சென்னை புத்தகக் கண்காட்சி இந்தமுறை மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துவிட்டது. கூடுதல் கடைகள். நடக்க வசதியான பாதைகள். யாரும் யார்மீதும் இடிக்கவேண்டாம். சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறை நெருக்கடிகளைச் சமாளிக்க இந்த ஏற்பாடு போதுமானது. கண்காட்சியை ஏற்று நடத்தும் பபாசிக்கு வாழ்த்துகள். இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும்.
காண்டீனில்தான் யானை விலை வைத்து ஒவ்வொரு திண்பண்டத்தையும் விற்கிறார்கள். காபி விலை பத்து ரூபாயாம். சரவண பவனில் உள்ள விலையை மற்ற ஹோட்டல்களும் பின்பற்றுவது இன்று வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அதற்கு சரவண பவன் கொடுக்கிற வசதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. ஆர்டர் எடுக்க ஒருவர் அவரைக் கவனிக்க ஒரு சூப்பர்வைசர் என்று அங்கு பல அடுக்குகள் உண்டு. சர்வர் நம்மைக் கவனிக்காத காரணத்தால் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிற நிலைமை சரவணபவனில் ஒருபோதும் ஏற்படாது. ஆகவே அவன் என்ன விலை வைத்தாலும் அது நமக்கு அளிக்கப்படும் வசதிக்கும் சேர்த்தே மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கு? சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்பதற்கும் இரண்டு வாய் காபியை பத்து ரூபாய்க்கு விற்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. நல்லவேளை, கண்காட்சிக்குள் ஐந்து ரூபாய்க்கு அருமையான தேநீர் கிடைக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட சபோல் குடிநீர் எல்லா திருப்பங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. கழிவறையும் சகித்துக்கொள்ளும் தரத்தில் அமைக்கப் பட்டது நாம் செய்த பாக்கியம்.
.
கிழக்கில் வெளியிடப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான புத்தகங்களை காவல்துறை தடை செய்திருக்கிறது. இதற்கு மற்ற பதிப்பகங்கள், எழுத்தாளர்களிடம் இருந்து என்னமாதிரியான ஆதரவு, எதிர்வினை வரப்போகிறது என்று பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.
இந்தமுறை புத்தகக் கண்காட்சி தொடங்கும் முன்பே என் ஷாப்பிங் ஆரம்பமாகிவிட்டது. சாரு நிவேதிதாவின் பத்து புத்தகங்கள்தான் என் முதல்போனி. அசோகமித்திரன், சுஜாதாவுக்குப் பிறகு நான் பைத்தியமாக இருக்கும் ஒருசில எழுத்துகளில் சாரு நிவேதிதாவினுடையதும் ஒன்று. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாருவின் பத்து புத்தகங்களில் 9 புத்தகங்களில் உள்ள கட்டுரைகள் ஏற்கெனவே அவரது இணையத்திலும் உயிமையிலும் வெளிவந்தவை. நான் அத்தனையும் படித்தவன். இருப்பினும் அவற்றைப் புத்தகமாக வைத்துக் கொள்வதில் உள்ள செளகரியங்கள் பல. வெளியீட்டு விழாவுக்கும் சென்றுவந்தேன். விழாவுக்கு வந்த 90 சதவிகிதத்தினர் இளைஞர்கள். விழா முடிய இரவு பத்தாகியும் கூட்டம் கலையாமல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். சாருவின் உரையை விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்.
இன்று புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தில் நான் வாங்கிய புத்தகங்கள் -
தனிமையின் வழி - சுகுமாரன்
சொல்லில் அடங்காத இசை - ஷாஜி (இசை கற்கும் உங்கள் நண்பர், உறவினருக்குப் பரிசளிக்கப் பொருத்தமான நூல் இது.)
நாளை வெகுதூரம் - சமகால உலகச் சிறுகதைகள்
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம்
அதே இரவு அதே வரிகள் - தொகுப்பாசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன்
காலச்சுவட்டில் வாங்கியது -
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
இதுபோல நிறைய மொழிபெயப்புகள் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலான நூல்களை வாங்கத் திட்டம். அனைத்தையும் படித்துவிட்டு என் விமரிசனத்தை இங்கே எழுதுகிறேன்.
புத்தகக் கண்காட்சியை விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் வழிநெடுக பெட்ரோலுக்காக வாகன ஓட்டிகள் பங்குகள் முன்பு திண்டாடுவதைக் காணமுடிந்தது. என் எரிபொருள் புத்தகங்கள்தான். அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவரை நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பேன்.