கடவுளிடம் பதில் பெற்றவர்!
விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனபிறகு அவரை எல்லா பத்திரிகைகளும் பேட்டி எடுத்துவருகின்றன.
ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன், ஆனந்தின் எல்லா பேட்டிகளிலும் அவருடைய மனைவி அருணாவும் தவறாமல் இடம்பெறுகிறார்? ஆனந்தின் புகைப்படத்தோடு அருணாவின் புகைப்படமும் இடம்பெறவேண்டிய அவசியம் என்ன?
அஞ்சு ஜார்ஜ் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவருடைய பெயரில் உள்ள ஜார்ஜ், அஞ்சுவின் கணவர்.
சாதாரண விளையாட்டு வீராங்கனையாக இருந்த அஞ்சுவை ஒரு சர்வதேச நட்சத்திரமாக மாற்றியவர் டிரிபிள் ஜம்ப் வீரரான ஜார்ஜ். அஞ்சுவுக்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்து அஞ்சுவின் முழுநேரப் பயிற்சியாளராக மாறினார். இப்படி அஞ்சுவின் கிரியா ஊக்கியாக இருக்கும் ஜார்ஜின் புகைப்படம் இதுவரை எந்த பத்திரிகையிலும் வந்ததாகத் தெரியவில்லை.
அருணாவுக்கு இதுபோல விளையாட்டு பின்னணி எதுவும் கிடையாது. 'எனக்கும் செஸ்ஸூக்கும் நீண்டதூரம்' என்று அவர் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அருணாவுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஜார்ஜூக்கும் தரலாமே!
****
செய்தி - சானியா மிர்சாவுக்கு டாக்டர் பட்டம்!
கலைமாமணி விருதுபோல சுண்டல்மாதிரி இப்போது டாக்டர் பட்டமும் விநியோகம் செய்யப்படுகிறது.
அது நிற்க. சானியா மிர்சாவை விடவும் பேட்மிண்டன் வீராங்கனை சாயினா மிகவும் திறமையானவர். என்ன, அவர் விளையாட்டைத் தவிர வேறு எதிலும் தன்னைப் புகுத்திக்கொண்டு சர்ச்சைகள் செய்யமாட்டார்.
கிரிக்கெட்டில்கூட (ஐசிசி தரப்பட்டியலில்) முதல் பத்து இடங்களைப் பிடிப்பதற்குள் இந்திய வீரர்களுக்குத் தாவு தீர்ந்துவிடுகிறது. ஆனால் உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இப்போது சாயினாவுக்குப் பத்தாவது இடம். ஊக்குவிக்கப்பட வேண்டியவரும் கெளரவமளிக்கவேண்டியவரும் அவரே.
****
இன்று நியோ கிரிக்கெட் சேனலில் கவர்ச்சியாக உடை அணிந்த ஒரு தொகுப்பாளர் தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தை பேட்டி கண்டார்.
ஒருவருக்காக உங்கள் இடத்தை விட்டுக் கொடுப்பீர்கள் என்றால் யார் அவர்?
'ராகுல் திராவிட்'
கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்?
'நான் எப்போது என் முதல் டெஸ்ட் மேட்சை ஆடுவேன்?'
சென்னையில் இன்று ராகுல் திராவிட் ஆடியதைப் பார்க்கும்போது, பத்ரிநாத் எப்படியோ கடவுளிடமிருந்து தனக்கு வேண்டிய பதிலைப் பெற்றுவிட்டார் என்றுதான் தெரிகிறது.