 

தன் இறுதிநாள்வரை லீயின் இடுப்பளவு 26 இஞ்சிலிருந்து 28  இஞ்சுக்கு மேல் சென்றது கிடையாது. அதேபோல தன் உடலில் கொழுப்புத் தன்மை என்பதையே அவர் ரத்து செய்திருந்தார். 

 

 ப்ரூஸ் லீ, இறக்காதவன் - ச.ந. கண்ணன் - விலை ரூ 75.