இந்தியாவில் காந்தியின் நூல்களுக்குப் பிறகு சேதன் பகத்தின் நூல்கள்தான் ஏராளமாக விற்பனையாகின்றன. இலக்கிய உலகம் சேத்தனை மதிப்பதில்லை. என்றாலும் இன்று ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெரும்பாலான வாசகர்கள் சேதன் பகத்தை ஒதுக்குவது கிடையாது. அதனால் அவருடைய ஒவ்வொரு நாவலையும் லேண்ட் மார்க்கிலிருந்து பிளாட்பாரக் கடைவரை அள்ளிக்கொண்டு போகிறார்கள். இன்றைக்கும் அவர் புத்தகத்தின் விலை ரூ 95-ஐத் தாண்டுவது கிடையாது. புத்தகம் விற்கும் பொட்டிக்கடைக்காரர்களுக்கு சேதன் பகத்தின் பெயர் நன்கு தெரிந்திருக்கிறது.
இப்படியொரு சாதகமானச் சூழலில்தான் சேதன் பகத்தின்
நான்காவது நாவலான 2 ஸ்டேட்ஸ் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ஒரு பக்கம் இந்தியர்கள்
புத்தகப்புழுக்கள் அல்லர் என்பது ஒருவித குற்றச்சாட்டு. ஆனால் அமீர்கான், ஷாரூக்கான் பட வெளியீட்டுக்கு முன்னால் இருக்கும் பரபரப்பும்
வரவேற்பும் இந்த நாவலுக்குக் கிடைத்தது என்பது
இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஒரு தில்வாலேயேவும் ஒரு பூவெல்லாம் கேட்டுப்பாரும் சொல்லாத எதையும் 2 ஸ்டேட்ஸ் சொல்லிவிடவில்லை. கல்லூரியில் படிக்கும் இருவருக்குக் காதல் ஏற்படுகிறது. திருமணம் செய்துகொள்ள முயலும்போது பிராந்திய பேதம் தடுக்கிறது. காதலர்கள் பிரிகிறவரை சதி செய்கிறது. அத்தனைத் தடைகளையும் காதலர்கள் எப்படித் தாண்டினார்கள் என்பதுதான் இந்நாவல்.
சினிமா கதாசிரியர் ஆனபிறகு ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைப்படத்தின் ஒவ்வொரு ரீலாக கற்பனை செய்து எழுதப் பழகிவிட்டார் சேதன் பகத். ‘ஒன் நைட் அட் தி கால் செண்டரின்’ கிளைமாக்ஸ் அப்படியே சினிமாவை மனத்தில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டதுதான். ‘3 மிஸ்டேக்ஸ்’ நாவலின் மொத்த வடிவமும் சினிமாவுக்காக யோசித்து எழுதப்பட்டது. இதனால் முதல் நாவலில் (5 பாயிண்ட் சம்ஒன்) இருந்த ஓர் உண்மையும் அப்பாவித்தனமும் சேதனின் அடுத்தடுத்த நாவல்களில் காணாமல் போய்விட்டன.
சேதனின் பெரிய பலம், சலிக்காத நகைச்சுவை. அதிலும் பெண்களின் குணாதியசத்தை அங்கங்கே ஒரு வாக்கியத்தில் கூறுவதை ரசிக்காமல் அடுத்த வரிக்குச் செல்லமுடியாது. ஆனால் கதையில் தமிழர்களை முடிந்தவரை மட்டம் தட்டியிருக்கிறார் சேதன். ஆப்பிரிக்கர்கள்போல தமிழர்களை கறுப்பு நிறத்தோடு சதா ஒப்பிட்டுப் பேசுவது ஒருகட்டத்தில் அதீதமாகிப்போய் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
2 ஸ்டேட்ஸில் கதாநாயகன் சென்னை வந்து நாயகியின் பெற்றோரைக் கவரும் எந்த ஒரு முயற்சியிலும் புதுமை இல்லை. எல்லா சம்பவங்களும் நாடகத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ள யாருமே அத்தியாய முடிவின் முடிச்சுகள், அந்த முடிச்சுகள் அவிழும் விதம், துணைக் கதாபாத்திரங்களின் பின்நடவடிக்கைகள் போன்றவற்றைச் சுலபமாக ஊகித்துவிடுவார்கள். இதுதான் இந்த நாவலின் மிகப்பெரிய பலவீனம்.
சேதன் பகத்தின் எல்லா நாவல்களிலும் காதல் காட்சிகள் மிகத்தீவிரமாக, மயக்கும் வார்த்தைகளால் விவரிக்கப்படும். அவருடைய வெற்றி சூட்சமத்தில் அதுவும் ஒன்று. ஆனால் இது அண்ணாரின் சொந்தக் கதை என்பதால் மிகவும் தயங்கி தயங்கிக் காதல் காட்சிகளை வருணித்திருக்கிறார். அவருடைய மற்ற நாவல்கள் அசைவம் என்றால் இது மு(ட்டை)சைவம்.
கதாநாயகன் ஒரு பஞ்சாபியின் அடையாளமாக விவரிக்கப்பட்டாலும் நாயகி அனன்யா அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக வரையப்படவில்லை. மேட்டுக்குடி பெண்ணாக வாழ்கிற ஒரு மும்பைவாசியாகவே அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கதைக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய தமிழ் வாடை கிடைக்காமல் போய்விடுகிறது.
சென்னை வந்திறங்கும் நாயகன் விமான நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்கிறான். ஆனால் வழியே அவன் ஐஐடியை எல்லாம் தரிசித்துவிட்டுச் செல்வதாக கதை விடுகிறார் சேதன். இதுபோல சில தகவல் பிழைகள் நாவலில் உள்ளன.
ஒரு வாசகனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய கலாபூர்வமான அனுபவத்தைத் தரமுடியாத எந்த ஒரு படைப்பும் ஒதுக்கப்பட வேண்டியதுதான். 2 ஸ்டேட்ஸ் மலினமான சுவாரசியம் கொண்ட ஒரு பாப்கார்ன் நாவல்.