ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
சென்னையில் துளிர்க்கும் கிரிக்கெட்

கோடை காலம் கடந்துவிட்டால் சென்னையில் கிரிக்கெட் மேட்ச் நடக்க துளிக்கூட வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த எண்ணம் இப்போது அவசர அவசரமாக மாற்றப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு நேர்ந்திருக்கும் சங்கடமான நேரத்தில், இந்த மண்ணில் கிரிக்கெட் மேட்ச் நடக்கவேண்டுமென்றால் அதற்கு சென்னை மட்டுமே பொருத்தமான நகரமாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவில் கிரிக்கெட் வரலாறு கொண்ட சில நகரங்களில் சென்னையும் ஒன்று. 1951ல் சென்னையில் தான் நடந்தது. இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைக் கொண்டாடியது. முதல் ரஞ்சி டிராபி  ஆட்டம் சென்னையில்தான் ஆடப்பட்டது. 86ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த சென்னை டெஸ்ட் போட்டி டையில் முடிந்த விநோதம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் வரைக்கும் பேசப்படும்.  முதல் டெஸ்டில் 16 விக்கெட்டுகள் எடுத்து ஹிர்வானி உலக சாதனை புரிந்ததும் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 194 ரன்கள் (சயித் அன்வர்) அடிக்கப்பட்டதும் இங்குதான். சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான்.

 

பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் மும்பை, டெல்லி, கான்பூர் ஆகிய நகரங்களுக்குத்தான் டெஸ்ட் மேட்ச் ஒதுக்கப்படும். ஒருகாலத்தில் சென்னையில் பொங்கல் சமயத்தில் ஏராளமான (17) டெஸ்ட் மேட்சுகள் நடந்துள்ளன. ஆனால் கடந்த பத்து வருடங்களாக காரணம் இல்லாமல் இந்த பாரம்பரியப் பழக்கத்தை விட்டொழித்துவிட்டார்கள்.

 

இந்திய வீரர்களைக் கொண்டாடுவதற்காக மட்டும் சென்னை ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைவது கிடையாது.  99ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியைப் பார்த்த பலர் தங்கள் நகங்களைப் பறிகொடுத்தார்கள். 20-20 மேட்சுக்கு இணையாக விறுவிறுப்பாக அமைந்தது. ஒரு டெஸ்ட் மேட்சின் கடைசி இன்னிங்ஸில் தெண்டுல்கர் ஆடிய சிறந்த, உருப்படியான ஆட்டம் என்று இன்றைக்கும் அந்த மேட்சைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

 

கொல்கத்தா ரசிகர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் தக்காளிகளையும் அழுகின முட்டைகளையும் மைதானத்துக்குள் வீசி எறிந்திருப்பார்கள். காகிதக்குப்பைகளை எரியூட்டி யிருப்பார்கள். ஆனால் நல்ல கிரிக்கெட்டை ரசிக்க வந்த சென்னை ரசிகர்கள் அன்றைய தினம் ரசித்தது பாகிஸ்தானின் திறமையான பந்துவீச்சையும் வெற்றி பெறுவதற்காக அவர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தையும். ஆட்டம் முடிந்தவுடன் சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டியது பாகிஸ்தான் வீரர்களுக்கு நம்பமுடியாத இருந்தது. அவர்கள் நாட்டு ரசிகர்கள் ஒருபோதும் அவ்வளவு சுலபமாக மற்ற நாட்டினருக்கு கரவொலி எழுப்ப மாட்டார்கள். சென்னை ரசிகர்களின் தாராள மனத்துக்கு பிரதிஉபகாரமாக பாகிஸ்தான் கேப்டன் இன்ஸமாம் வீரர்களை அழைத்துக்கொண்டு மைதானம் முழுக்க வலம்வந்தார். ஆனால் அதன்பின்பு சென்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்துக்கொள்ளவில்லை.

 

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான முதல் டெஸ்ட் போட்டி வரும் 11ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. அந்த ஐந்து நாள்களும் பெருமழை, சிறுமழை எதுவும் இல்லாமல் சேப்பாக்கம் ஒரு கொண்டாட்ட வெளியாக மாறினால் மட்டுமே இந்திய கிரிக்கெட் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

 

பி.கு -சமீபத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கலந்துகொண்ட டெஸ்ட் போட்டிகளில் மைதானங்களில் இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட காவலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் உச்சி வெய்யிலில் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நடந்த டெஸ்ட் போட்டியில் தினமும் சேப்பாக்கத்துக்கு 20,000 ரசிகர்கள் வருகை தந்தார்கள். ஷேவாக் முன்னூறு ரன்கள் அடித்தை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற 20,000 ரசிகர்களில் நானும் ஒருவன். அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

 

நன்றி - கல்கி (14.12.2008)