இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே எப்போதும் நட்பு, காதல், சர்ச்சை எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது ஐபிஎல் உள்ளே நுழைந்து, சினிமாக்காரர்களை கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளாக்கி அவர்களைப் பீடத்தில் அமர வைத்திருக்கிறது.
சினிமா, கிரிக்கெட் இரண்டுமே மயக்கங்களை வாரியிறைக்கும் உலகம். நடிகைகள் கிரிக்கெட் வீரர்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் ஒருவரை பாய் பிரண்ட் ஆக்கிக்கொண்டால் அது அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று கருதுகிறார்கள். கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளின் சகவாசம் என்பது இன்றைக்கு அத்தியாவசமாகிவிட்டது. மன்சூர் அலிகான் பட்டோடி - ஷர்மிளா தாகூர், கபில்தேவ் -சரிகா, விவியன் ரிச்சர்ட்ஸ் -நீனா குப்தா, ரவி சாஸ்திரி - அம்ரிதா சிங், அசாருதீன் -சங்கீதா பிஜ்லானி, சவுரவ் கங்கூலி -நக்மா, யுவ்ராஜ் சிங்-கிம் சர்மா, தோனி-லஷ்மி ராய் என்று நீள்கிறது கிரிக்கெட்-சினிமா காதல் ஜோடிகளின் பட்டியல். சமீபத்தில்கூட, ஸ்ரீசாந்த் என் பாய்ஃபிரண்ட் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டு ஒரு நடிகை பெருமையடித்துக்கொண்டார். லஷ்மி ராய் என்கிற தமிழ் நடிகை தோனியுடனான காதல் செய்திகளாலேயே முன்னணி நடிகைக்குண்டான பிராபல்யத்தை அடைந்திருக்கிறார்.
கிரிக்கெட்டுக்கு எந்த ஒரு புறஈர்ப்புகளும் அவசியமில்லை. கிரிக்கெட் ஆட்டங்களில் கிடைக்கும் ரசமான அனுபவங்களே அதன் ரசிகர்களுக்குப் போதும். ஆனால் ஐபிஎல் வரவினால், வெளியே நின்று கிரிக்கெட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சினிமாக்காரர்கள் இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதிநிலையை அடைந்துவிட்டார்கள். அணித்தேர்வில் இருந்து ஆட்ட நுணுக்கங்கள் வரை அவர்களுடைய பங்களிப்பு நீள்கிறது. கொல்கத்தா அணியில் ஏற்பட்ட பல குழப்பங்களின்போது அதன் மையப்புள்ளியாக இருந்தவர் ஷாரூக்கான். கவாஸ்கரை ஷாருக்கான் விமரிசித்ததையும் அணியின் தொடர் தோல்விகளால் கடுப்பாகி அவர் தென் ஆப்பிரிக்காவை விட்டுக் கிளம்பி வந்ததையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். சினிமாக்காரர் முதலாளியானதால் உண்டான விளைவுகள் இவை.
கிரிக்கெட்டை மேலும் மெருகேற்ற இன்னமும் கூட்டம் சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபில் நிர்வாகம் சினிமா நட்சத்திரங்களையே அணுகுகிறது. தோனியும் ஹேடனும் பிளிண்டாப்பும் உள்ள ஓர் அணியைப் பிரபலப்படுத்த விஜய்யையும் நயன்தாராவையும்தான் அழைக்கப்படுகிறார்கள். கவர்ச்சி ஆட்டங்கள் மைதானங்களில் நிகழ்கின்றன. ஐயிட்டம் கேர்ள்ஸ் போல உடை அணிந்துகொள்ளும் பெண் கிரிக்கெட் தொகுப்பாளர்கள் கவாஸ்கர், ஜெஃப்ரி பாய்காட்டோடு சரிசமமாக அமர்ந்து கிரிக்கெட்டின் விஸ்தீரனங்கள் பற்றி அலசுகிறார்கள். ஆஸ்திரேலியாவிலோ தென் ஆப்பிரிக்காவிலோ இந்த நிலை இல்லை. சினிமாக்காரர்களை அவர்கள் அண்ட விடுவதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் நவீன சிந்தனையின் ஒரு வடிவமாக தன் செயல்களை நியாயப்படுத்துகிறது.
மைதானம், கிரிக்கெட் வீரர்கள், ஒளிபரப்பு எல்லாம் தரமாக அமைந்துவிட்டால் அந்த இடத்தில் வேறு எந்த வெளிப்பூச்சுக்கும் அவசியமில்லை. இவற்றில் ஓட்டைகள் இருப்பதால்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அநாவசியங்கள் அத்தியாவசமாக இருக்கின்றன. அத்தனையும் தாண்டி இந்திய கிரிக்கெட் பத்திரமாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.
(கல்கிக்காக எழுதிய கட்டுரை)