தமிழில் ஒரு பொக்கிஷம்
அப்துல் கலாம் புத்தகத்துக்காக நான் கிழக்கில் வெளியான விண்வெளி புத்தகத்தைப் படிக்க முற்பட்டபோது நான் அடைந்த ஆச்சரியங்களுக்கு அளவேயில்லை. என் வாழ்க்கையில் தமிழில் இப்படியொரு அறிவியல் புத்தகத்தைப் படிப்பேன் என்று எண்ணிப் பார்த்ததுகூட கிடையாது. இந்த பிரமிப்பில்தான் அதை என் கிழக்கின் டாப் 10 புத்தப்பட்டியலில்கூட சேர்க்கவில்லை போலிருக்கிறது. மன்னிக்கவும். 2008 என்றில்லை. கிழக்கில் இதுவரை வெளியாகியுள்ள சிறந்த புத்தகங்கள் பட்டியலிலும் இடம்பெறவேண்டிய நூல்தான், ராமதுரை எழுதிய ’விண்வெளி’ புத்தகம். இதை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
அறிவியல் புத்தகங்களில் இரண்டு குழப்பங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையை அப்படியே தமிழ்ப்படுத்தும்போது நமக்குத் தடங்கல் ஏற்பட்டுவிடும். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு டிவியை ஆன் செய்துவிடுவோம். இன்னொன்று, மொழி. நல்ல மொழியில் எழுதுவது என்பது கோடி பேரில் ஐந்து பேருக்குச் சாத்தியமானால் அதிகம். அந்த ஐந்து பேரில் ஒருவராக இருக்கிறார் ராமதுரை. விண்வெளியின் ரகசியங்கள், விண்கலங்கள் பற்றிய விவரங்கள், ஏவுகணை தொழில்நுட்பம் வளர்ந்த கதை என்று அவர் வானவியலை இருநூறு பக்கங்களுக்குள் அழகாக அடக்கியிருக்கிறார். இதில் வரலாறும் உண்டு. தகவல்களும் உண்டு. சுவாரசியமும் உண்டு.
ஆறுமாதத்துக்கு ஒருமுறை ஸ்ரீஹரிகோட்டாவில் விண்கலம் ஏவுவது பற்றிய செய்திகள் வரும்போதும் நமக்குத் தலையும் புரியாது; வாலும் புரியாது. ஏதோ இந்தியா விண்வெளித் துறையில் சாதித்திருக்கிறது என்று மட்டும் குத்துமதிப்பாகப் புரியும். விண்வெளி புத்தகத்தைப் படித்துமுடித்தவுடன் இனி யாரிடம் வேண்டுமானாலும் விண்வெளி, ஏவுகணை, விண்கலம் பற்றி விவாதிக்கமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் பொது அறிவில் ஆர்வம் செலுத்தும் அத்தனை பேர் இல்லங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் இது.
ஹாட்ஸ் ஆஃப் டூ ராமதுரை.
விண்வெளி நூலில் இருந்து சில பகுதிகள் -
பூமியை ஒரு விண் கப்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் நிறைய இடவசதி. மூன்று விண்வெளி வீரர்கள் அதில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முதல் அறையிலிருந்து அடுத்த அறைக்குப் போக விரும்புகிறார். அடுத்த நிமிடம் அவர் அந்தரத்தில் பறந்தபடி அடுத்த அறைக்குள் பிரவேசிக்கிறார். அங்கு சுவர்ப்பக்கம் சென்று தொங்கியபடி ஏதோ வேலையைச் செய்கிறார். கூரையை நோக்கிப் பாய்கிறார். அங்கு ஏதோ செய்து விட்டு ¬முதல் அறைக்குத் தலைகீழாக வருகிறார்.
முதல் அறையில் இருக்கிற இரு வீரர்கள் தலைகீழாக இருப்பது போல அவருக்குத் தோன்றுகிறது. அவர்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகள்கூட தலைகீழாக இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. உண்மையில் இவர்தான் தலைகீழாக இருக்கிறார். பக்கத்து அறையிலிருந்து அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி தான் வருகிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார். எது தரை, எது கூரை என்று நிதானித்துப் புரிந்து கொள்ள அவருக்குச் சற்று நேரம் ஆகிறது. அவரது கையில் உள்ள ஸ்பானர் பிடி நழுவுகிறது. அது கீழே விழுவதில்லை. அந்தரத்தில் அப்படியே நிற்கிறது.
இப்படிப்பட்ட நிலைமைக்கு விண்வெளியில் உள்ள எடையற்ற நிலைதான் காரணம். விண்வெளியில் பூமியின் ஈர்ப்பு சக்தி செயல்படுவதில்லை. பூமியில் உங்களால் நீண்ட நேரம் தலைகீழாக நிற்க இயலாது. யோகாசனம் பயின்றவராக இருந்தால் கணிசமான நேரம் தலைகீழாக நிற்க முடியும். பூமியில் நமக்குத் தரை எது, கூரை எது என்று குழப்பம் ஏற்பட வழியில்லை. வீட்டில் ஓர் அறையிலிருந்து மற்ற அறைக்கு நாம் நடந்து செல்லலாம். தவழ்ந்து செல்லலாம். உருண்டும் செல்லலாம், ஆனால் அந்தரத்தில் மிதந்தபடிச் செல்லமுடியாது. அடுத்த அறைக்குச் செல்லும்போது படி தடுக்கினால் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்வோம். கையிலிருந்து பொருள்கள் நழுவினால் கீழே விழும்; உயரே போகாது.
பூமியில் காகிதத்துணுக்கு, பறவையின் இறகு, இலவம் பஞ்சுத் துணுக்கு போன்றவை வேண்டுமானால் காற்றில் மிதக்கலாம். அவைகூட மிதந்து மிதந்து கடைசியில் தரையில் வந்து விழுந்துவிடும். மற்றபடி சின்னஞ்சிறு ஸ்குரு, ஆணி போன்ற பொருள்கள்கூட கீழேதான் விழுமே தவிர மிதக்காது. பூமியின் ஈர்ப்பு சக்தி, எல்லாப் பொருள்களின் மீதும் விளைவை உண்டாக்குகிறது. ஏணிப்படியில் ஏறும்போது கால் தவறினால் கீழே தரையில் விழுகிறோம். மேஜை ஓரமாகச் சரியாக வைக்கப்படாத டம்ளர் தரையில் விழுகிறது. பூமியின் ஈர்ப்பு சக்தி, எல்லாப் பொருள்களையும் பூமியின் மையத்தை நோக்கி இழுக்கும் வகையில் செயல்படுகிறது.
ஈர்ப்பு சக்தியின் விளைவாகத்தான் நாம் எடையை உணருகிறோம். முதுகில் சுமந்து செல்லும் சிமெண்ட் மூட்டை ஈர்ப்பு சக்தியின் விளைவாகக் கீழ் நோக்கி இழுக்கப்படுகிறது. எனவே அது முதுகை அழுத்துகிறது. சுமப்பவர் அந்த மூட்டையின் எடையை உணருகிறார். ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் எடை இல்லை. ஈர்ப்பு சக்தியற்ற நிலையில் உங்களால் அரிசி மூட்டையை விரல் நுனியில் நிறுத்திவைக்க முடியும்.
எடையற்ற நிலை என்பது விண்வெளியில் உள்ள ஓர் அபூர்வ அம்சமாகும். பூமியில் செயற்கையாகக் கூட அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்த முடியாது. எனவே விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் உள்ள நிலைமைகளை சமாளிப்பதற்குப் பயிற்சி அளிக்கும் போது, எடையற்ற நிலையை உண்டாக்கி அதில் பயிற்சி அளிக்க முடிவதில்லை. மிஞ்சிப்போனால் விண்வெளி வீரர்களை ஓரிரு கணங்கள் எடையற்ற நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும். அவ்வளவுதான்.
விண்வெளி வீரர்கள் விண்கப்பலில் ஏறி உயரே சென்றபிறகுதான் எடையற்ற நிலைமைக்கு பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எடையற்ற நிலை மனிதனுக்குத் தீங்கை உண்டாக்குமோ என ஆரம்ப நாள்களில் இருந்து வந்த அச்சம் காரணமாகவே முதலில் நாய், குரங்கு முதலியவற்றை விண்கப்பலில் வைத்து அனுப்பிப் பரிசோதித்தார்கள். அதன் பிறகே ரஷ்யாவும் சரி, அமெரிக்காவும் சரி, விண்வெளிக்குத் தங்களுடைய வீரர்களை அனுப்பி வைத்தன.
ரஷ்யாவின் இரண்டாவது விண்வெளி வீரர் ஜி. டிட்டோவ், 1961 ஆகஸ்டில் வொஸ்டோக்-2 விண் கப்பலில் வைத்து அனுப்பப்பட்டபோது அவருக்கு வயிற்றுக் குமட்டல் ஏற்பட்டது. விண்கப்பலில் எது எங்கு இருக்கிறது என்று நிதானித்து அறிவதில் சங்கடம் ஏற்பட்டது. தம்முன்னே இருந்த கருவி இடம் பெயர்ந்து, தலைக்குமேல் பறப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. எனினும் டிட்டோவ் நல்லபடியாகக் கீழே வந்து சேர்ந்தார்.
அதற்குப் பிறகு, அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கப்பல்களைப் பல தடவை பறக்கவிட்டன. விண்வெளியில் வீரர்கள் தங்கியிருந்த நேரம் அடுத்தடுத்த பயணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரர் ககாரின் 108 நிமிடம் (1 மணி, 48 நிமிடம்) தங்கினார். டிட்டோவ் 25 மணிநேரம் தங்கினார். மூன்றாவதாகச் சென்ற நிகோலாயெவ் 94 மணிநேரம் தங்கினார். அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் கிளென் சுமார் 5 மணி நேரம் தங்கினார். மூன்றாவது அமெரிக்க வீரர் ஷிர்ரா சுமார் 9 மணி நேரம் தங்கினார். அடுத்து கூப்பர் 34 மணிநேரம் தங்கினார்.
விண்வெளியில் பெரும் ஆபத்து எதுவுமில்லாமல், பல நாள்கள் தங்கியிருக்க முடியும் என விஞ்ஞானிகள் இதற்குள்ளாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
****
இரண்டாம் உலகப்போருக்குச் சில ஆண்டுகளுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் சோவியத் ரஷ்யாவும், முதலாளித்துவ அமெரிக்காவும் இரு பெரும் வல்லரசு நாடுகளாக இருந்தன. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யாவைப் பற்றிய கருத்து வேறு விதமாக இருந்தது. விஞ்ஞானத் தொழில்நுட்பத்துறையில் அவ்வளவாக முன்னேற்றத்தைப் பெற்றிராத நாடு என்பதே ரஷ்யாவைப் பற்றிய கருத்தாக இருந்தது. அதே நேரத்தில் விஞ்ஞானத் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு எப்போதுமே பெயர் பெற்று விளங்கிய அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் தலைவன் என்ற நிலைக்குப் படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இருந்த நிலைமைகள் இதற்கு உதவின.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்ற காரணத்தால் அது விரைவில் போர் விளைவுகளிலிருந்து மீண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் உதவுகிற நிலையைப் பெற்றது. அதே நேரத்தில் இப்போரில் கடும் பாதிப்புக்குள்ளாகி ஒன்றன் பின் ஒன்றாகத் தனது காலனி நாடுகளை இழக்க ஆரம்பித்திருந்த பிரிட்டன், உலகில் தனது ¬முந்தைய மேலோங்கிய நிலையை இழக்க ஆரம்பித்தது. பிரான்ஸின் நிலையும் இதேபோலத்தான் இருந்தது.
போரில் தோற்ற ஹிட்லரின் ஜெர்மனி, போருக்குப் பிறகு இரண்டு பகுதிகளாகக் கூறு போடப்பட்டுப் பிரிந்து கிடந்தது. உலகில் அணு குண்டுகள் வீசப்பட்ட ஒரே நாடான ஜப்பான் போரின் ¬முடிவில் துவண்டு கிடந்தது. இப்படிப்பட்ட நிலைமையில் உலகில் அமெரிக்கா முதன்மை நிலையைப் பெற்றதில் வியப்பில்லை.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போது வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்காவைப் பின்பற்றி ரஷ்யாவும் அணுகுண்டையும் பிறகு ஹைட்ரஜன் குண்டையும் தயாரிப்பதில் வெற்றி கண்டது. ஹைட்ரஜன் குண்டு, ராக்கெட்டுகளுக்குப் புதிய ¬முக்கியத்துவத்தை அளித்தது. ஜெர்மன் வி-2 ராக்கெட் வெறும் ஒற்றை அடுக்கு ராக்கெட். அது சில நூறு கிலோமீட்டர்தான் பறந்து செல்லும் திறன் கொண்டது. சில ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் திறன் படைத்த பல அடுக்கு ராக்கெட்டுகளை உருவாக்கி, அவற்றின் முகப்பில் ஹைட்ரஜன் குண்டை வைத்து அனுப்ப முடிந்தால், உண்மையில் அது மிகப் பயங்கர ஆயுதமாக விளங்கும்.
போர்முறை தொடங்கிய காலத்திலிருந்து அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்க்கருவிகளை உருவாக்குவதில்தான் நாடுகள் ஈடுபட்டு வந்திருக்கின்றன. வில், அம்பு, துப்பாக்கி, பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல் ஆகிய அனைத்து விஷயங்களிலும் இந்தத் திறன்களை அதிகரிப்பதில் ஒரு நாடு காணும் முன்னேற்றம், போரில் வெற்றி தேல்வியை நிர்ணயிப்பதில் பிரதான அம்சமாக இருந்து வந்திருக்கிறது. இந்தப்பின்னணியில் பார்க்கும்போது அணு ஆயுதங்களை ¬முகப்பில் கொண்ட ராக்கெட்டுகள், அதாவது ஏவுகணைகள்தான் ஈடில்லாத போர்க் கருவிகளாக இருக்க ¬முடியும்.
****
1991 தொடக்கத்தில் நடந்த வளைகுடாப் போரில் செயற்கைக் கோள்கள் முக்கியப் பங்கு வகித்தன. குவைத் நாட்டை இராக் நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதற்காக அமெரிக்கா தலைமையில் பல நாடுகளைச் சேர்ந்த படைகள் இராக் மீது போர் தொடுத்தன. அப்போரின் போது இராக் தன் வசமிருந்த ரஷ்யத் தயாரிப்பான ஸ்கட் (குஞிதஞீ) எனப்படும் ஏவுகணைகளை இஸ்ரேல் மீதும், சவூதி அரேபியா மீதும் செலுத்தியது. இந்த ஸ்கட் ஏவுகணைகள் சில நூறு கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியவை.
இராக்கின் இந்த ஏவுகணைகளை ¬முறியடிக்க அமெரிக்கா பேட்ரியட் எனப்படும் எதிர்கணைகளைப் பயன்படுத்தியது. ஸ்கட் ஏவுகணை வானில் இருக்கும்போதே பேட்ரியட் எதிர்கொண்டு அதைத் தாக்கி அழிக்கும் சக்தி படைத்தது. வேகமாகப் பறந்து வந்த ஸ்கட் ஏவுகணைகளை நடுவானில் அழிக்க செயற்கைக் கோள்கள் உதவின. இது எப்படிச் சாத்தியமாயிற்று?
இராக்கில் ஏவுகணைத் தளத்திலிருந்து ஸ்கட் கிளம்பியதும் வேவு செயற்கைக் கோள் அதைக் கண்டறிந்து அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள தொடர்பு நிலையங்களுக்கு சிக்னல்கள் வடிவில் தகவல் அனுப்பியது. ஸ்கட் எந்தத் திசையை நோக்கி எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதை இந்த சிக்னல்கள் மூலம் அறிய முடிந்தது. பிறகு சவூதி அரேபியாவில் அல்லது இஸ்ரேலில் உள்ள பேட்ரியட் யூனிட்டுகளுக்கு இதுபற்றித் தகவல் அனுப்பப்பட்டது. தக்க சமயத்தில் பேட்ரியட் செயல்பட்டு எதிரே சென்று ஸ்கட் ஏவுகணையைத் தாக்கி அழித்தது. பேட்ரியட் எப்போது எந்தத் திசையில் பாயவேண்டும் என்பதை நுண்ணிய கம்ப்யூட்டர்கள் தீர்மானித்துக் கூறின.
இராக்கியப் படைகளின் நடமாட்டத்தை அறியவும் வேவு செயற்கைக் கோள்கள் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகளுக்கு உதவின.
ஆரம்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டுமே வேவு செயற்கைக் கோள்களை வைத்திருந்தன. இப்போது மேலும் சில நாடுகள் இந்தப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம். நுட்பமான செயற்கைக் கோள்களையும் அத்துடன் அவற்றைச் செலுத்துவதற்கான ராக்கெட்டுகளையும் தயாரிப்பதற்குத் திறன் படைத்த எந்த ஒரு நாட்டாலும் இப்படி வேவு செயற்கைக் கோள்களைச் செலுத்த முடியும். உலகில் இப்போதைக்கு இப்படிப்பட்ட திறன் படைத்தவையாக ஆறு நாடுகள் அல்லது அமைப்புகள்தாம் (அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பிய கூட்டமைப்பு நிறுவனம், ஜப்பான், சீனா, இந்தியா) இருக்கின்றன.
வேவு செயற்கைக் கோளுக்கு கண் மட்டுமல்ல. காதும் உண்டு.
சுமார் 400-500 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடி கீழே பேசுவதை ஒட்டு கேட்கக் காதை தீட்டிக் கொண்டு, பறக்கிற வேவு செயற்கைக் கோள்களும் இருக்கின்றன. இப்படி ஒட்டு கேட்கும் செயற்கைக் கோள்களை ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பயன்படுத்துகின்றன.
செயற்கைக் கோளில் அணுகுண்டு அல்லது வேறு குண்டுகளை வைத்து அனுப்பி, போர் மூளும்போது எதிரிநாட்டின் மீது அதைப் போடும்படி செய்யலாமே என்று தோன்றக்கூடும். இந்த வகையில் போர்க்காரியங்களுக்கு விண்வெளியை யாரும் பயன்படுத்தாதபடி தடுக்க ஐ.நா. அமைப்பின் ஆதரவின் கீழ் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளியில் செயற்கைக் கோளைச் செலுத்துகிற நாடுகள், அது பற்றி ஐ.நா.வுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிற சர்வதேச ஒப்பந்த¬மும் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன.
எனவேதான் எந்த நாடும் அணு குண்டுகளை அல்லது வேறு குண்டுகளைக் கொண்ட செயற்கைக் கோள்களைப் பறக்க விடுவதில்லை.