ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நானும் சினிமாவும்

 

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


என் அம்மா ஒரு சினிமா பித்தர். குடும்பச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு சிறிது நேரம் ஆசுவாசமாக அவர் இருந்த ஒரே இடம் திரையரங்கு.  சீரியல்கள் உதயத்துக்கு முன்பு அவர் நிறைய சினிமா பார்ப்பார். ஆகவே சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது. பேசிய முதல் வார்த்தை எப்படி ஞாபகம் இருக்காதோ அதுபோல பார்த்த முதல் படமும் அவ்வளவாக நினைவில் இல்லை. வேரூன்றித் தேடிப் பார்த்ததில் கிடைத்த பதில் - சகலகலா வல்லவன். படம் முடிந்தபிறகு, ’இப்போ நாம வீட்டுக்குப் போகணுமா’ என்று என் மாமாவிடம் கேட்டது பசுமையாக நினைவில் இருக்கிறது.


கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?


ஆகஸ்ட்1-ம் தேதி என் பிறந்தநாள். அந்த நன்னாளில்தானா குசேலன் வெளியாகித் தொலைக்கவேண்டும்! நண்பர்களுடன் நச்சரிப்பினால் அந்தப் படத்துக்குச் சென்றேன். இயக்குநர்களை வைத்துத்தான் நான் சினிமா பார்ப்பது வழக்கம். அதன்வரிசையில் பி.வாசு படங்கள் என்றால் எனக்கு உடம்பு முழுக்கக் கொப்புளங்கள் பரவிவிடும். என் வாழ்க்கையில் அதிகமாக வெறுக்கும் ஓர் இயக்குநர் அவரே. இந்த ஒரு காரணத்துக்காகவே நான் சந்திரமுகி பார்க்கவில்லை. சரி, மனிதர் திருந்தியிருப்பார், இன்னொரு வாய்ப்பு நல்குவோம் என்றுதான் குசேலனுக்குச் சம்மதித்தேன். ஆனால் முதல் அரைமணி நேரம் படம் போரடித்து நன்றாக உறங்கிவிட்டேன். குட்டித் தூக்கத்தால் களைப்பு நீங்கவே வேறுவழியின்றி முழுப் படத்தையும் பார்க்க நேர்ந்தது. உண்மையில் பி.வாசுமீது நஷ்ட ஈடு வழக்குப் போடலாம் என்று நினைத்திருந்த தருணத்தில்தான் என் வேலையை திரையரங்கு அதிபர்கள் கையில் எடுத்திருப்பது தெரிந்தது. சரி, வினை விதைத்தவர் வினை அறுக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.


கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


ஹாலிவுட் படங்கள் தவிர இதர நாட்டுப் படங்கள் பார்க்கும் ஆர்வம் கொண்டவன் நான். இறுதியாக ஃபெட்ரிகோ ஃபெலினியின் ’நைட்ஸ் ஆஃப் கேப்ரியா’ படம் பார்த்தேன். 1950களிலேயே காவியங்களைப் படமாக எடுத்தவர் ஃபெலினி. அவருடைய ‘லா ஸ்டிராடா’ இன்னும் 1000 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ’லா ஸ்டிராடா’ தரத்தில் இல்லையென்றாலும் நைட்ஸ் ஆஃப் கேப்ரியாவில் தனித்து நிற்பது குயிலிட்டா மசினாவின்(Giulietta Masina) நடிப்பு. இவர் ஃபெலினியின் மனைவி. சினிமா நடிகை என்றால் தேகம் சார்ந்து பார்க்கப்படுகிற நிலையில் நகக்கண்களைக்கூட காண்பிக்காதவர் மசினா. ஒரு நடிகை கண்களை எப்படிப் பிரயோகப்படுத்தவேண்டும், முகபாவத்தை காட்சிக்குக் காட்சி எப்படி மாற்றவேண்டும் என்பதற்கு மசினா ஒரு கோனார் கைடு. அதுவும் ’நைட்ஸ் ஆஃப் கேப்ரியா’வின் இறுதிக் காட்சியில் மசினாவிடமிருந்து வெளிப்பட்ட நடிப்புக்காக எவ்வளவு பொற்காசுகள் வேண்டுமானாலும் தரலாம். எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இனிய தமிழ் என்று பெயர் வைக்கலாம் என்றிருந்தேன். இப்போது மனம் மாறிவிட்டது. ஆத்துக்காரி சம்மதித்தால் குயிலிட்டா மசினா என்றுகூட திருநாமம் இட்டுவிடலாம்.  (மசினாவுக்கு நிகராக நான் மதிக்கும் ஒரே இந்திய நடிகை, நந்திதா தாஸ்)


மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

 

சுப்ரமணியபுரம், நாம், ஃபைவ் ஸ்டார் மற்றும் இதயத்தைத் திருடாதே.

 

தமிழ் சினிமாவில் சசிகுமார் அளவுக்கு வேறு எந்த இயக்குநரும் தனது முதல் படத்திலேயே இவ்வளவு தரமான ஒரு படைப்பைத் தந்தார்களா என்பது சந்தேகமே. என் மதிப்பீடலில் சுப்ரமணியத்துக்குப் பிறகே பருத்தி வீரன் வருகிறான்.  பாலுமகேந்திராவிடமிருந்து வந்தவர் பாலா. பாலாவிடமிருந்து அமீர். அமீரிடமிருந்து சசிகுமார் என்று வாழையடி வாழையாக பாலுமகேந்திரா பள்ளியிலிருந்து தரமான படைப்பாளிகள் உதிப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரின் பள்ளிகள் சாதிக்கமுடியாத ஒன்றை பாலுமகேந்திராவும் அவரது வழித்தோன்றல்களும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

 

என் ஞானத்தில் டூயட், ரொமான்ஸ், காதல் போன்ற எதுவும்  இல்லாத ஒரு தமிழ் சினிமா என்றால் அது பிரகாஷ் ராஜ் தயாரித்து சபா இயக்கிய நாம் மட்டும்தான். இத்தனைக்கும் அந்தப் படத்தில் அழகான ஒரு பெண்ணும் ஐந்து இளைஞர்களும் உண்டு. ஆனால் ஒரு இடத்தில்கூட கதாநாயகியைக் காதலுக்கும் காமத்துக்கும் பயன்படுத்தாத ஓர் அரிதான தமிழ் படமது. படத்தின் இரண்டாவது பாதி அற்புதமான த்ரில்லர். ஒரு சின்ன அதிர்வைக்கூட ஏற்படுத்தாத இந்தப் படம் ஏனோ என் டாப் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது

 

முதல் காட்சியில் சுசிகணேசன் கோடிட்டுக் காண்பித்த கதை வேறு. அதன்பிறகு படம் பயணித்த பாதை வேறு. இது ஒன்றே நான் ஃபைவ் ஸ்டாரை ரசிக்கப் போதுமானதாக இருந்தது. வெங்கட் பிரபுபோல இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமாகவே சுசிகணேசனை பார்க்கிறேன்.

 

அலைபாயுதேவைவிடவும் இளமையான படம் இதயத்தைத் திருடாதே. தெலுங்கு டப்பிங் படம் பார்க்கிறோம் என்கிற உணர்வைத் தராத ஒரு படம் இது. கதையின் பின்னணியில் அத்தனை சோகம் கப்பியிருந்தாலும் மணிரத்னம் முன்வைத்தது இளமையான காட்சிகளும் வசனங்களும். இதயத்தைத் திருடாதேவுக்கு நிகராக இன்னொரு இளமையான படத்தை அதன்பிறகு நான் பார்க்கவில்லை.


உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

 

கமல்-சண்டியர் பிரச்னை. கிருஷ்ணசாமியின் அழிச்சாட்டியத்துக்குக் கமல் பணிந்திருக்கக்கூடாது. சண்டியர் என்று பெயர் வைக்காததால் தமிழ்நாடு பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறதா என்ன?

 

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

 

வேறென்ன, சிறுவயதில் சத்யம் திரையரங்கில் பார்த்த மைடியர் குட்டிச்சாத்தான் தான். கதாபாத்திரங்கள் சுவற்றில் ஏறி நடக்க ஆரம்பித்தபோது நானும் அவர்கள்கூடவே கைபிடித்து நடக்க வேண்டும் என்று பேராசைப்பட்டிருக்கிறேன். இப்படியொரு படம் ஏன் இந்தக் கால தலைமுறையினருக்கு வாய்க்கவில்லை, அதாவது தமிழில்? 


தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?


ஒரு காலத்தில் எந்தப் பத்திரிகையை வாசிக்க நேர்ந்தாலும் முதலில் நான் சினிமா செய்திகளையே தீவிரமாக வாசிப்பேன். பிற்பாடு நானும் சினிமா செய்திகள் எழுதுவேன், சினிமாவை ஆராய்ச்சி செய்வேன் என்றெல்லாம் கனவிலும் எண்ணவில்லை. இப்போது நிறைய திருந்தி என் சிந்தனையோட்டங்களை வேறு வழியாக திசை திருப்பியிருந்தாலும் விகடனில் நமீதா எழுதும் தொடரையும் மறக்காமல் வாசிக்கவே செய்கிறேன். என்னச் செய்ய, தொட்டில் பழக்கம்!

 

விகடன் விமரிசனத்தை அவ்வப்போது ரசிப்பேன். அதுவும் படத்தைத் வாறும்போது விகடன் பயன்படுத்தும் மொழி படிக்கவே குதூகலமாக  இருக்கும் (சமீபத்திய உதாரணம் - ரித்தீஷின் ‘நாயகன்’). சிலவருடங்களுக்கு முன்பு கல்கியில் ஆர்.சி. ஜெயந்தன் எழுதிய விஷூவல்தாசன் விமர்சனங்கள் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல கனகச்சிதமானவை. தயவுதாட்சண்யம் பாராமல் வெளுக்கும் சாரு நிவேதிதாவின் சினிமா விமரிசனங்களைத் தவறாமல் வாசித்து வருகிறேன். உணர்ச்சி மேலோங்க எழுதும் எஸ். ராமகிருஷ்ணனின் சினிமா கட்டுரைகள்மீதும் எனக்குப் பிரியம் உண்டு.

 

அசோகமித்திரனின் சினிமா கட்டுரைகளுக்கு நான் பரம விசிறி. குறிப்பாக சினிமாவை முன்னிறுத்தி அவர் எழுதிய 'விழா மாலைப்பொழுதில்',  'மானசரோவர்' ஆகிய நாவல்களை அடிக்கடி வாசிப்பதுண்டு.


தமிழ் சினிமா இசை?


தமிழ்சினிமா இசை பற்றி என் இணையதளத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். கூடுதலாகச் சொல்வதென்றால் வைரமுத்து எழுதும் பாடல்களை விரும்பிக் கேட்பேன். இசை சுமாராக உள்ள பாடல்களைக்கூட வைரமுத்துவின் வரிகள் அதை நேர் செய்திருப்பதாக பல பாடல்களில் உணர்ந்திருக்கிறேன். ஆயுத எழுத்தில் பார்க் ஹோட்டலில் நிகழும் டிஸ்கோத்தே பாடலுக்கு வைரமுத்து ’யாக்கைத் திரி’ என்று சங்ககால வார்த்தையைக் கொண்டு முரண்பல்லவி எழுதியது அவருக்கேயுரிய தில்!

 

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

 
என்னைக் கைப்பிடித்து உலக சினிமாவுக்குள் அழைத்துச் சென்ற படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். அது அளித்த அதிர்ச்சியில்தான் நான் உலக சினிமாவிடம் என்னை முழுமையாக ஒப்படைத்தேன். ஏராளமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் டிவிடிக்களை விலைக்கு வாங்கி நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கிறேன். ஒருவர் உலக சினிமா என்கிற அற்புத உலகத்துக்குள் செல்ல இந்தப் படத்தையே வாசலாக எண்ணிக்கொள்ளலாம். கலைக்கு மொழி முக்கியமல்ல என்பதை இதுபோன்ற படங்களே அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

 

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

 

ஒருகாலத்தில் சினிமா நிருபராக இருந்தபோது தமிழ் சினிமாவில் பலரும் சுலபமாகப் பரிச்சயம் ஆனார்கள். ஆனால், ரெண்டு பேரும் புக் ஃபேர் போலாமா என்று ஒருமுறை நடிகை பூஜா என்னை அழைத்தபோது நான் அரண்டு போனேன். நானாவது நடிகையோடு அவுட்டிங் போவதாவது? ஒருவேளை அது நடந்து யாராவது புகைப்படம் எடுத்து பேப்பரில் வெளியிட்டு, அதை என் அம்மாஅப்பா பார்த்து..... கற்பனை தறிகெட்டுப் போனபோது என்னால் அந்நிகழ்வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் பூஜா இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸாக இருந்ததுவேறு என்னை நிமிடத்துக்கு நிமிடம் கலவரப்படுத்தியது. நல்லவேளையாக புரோக்ராம் கேன்சல் என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியபிறகுதான் நான் மூச்சுவிட்டேன். சிலபேர் எல்லாம் தள்ளி இருந்தால்தான் அழகு.  தானொரு சினிமாக்காரன் என்கிற உணர்வில்லாமல் அடுத்தவரோடு பழகும் ஒரே தமிழ் சினிமாக்காரர், கிரேஸி மோகன்.  சினிமாவில் அவரோடு மட்டும்தான் எனக்குப் பழக்கம் உண்டு. 


வருங்காலத்தில் நான் தமிழ்சினிமாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த நதி கோடம்பாக்கக்  கடலில் கலக்காமலா இருந்துவிடப் போகிறது?


 தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

 

தமிழ்சினிமாவில் புதியக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து தமிழ்ப் படங்கள் தவறாமல் உலகப் பட விழாக்களில் இடம்பெறும். ஈரான் படங்கள்போல தமிழ்ப் படங்களும் பெயர் வாங்கும். அமீரும் சசிகுமாரும் விதைத்த நம்பிக்கைகள் இவை.


அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

 

நல்ல கற்பனை. இதுவரை வந்த நல்ல படங்களைப் பார்ப்பதற்கே என் ஆயுள் போதாது என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல் நடந்தால் எனக்குப் பேரின்பமே. ஸ்போர்ட்ஸை யாராவது தடை செய்தால்தான் நான் அழுவாச்சி செய்வேன்.