ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
இந்தியாவின் திறமை வங்கி

ஆஸ்திரேலியா உள்பட எல்லா அணிகளும் மெல்ல மெல்ல அடுத்த ஏற்பாடுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கன்றன. ஒவ்வொரு அணியிலும் புதிய வீரர்கள் முளைக்கின்றனர். அடுத்த லாரா, தெண்டுல்கர், மெக்ராத், வார்னேவைக் கண்டுபிக்க பலமான ஒரு தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.

 

வார்னேவுக்கு நிகரான ஒரு ஸ்பின்னரைக் கடந்த இரண்டு வருடங்களாக தேடிவருகிறது ஆஸ்திரேலியா. லாராவுக்குப் பிறகு இன்னமும் சந்திரபாலும் கெயிலும்தான் மே.இ தீவுகள் அணியின் பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய அணியில் மட்டும் மிக அழகான மாற்றங்கள் நிகழ்ந்துவருகிறது.

 

கங்கூலி விடைபெற்றுச் சென்றுவிட்டார். ராகுல் திராவிட் நிலைமை ஐசியூவில் கடைசி மூச்சுக்காகப் போராடும் நோயாளிபோல ஆகிவிட்டது. ரஞ்சி டிராபியில்கூட அவரால் சோபிக்கமுடியவில்லை. ஆனாலும் அவரை விலக்க இந்திய தேர்வுக்குழு தயங்குகிறது. ஒரே சமயத்தில் எல்லோரும் விலகுவதை ஸ்ரீகாந்த் விரும்பவில்லை. திராவிடுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு அருளப்பட்டுள்ளது. அணியில் அறிமுகமாகும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாரோ அதேபோலொரு கட்டாயத்தில் இருக்கிறார் திராவிட்.

 

கங்கூலி இடத்துக்கு யுவ்ராஜ் சிங்கைப் பரீசலிக்கவேண்டும் என்கிற பிரக்ஞையே இல்லாமல் இருந்துவிட்டார்கள். அந்த நிராகரிப்பு யுவ்ராஜ் மனத்தில் பெரிய சூறாவளியையே உண்டு பண்ணிவிட்டது. ஒருநாள் போட்டியில் தனி ஆளாக இங்கிலாந்தை துவம்சம் செய்து இப்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட்டார். கங்கூலிக்குப் பதிலாக பத்ரிநாத், ரைனா அல்லது ரோஹித் சர்மா ஆகிய மூவரில் ஒருவரை பரீசிலிக்கலாம் என்கிற தருணத்தில்தான் யுவ்ராஜ் சிங் அதகளம் செய்திருக்கிறார். வேறெந்த அணியிலும் யுவ்ராஜ் போன்ற ஒரு வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லாமல் இருக்காது.

 

பத்ரிநாத் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில் தாராளமாக இடம் கிடைக்கிறது. ஆனால் பதினோரு பேரில் ஒருவராக அணிக்குள் நுழையமுடியாத அளவுக்கு நெரிசல். பின்னாலேயே விஜய், வீரத் கோலி, புஜரா போன்ற இளம்வீரர்கள் அணிக்குள் நுழைய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

வளமான எதிர்காலத்தை நோக்கி இந்திய அணி சென்றுகொண்டிருக்கிறது என்பதன் அடையாளக் குறியாக இவை தென்படுகின்றன. வார்னேவுக்கு மாற்று கிடைக்காமல் ஆஸ்திரேலிய அணி திணறுவது போலொரு நிலைமை இந்திய அணிக்கு இல்லை. ஹர்பஜன் இப்போது புதிய சீற்றத்துடன் தென்படுகிறார். மிஷ்ராவின் வருகை கும்பிளேவை உடனடியாக மறக்கடிக்க செய்துவிட்டது. முரளி கார்த்திக் போன்ற ஒருவீரர் கிடைக்கத் தவம் செய்திருக்கவேண்டும். ஆனால் அவருக்கே அணியில் இடம் இல்லையென்றால் இந்தியாவின் திறமை வங்கியை எண்ணிக்கொள்ளலாம்.

 

20-20 உலககோப்பையில் பார்த்த அணிபோல இளைஞர்களின் கூடாரமாக இனி இருக்கப்போகிறது இந்திய அணி. அடுத்த பத்து ஆண்டுகளில் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்போகிறவர்களை அடையாளம் காணும் காலமிது.