ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
அரவணைப்பு

அன்றொரு நாள், இரண்டாம் வகுப்பு படிக்கும் என் அக்கா மகன் ஹரிகிருஷ்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

 

'கண்ணு, வாரணம் ஆயிரம்னா என்னன்னு தெரியுமா?' என்று கேட்டேன்.

 

அன்று ஹரிக்கு பைந்தமிழ் வார்த்தை ஒன்றைக் கற்றுதந்துவிடுவது என்று முடிவு. அவன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவனுக்கு அதன் சரியான அர்த்தம் தெரியவில்லை. அவன் அம்மாவே வாரணம் ஆயிரம் என்றால் வர்ணம் ஆயிரம் என்றுதான் அர்த்தம் புரிந்துகொண்டிருந்தாள்.

 

'வாரணம்னா யானை. அதனால, ஆயிரம் யானைகள்னு அர்த்தம்.' என் வகுப்பை ஆரம்பித்தேன். கொஞ்சம் மடங்கினால் அவனைத் திருப்பாவைக்குள் கடத்திச் செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

 

'தப்பு மாமா. அந்தப் படத்துலதான் யானையே வரலையே. அப்புறம் எப்படி ஆயிரம் யானைகள்னு பேர் வைப்பாங்க?'

 

அவனுடைய தர்க்கத்தில் நான் ஆடிப்போனேன். 

 

  'கண்ணு,  ஆயிரம் யானைகளோட பலம் சூர்யாக்கு இருக்கிறதால் அந்தப் பேர்!'

 

'இல்லையே. அதுலதான் சூர்யா செத்துருவானே! அவனுக்கு எங்க பலம் இருந்திச்சு?'

 

சூர்யாவின் சிக்ஸ் பேக் எல்லாம் பொடியன் முன்னால் எடுபடவில்லை. அவனே தொடர்ந்தான்.

 

'வாரணம்னா ஒரு ஹீரோ. ஆயிரம்னா ரெண்டு ஹீரோயின். இதான் அதுக்கு அர்த்தம்.'

 

சூர்யா, சமீரா ரெட்டி. திவ்யா ஸ்பந்தனா ஆகிய மூவரையும் பிண்ணிப் பிணைத்து அவனாக ஓர் அர்த்தம் உருவாக்கினான்.

 

வாய்விட்டுச் சிரித்து அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

 

'கண்ணு, பூ படம் வந்திருக்கில்லை. அதுக்கு என்ன அர்த்தம்?'

 

அவனுக்குத் தமிழ் சினிமாவில் நடக்கும் அத்தனையும் தெரியும். ஒரு சினிமா விடமாட்டான். குறிப்பாக விஜய் படங்கள். சமீபமாக ச்சூ ச்சூ மாரியை மனப்பாடம் செய்துவிட்டிருந்தான்.

 

'ஃப்ளவர்' என்று சரியாகச் சொன்னவன் அடுத்தச் சந்தேகத்தைக் கேட்டான்.

 

சசியின் பூ-ன்னா என்ன அர்த்தம் மாமா?’

 

****

 

சென்ற வருடம் ஹரிக்குத் தங்கை பாப்பா பிறந்தது. அவன் கண் முன்னே அத்தனை பேரும் புதுப் பாப்பாவைக் கொஞ்சுவதும் அதற்காக பிரயத்தனப்படுவதும், முக்கியமாக அவன் அம்மா குழந்தையே கதியென மாறியது ஹரியை நீண்டநாள்களாக உறுத்திக் கொண்டிருந்தது போல. ஒருநாள் திடீரென பொங்கினான். 

 

'என்னை யாரும் கவனிக்க மாட்டேங்கிறீங்க. எல்லாரும் பாப்பாவைத்தான் கொஞ்சுறீங்க.'

 

அருகில் இருந்து இதைக் கேட்ட எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. சொல்லிவிட்டு ஓர் ஓரமாக நின்று அழ ஆரம்பித்தான். அவன் கண்களிலிருந்து ஊற்றுபோல கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. யாரும் அடிக்காமல், திட்டாமல் ஹரி அழுதது அன்றுதான். எத்தனை நாளாக இதை நினைத்து ஏங்கிக்கொண்டு இன்று போட்டு உடைத்தானோ என்று பதறியபடி, ஹரியை ஆளாளுக்குத் தூக்கி வைத்துக்கொண்டு சமாதானப்படுத்த முயன்றோம். அடுத்த சில மணி நேரம் கழித்து, அவன் அம்மாவின் அரவணைப்பில் ஓரளவு சமாதானமாகிச் சிரித்தான். அதில்கூட ஓரமாகக் கொஞ்சம் அழுகை ஒட்டிக்கொண்டிருந்தது.

 

இதையெல்லாம் தொட்டிலில் படுத்துக்கொண்டு அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த பாப்பாவும் தன் அண்ணனைப் போலவே, 'என்னை யாரும் கவனிக்க மாட்டேங்கிறீங்க. எல்லோரும் அண்ணனைத்தான் கொஞ்சுறீங்கஎன்று தன் பங்குக்கு கையைக் காலை உதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள், மொழி மட்டும் வசப்பட்டிருந்தால்.