ச.ந. கண்ணன்

ச.ந. கண்ணன்

எதிரொலி 

முதலில் இந்தச் செய்தியைப் படியுங்கள்.

 

http://dailythanthi.com/article.asp?NewsID=527987&disdate=11/18/2009&advt=2

 

இப்போது இது தொடர்பான மற்றொரு செய்தியை.

 

http://dailythanthi.com/article.asp?NewsID=528290&disdate=11/19/2009

 

ஃபாண்ட் வராமால் செய்தி படிக்கத் திணறிவர்களுக்குச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

 

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள மதுக்கடையால் ரவுடிகள் அட்டகாசம். பேருந்து நிலையம் குண்டுகுழியுமாகக் காட்சியளிக்கிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டது. அதற்கு அடுத்த நாள் செய்தி - 

 

'தினத்தந்தி செய்தி எதிரொலி' - பிராட்வே பேருந்து நிலையத்தில் மேயர் அதிரடி நடவடிக்கை.

 

அடடா, என்ன அருமையான ஆட்சி! குறை சொன்னவுடனே நடவடிக்கை எடுத்துவிட்டாரே சென்னை மேயர், இதனால் தான் சென்னையில் மாதம் மும்மாரி பொழிகிறது என்று சென்னை மேயரின் உடனடி நடவடிக்கையைக் கண்டு உங்கள் உள்ளமெல்லாம் பூரித்துப்போனால் உங்களை விடவும் ஓர் அப்பாவி இந்த உலகத்தில் இல்லை.

 

பிராட்வே பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அத்தனை பேருக்கும் அதன் அசெளகரியங்கள் நன்றாகவே தெரியும். ஆனாலும், விதியே என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறிக்கொள்வோம். யாரிடம் போய் என்ன சொல்லமுடியும்? ஒரு நூற்றாண்டுக்கு ஒரு டிராபிக் ராமசாமிதான் பிறக்கமுடியும்.

 

தினத்தந்தி நிருபர் நல்லவர். துணிச்சலானவர். பெரிதாக செய்தி வெளியிட்டுவிட்டார். ஆனால் அதன்பிறகுதான் நிறைய டிராமாக்கள். அந்தச் செய்தியைக் கருணாநிதி படித்தாராம். உடனே மேயரைத் தொடர்பு கொண்டாராம்.   உடனே பிராட்வே பேருந்து நிலையத்துக்கு விரைந்த மேயர், முதல்வன் அர்ஜூன்போல சில அதிரடிகளைச் செய்து ஒழுங்கீனங்களைக் துடைத்து எடுத்துவிட்டாராம். 

 

என் கேள்வி :

 

இத்தனை நாளாக அந்தப் பேருந்து நிலையத்தின் நிலைமை மேயருக்குத் தெரியாதா? பிராட்வே பே.நி அழுக்காக, சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதை இத்தனை நாளாக அறிந்தும் வேடிக்கை பார்த்தது ஏன்? இதென்ன போதை மருந்து கடத்தலா, ரகசியமாகத் தவறுகள் நடப்பதற்கு?

 

சென்னை வருகிற வெளியூர் பயணிகள், ஏன் சென்னைவாசிகளேகூட ஒருமுறை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ள சாலையை வந்து பார்க்க வேண்டும். அதேபோல பார்க் ஷெரட்டன் எதிரே உள்ள போட் கிளப் சாலைகள். சென்னையில் இதுபோன்ற பணக்காரர்கள் குடியிருப்பின்  சாலைகளுக்கும் இதர சாலைகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணமுடியும். சென்னையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பெரியப் பெரியப் பணக்காரர்கள் வசிக்கும் தெருக்களுக்கு மட்டும்தான் பளிங்கு போன்ற தார்ச்சாலைகள் அமைத்துத் தரப்படுகின்றன. ஒவ்வொரு மீட்டர் இடைவெளியிலும் மரங்கள். சென்ற வருடம் சென்னையில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிய சமயத்தில் கோபாலபுரத்தில் தனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று பத்ரி தன் பிளாக்கில் எழுதியதை இங்கே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

ஆனால் விளிம்புநிலை  மக்கள் பயன்படுத்தும் பிராட்வே பேருந்து நிலையத்திற்குள்ளேயே டாஸ்மாக். குண்டும்குழியும் கொண்ட சாலைகள். பாதுகாப்பில்லாத வசதிகள் தினத்தந்தியில் செய்தி வெளியிட்டபிறகுதான் டாஸ்மாக்கை பேருந்து நிலையத்திலிருந்து உடனே அப்புறப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் மேயருக்குத் தோன்றியிருக்கிறது. ஏதோ மரத்தடிக்குக் கீழே திடீர் என்று பிள்ளையார் முளைத்துவிட்டதுபோல ஒரு ஆக்‌ஷன். 

 

ரயில்கள் கவிழ்ந்தால் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் தானாக முன்வந்து ராஜினாமா செய்வார்கள். அதுபோல தினத்தந்தி செய்தி வெளிவந்தவுடன் சென்னை மேயர் ராஜினாமா செய்திருக்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம் பிராட்வே பேருந்து நிலையத்தைப் பொறுப்பாகக் கவனிக்கவேண்டிய அதிகாரிகளையாவது தண்டித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு   தினத்தந்தி செய்தி எதிரொலிஎன்கிற அளவுக்கு ஒரு மையப்பேருந்து நிலையத்தில் நடந்த அட்டூழியங்களை கண்டும் காணாமல் விட்டது அவர் பதவிக்கு அழகல்ல. மேலும் தினந்தந்தியில் வந்த இச்செய்தி மேயரின்  பதவிக்கு மிகப்பெரிய கறையை உண்டாக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.