ச.ந. கண்ணன்

ச.ந. கண்ணன்

சென்னை 600075

 

அசோகமித்திரன், சென்னை பற்றி ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார். உடனே லேண்ட் மார்க்குக்கு போன் போட வேண்டாம். வழக்கம்போல அந்தப் புத்தகமும் எங்கும் கிடைக்காது. அவர் சென்னை முழுக்க பகுதி பகுதியாக வசித்து நிறைய அனுபவம் பெற்றிருக்கிறார். எல்லா இடங்களின் வரலாறும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அல்லது அவர் அனுபவத்தையே அந்தப் பகுதிகளின் வரலாறாக எழுதியிருக்கிறார். ஒரே சந்தோஷம். அவர் பல்லாவரம் குறிப்பாக பம்மல் பற்றியெல்லாம் பொட்டுவரி எழுதவில்லை. எனக்காக விட்டுக்கொடுத்துவிட்டார் என்று எண்ணிக் கொள்கிறேன்.

 

சத்தியமங்கலம் நவநீதகிருஷ்ணன் கண்ணன் என்கிற ச.ந. கண்ணனாக நான் ஜீவித்தாலும் சென்னைதான் என் மனத்துக்கு நெருக்கமான ஊர். அதிலும் பம்மல்தான் என் போதிமரம். இன்று வரைக்கும் என் வசிப்பிடம் பம்மல்தான். நடுவில் அண்ணாநகர், கோயம்பேடு போன்ற சுவர்களில் அடிக்கப்பட்ட இந்தப் பந்து இறுதியில் பம்மலுக்கே திரும்பியதன் பெயர்தான் மண்பாசம் என்றால் நான் ஒப்புக்கொள்கிறேன்.  இன்று பம்மல் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு பகுதி எனினும் அதன் பின்கோடு மட்டும் சென்னை 75 என்பதிலிருந்து மாறாதது அல்ப சந்தோஷத்தைக் கொடுக்கவே செய்கிறது.  

 

இந்தியாவுக்கு சுதந்தரம் கிடைத்த அடுத்த சில ஆண்டுகளில் புள்ளை குட்டிகளோடு பம்மல் பக்கம் வந்துவிட்டார் என் தாத்தா (தாய்வழி).  பம்மலின் முதல் குடிமகன் அவர்தான். எந்த நம்பிக்கையில் அவர் சொன்ன வனாந்தரப் பகுதியில் வாழ என் பாட்டி சம்மதித்தாள் என்று நினைக்கவே குலைநடுங்குகிறது. அதுவும் பல வருடங்கள் மின்சாரம் இல்லாமல் காலம் தள்ளியிருக்கிறார்கள். மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பல்லாவரம் ரயில் நிலையம் அப்போது பளிச் என்று தாத்தாவீடுவரை தெரிந்திருக்கிறது. 

 

70களின் இறுதியில்தான் பம்மலில் வீடுகள் முளைக்க ஆரம்பித்தன. வீடுகளோடு சேர்ந்து தோல் தொழிற்சாலைகளும் சேர்ந்துகொள்ள நிலத்தின் தன்மை மாறி கிணறில் தண்ணீர் இறைத்தால் கடல்நீர் குடிக்கக் கிடைத்தது. பத்து நாள்களுக்கு ஒருமுறை பாலாறு நீர் வரும். அது வருவதற்குள் தண்ணீர் தீர்ந்துபோனால் ரெட்டைகுழாய் என்று பம்மல் மெயின்ரோட்டில் ஒரு 24 மணி நேரக்குழாய் இருக்கிறது. நானும் என் தாத்தாவும் சைக்கிளில் டியூப் மாட்டிக்கொண்டு அங்கிருந்து கேனில் தண்ணீர் பிடித்துக்கொண்டுவருவோம். விடியற்காலை 2 மணிக்குச் சென்றால் கேனை அலம்பி நீர் பிடிக்கலாம். மற்ற நேரத்தில் சென்றால் இவர்தான் என்றில்லாமல் எல்லோரும் அடிதடியில் இறங்கி ஒரு வாளி தண்ணீருக்காக போராடிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் ரெட்டைக் குழாயில் காற்று மட்டும்தான் வரும். அப்படிப்பட்டச் சந்தர்ப்பங்களில் ஒரு கேன் தண்ணீருக்காக பம்மல் முழுக்க நானும் தாத்தாவும் அலைந்ததுண்டு. 

 

8ம் வகுப்புவரை சத்தியிலும் ஈரோட்டிலும் மாறிமாறி நான் படித்தேன். அந்நாளில் என் ஒரே ஆக்ஸிஜன், பம்மலில் கழிக்கும் விடுமுறை தினங்கள்தான். அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு முடிந்த அடுத்த நாளே ரயிலேறி விடுவோம். ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஏறியவுடன் மனம் துள்ள ஆரம்பிக்கும். எப்போதும் அம்மா அன் ரிசர்வ்டு பெட்டியில்தான் என்னையும் அக்காவையும் அழைத்து வருவார். அதிகாலையில் எங்களை சென்ட்ரலில்வரவேற்க என் அம்மாவின் தம்பி (இளங்கோ மாமா) டான் என்று ஆஜராகி இருப்பார். மாமாஆஆஆ என்று கத்திக்கொண்டுதான் நானும் என் அக்காவும் ரெயில் பெட்டியை விட்டுக் குதிப்போம்.

 

நான், லெனின்,பால்,ராமு, முரளி, ராஜன், குமரேசன், சாமிநாதன், நாரயணன் (ஆச்சரியமாக சாமிநாதன் பிராமணன், நாராயணன் அபிராமணன்) ஆகியோர் அடங்கிய குழுதான் எங்கள் நட்பு வட்டம். எங்கள் வயதை ஒத்த சில பெண்களும் எங்கள் தெருவில் வசித்தாலும் அந்தப் பெண்களின் குடும்பம் என் தாத்தா பாட்டியோடு மிகுந்த நல்லுறவோடு விளங்கியதால் யாரையும் கள்ளப்பார்வை பார்க்க முடியாது.  பாய்ஸ் பசங்கள்போல எந்த ஒரு ஆட்டமும் நாங்கள் ஆடியது கிடையாது. பெண்களை ஆபாசமாகக் கிண்டலடிப்பது, பெண்கள் பற்றியே சதா பேசிக்கொண்டிருப்பது, திருட்டு தம், ஓசித்தண்ணி போன்ற சிற்றின்பங்களை எண்ணிப் பார்ப்பதே தெய்வகுத்தம் என்று நாங்கள் எண்ணிய காலமது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு மட்டும்தான். சச்சின், கபில், கவாஸ்கர், அசாருதீன் என்று எங்கள் பேச்சு எப்போதும் கிரிக்கெட்டுக்கு அந்தாண்டை செல்லாது. 

 

உலகக் கால்பந்து போட்டி நடந்தால அடுத்த சில வாரங்கள் நாங்கள் கால்பந்து மட்டும்தான் ஆடுவோம். டென்னிஸை எங்களுக்குக் கையில் ஆடித்தான் பழக்கம். ராக்கெட் எல்லாம் வாங்க வசதி கிடையாது.  எங்கள் டென்னிஸில் நெட்டும் இருக்காது. விம்பிள்டன் நடக்க நடக்க பம்மல் மைதானத்தில் பல சாம்பிராஸ்கள் முறுக்கிக்கொண்டு ஆடுவான்கள்.  ஹாக்கி போட்டி என்றாலும் சளைக்க மாட்டோம், ஹாக்கி மட்டைபோல ஒரு குச்சியை முனையில் வளைத்துவிட்டு இரண்டு அணிகள் பிரித்து ஆடுவோம். உச்சகட்டமாக ஒலிம்பிக் போட்டியின்போது ஒலிம்பிக் விளையாட்டுகளையும் பரிட்சார்த்தமாக ஆடிப்பார்த்தோம். 100மீ, லாங்க் ஜம்ப், டிரிபிள் ஜம்ப், வில் வித்தை என்று ஒன்றைக்கூட விடவில்லை. குத்துச்சண்டை ஆட்டம்கூட ஒருவாரம் தீவிரமாக நடந்தது. 

 

அப்போதெல்லாம் மைக் டைசன் - ஹோலிபீல்ட் சண்டைகள் ஏகபிரசித்தம். கையில் டர்க்கி டவலைச் சுற்றிக்கொண்டு ஆளாளுக்குக் குத்துவிட்டுக் கொண்டிருப்போம்.  ஒருமுறை நான் குத்து விட்டதில் என் நண்பன் ஒருவனுக்கு சிறுமூக்கு உடைந்துபோனது.  அன்றோடு குத்துச்சண்டைப் போட்டியை பேன் செய்துவிட்டோம். முரளி வீட்டில் இருந்த டேபிளில் டேபிள் டென்னிஸ்கூட ஆடினோம். தற்பெருமை அல்ல. நடந்த ஒரேயொரு போட்டியில் நான்தான் சாம்பியன். யாருமே துணைக்கு இல்லாவிட்டால் தனியனாக நான் சுவர் டென்னிஸ் (ஸ்குவாஷ்?) ஆடிப் பழகியதால் கிடைத்த வெற்றி அது. வலது கை இந்தியா, இடது பாகிஸ்தான் என்று அணி பிரித்து பேக்குபோல தனியாக பல நாள் சுவர் டென்னிஸ் ஆடியிருக்கிறேன். 

 

விடுமுறை முடிகிற தருணத்தில் என் முகத்தில் இருள் கவ்விவிடும். நண்பர்களும் நிஜமாகவே கண்ணீர் வடிப்பார்கள். ஊருக்குச் சென்றால் பம்மல் நண்பர்களிடமிருந்து கடிதம் வரும். அடுத்தமுறை சென்னை செல்லும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்வேன். கடித தூரம் நட்பின் தூரமாக இருந்தசமயத்தில் என் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. ஆங்கில மீடியத்தில் நான் படிக்கவேண்டும் என்கிற என் அம்மாவின் கனவு பலிக்க வேண்டி 8வது முதல் நீ சென்னை தாத்தா வீட்டிலேயே படி என்று என் பெற்றோர் என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். பம்மல் சங்கர வித்யாலயா பள்ளியில் நான் இணைந்தேன்.

 

அவ்வளவுதான் 24*7 வாழ்வே கொண்டாட்டமாக இருந்தது.

 

நிற்க. எங்கள் தெருவே கிட்டதட்ட சேவல் பண்ணைபோலவே இருக்கும் என்று மேலே சொல்லியிருந்தேன். இருந்த ஒரு சில பெண்களையும் 16, 17 வயதில் மணம் முடித்து புக்ககம் அனுப்பிவிட்டார்கள்.  ஏப்ரல் மேயிலே பசுமையிலே இல்லை என்று பாடியவண்ணம் நாங்கள் இருந்தபோதுதான் எங்கள் கண்ணில் மண்ணைத் தூவி ஒரு பெண் அதே தெருவில் வசித்துவந்தது தெரியவந்தது.

 

(தொடரும்)