தமிழ்சினிமாவின் கருப்பு வெள்ளை நாயகர்கள், படைப்பாளிகள் என அத்தனை பேரும் மேடை நாடகங்கள் மூலமாகத்தான் அடையாளமும் தொழில் பயிற்சியும் பெற்றனர். ஆனால் இன்றைய தமிழ் நாடகங்களின் முகமே வேறு. 20-20 போல் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு விட்ட து. சர்வதேச தரம் இல்லாவிட்டாலும் மக்கள் அலைவரிசையோடு ஒத்துப் போயிருப்பதால் அதன் ஆயுள் நீடித்து இருக்கிறது.
முழு நீள நகைச்சுவை சினிமாக்களைக் கமலைத் தவிர வேறு யாரும் முயற்சிப்பதில்லை. தமிழ் சினிமாவின் இன்றைய வியாபார தளத்தில் கமல் இனியொரு மைக்கேல் மதன காமராஜனுக்கு முயற்சிப்பார் என்று கனவிலும் எண்ணமுடியாது. மும்பை எக்ஸ்பிரஸ் அவருடைய இறுதி காமெடிப் படமாக இருக்கக்கூடும். டிவி சீரியல்களில் நகைச்சுவை என்பது பெரிய கெட்டவார்த்தை. பத்திரிகைகளிலும் துணுக்குகளைத் தாண்டி நகைச்சுவையை எதிர்பார்க்கமுடியாது (ஆனந்த விகடனின் லூசுப்பையன் விதிவிலக்கு). இரண்டு மணி நேரம் எல்லாவற்றையும் மறந்து சிரித்தபடி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மேடை நாடகங்கள் மட்டும்தான் ஒரே வழி.
ஆனால் எஸ்.வி.சேகர் நாடகத்தை ஒருமுறை நாரதகானா சபாவில் பார்த்துக் கடுப்பாகிவிட்டேன். ஏதோ அதிமுக பிரசார நாடகம்போல இருந்தது. அதுதான் சேகரின் நோக்கம் என்றால் அதை அவர் அதிமுக மேடையில் அல்லது புரட்சித் தலைவி வீட்டின் முன்னால் நடத்தியிருக்கவேண்டும். பொதுமேடையில் வைத்து நிகழ்த்தியது தொழில் துரோகம். இத்தனைக்கும் அவருடைய நாட கங்களைக் கேசட்டுகளில் கேட்டு ரசித்திருக்கிறேன் ( பெரிய தம்பி). சேகரின் போக்கைக் கண்டித்து கல்கியில் எழுதினேன். பெரியப் பெரிய அரசியல்வாதிகளே தொழில் வேறு, அரசியல் வேறு என்று இருக்கும்போது நீங்கள் ஏன் இரண்டையும் முடிச்சுபோட்டு ரசிகர்களை ஏமாற்றுகிறீர்கள் என்று. இன்று சேகருக்குத் தன் தவறு புரிந்திருக்கும்.
கிரேஸி மோகன் வேறு ரகம். தன் நாடகத்தை யாருக்காகவும் அவர் வளைக்கமாட்டார். கமல் அவருக்கு ஜிகிரி தோஸ்து. ஆனால் அவர் நாடகங்களில் கமலுக்கு துதி பாடுவதோ ஏன் சினிமாவின் சிறு பாதிப்பு இல்லாமல்தான் அவர் நாடகங்கள் எழுதப்படும். முக்கியமாக துளி ஆபாசம் இருக்காது.
கல்கியில் கிரேஸி மோகன் கேள்வி் பதில் பகுதி ஒன்று வெளிவந்துகொண்டிருக்கிறது. அதன் 125வது வார விழா நேற்று தி நகரில் நடந்தது. விழாவில் கிரேஸி மோகனின் நாடகமான சாக்லேட் கிருஷ்ணாவும் மேடையேற்றப்பட்டது.
’நீங்களும் குக் உங்க ஊரும் குக்கா?’
’ஐ மீன் வாட் யூ மீன்..’,’ ஏன் எல்லோரும் மீன் மீனுங்கறா?’
’நாம நிறைய அனாதைக் குழந்தைகளை பெத்துக்கணும்ங்க’
’ஸ்வீட் நேம்?’ ’ஜாங்கிரி’. ’ஐயோ நான் உங்க பேரைச் சொன்னங்க’.
’உங்க முகம் ஃபுல்லா சிரிப்பு’. ’ஆமா. சிரிப்பு அங்கேதானே இருக்கும்’.
போன்ற ஒரு ஒருவரி அல்லது ஒரு வார்த்தை நகைச்சுவைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கிரேஸி மோகன். இன்றுவரைக்கும் அவர் நாற்காலிக்கு தமிழ் சினிமாவில் மாற்று கிடையாது. ஆனாலும் மோகன் டிராமாவை விட்டுக் கொடுப்பதில்லை. சென்றவருடம் புதிய நாடகம் ஒன்றை எழுதினார். சாக்லேட் கிருஷ்ணா. கிரேஸ் மோகனுக்குக் கிருஷ்ண அவதாரம். நாயகனுக்கு (மட்டும்) காட்சி தந்து அவன் கஷ்டங்களையெல்லாம் போக்கும் வேடம்.
பெரும்பாலும் இன்றைய தமிழ் மேடை நாடகங்கள் 80களில் பார்த்த தூர்தர்ஷன் நாடகங்களை நேரில் பார்ப்பதுபோலத்தான் இருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணாவில் புதிதாக கிருஷ்ணர் சில மேஜிக்குகள் செய்கிறார்). இன்றைய மேடை நாடகங்களுக்கு வசனங்கள்தான் மூலதனமே. இதனால்தான் மோகன், சேகரைத் தாண்டி புதியப் புயல்கள் இந்தத் துறையில் உருவாவதில்லை. மேலும் கிரேக்க துன்பியல் நாடகங்களின் தரத்தையும் கதை அமைப்பையும் இன்றைய தமிழ் நாடகங்களில் எதிர்பார்க்கக் கூடாது. தமிழ் மேடை நாடகங்களில் பரிமாறப்படும் உணவு வேறு. கிரேஸி பவனின் மெனு கார்டில் என்னென்ன பதார்த்தங்கள் பறிமாறப்படும் என்று அறிந்தே ரசிகர்கள் உள்ளே நுழைகிறார்கள்.
சாக்லேட் கிருஷ்ணாவில் ஒரு காட்சி. மாது வீட்டில் கிருஷ்ணர் இருக்கிறார். பூலோகத்தில் அவரைக் காணாமல் யசோதாவும் ராதாவும் மாது வீட்டுக்குப் போன் செய்கிறார்கள்! உடனே கிருஷ்ணரான கிரேஸி மோகன், ’நான் இல்லை என்று சொல்லிவிடு’ என்று பதறுகிறார். உடனே மாது, ’கிருஷ்ணா, நான் எப்படி உன்னை இல்லை என்பேன். அப்படிச் சொன்னால் அது நாத்திகம் ஆச்சே’ என்று மறுக்கிறார் (அபார வசனம்). ’அப்போ நான் ஆத்துல (வீடு) இருக்கேனு சொல்லிடு’ என்கிறார் கிருஷ்ணர். இந்த இடத்தில் மாது என்ன வசனம் பேசுவார் தெரியுமா?
’அப்போ, இதுதான் ஆத்திகம்!’
இப்படி நாடகம் முழுக்க வார்த்தை விளையாட்டுகள். பாதிகட்டத்தில் நாய்களை மனிதனாக மாற்றுகிறார் கிருஷ்ணர், ஹட்ச் நாய்க்குட்டி உள்பட. மனிதனாக மாறிய நாய்கள் பேசும் வசனங்களெல்லாம் அக்மார்க் கிரேஸி மோகன் பிராண்ட். ஹட்ச் மனிதர் பொருத்தமான காஸ்டிங். ஒரே பிரச்னை, ஒரு சிரிப்பு வசனத்துக்குச் சிரித்து முடிப்பதற்குள் அடுத்த இரண்டு காமெடி வசனங்கள் பேசி முடித்துவிடப்படுகின்றன.
விழாவில் கிரேஸி மோகனிடம் கல்கி வாசகர்கள் நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். கேட்ட அடுத்த நொடியே நகைச்சுவையாக பதில் சொல்லவேண்டிய கட்டாயம் கிரேஸி மோகனுக்கு. நன்றாகவே பதில் சொன்னார். (இரண்டு கஷ்டமான கேள்விகளுக்கு மட்டும் சாய்ஸ்ல விட்டுடறனே என்றார்)
’சார், சாக்லேட் கிருஷ்ணா மாதிரி பிஸ்கட் ராமா என்று ஒரு நாடகம் எழுதலாமே?’
’வேண்டாம் சார். அப்புறம் கம்மர்கட் கந்தன்னு தொடர்ச்சியா எழுதவேண்டியிருக்கும். வேண்டாம். வேண்டாம்.’
ஒரு சிறிய பெண் : ’அங்கிள், முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? எது முதலில் வந்தது?’
’முதலில் கோழிதான் வந்தது. முட்டை பின்னா ல் வருவதுதானே!’
’தமிழக முதல்வராக ஆசை உண்டா?’
அரசியல் கேள்வி என்பதால் ரொம்பவே சங்கடப்பட்டார் மோகன். சில நொடிகள் தாமதித்து...
’சார், அவங்களைவிட காமெடி பண்றவங்க வேற யாரும் இல்லை (பலத்த கைதட்டல்). அதனால நான் வேற எதுக்கு அரசியலுக்குப் போகணும்?’
நகைச்சுவை வசனம் எழுதும் தொழில்நுட்பம் பற்றி கிரேஸி மோகன் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். ’ஒரு ஹோட்டலில் ஒருவர் சாப்பிட வருகிறார். காபியில் ஈ விழுந்துவிடுகிறது. சர்வரைக் கூப்பிட்டுக் காண்பிக்கிறார். அதற்கு சர்வர் என்ன வசனம் பேசுவார். நான் தீவிரமா யோசிப்பேன். இதற்கான பதில் ஐநூறு சொல்லலாம். ஆனா எது எல்லோரையும் கவரும்னு கரெக்டா புடிக்கணும். அந்தப் புதையல் பதில் கிடைக்கிறவரைக்கும் மனசு விட்டுடக்கூடாது. முயற்சி பண்ணனும்’ என்பார். நேற்றைய விழாவிலும் அவர் இது தொடர்பாக பேசினார். ’மேரேஜ் மேட் இன் சலூன்’ நாடகத்தில் ஒரு காட்சி. சலூன்காரராக பொய்வேஷமிட்டு நடிப்பவரைப் பார்த்து ஒரு பெண் கேட்கிறார். ’உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே!’ இதற்கான சமாளிப்புப் பதில் ஆறு மணி நேரம் யோசித்தபிறகே கிடைத்தது.
’ நீங்க என்னைப் பார்த்திருக்கவே முடியாது. ஏன்னா நான் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்!’
கல்கி கேள்வி பதில் பகுதியில் சில கேள்விகள்.
’பாத்ரூம்ல செல்போன் அட்டெண்ட் பண்றங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?’
’நேச்சர் கால் அட்டெண்ட் பண்றவங்களா இருக்கும்.’
’கேர்ள் ப்ரண்ட், மனைவி என்ன வித்தியாசம்?’
’வீதிவரை கேர்ள் ப்ரண்ட். வீடுவரை மனைவி.’
’இதற்கு என்ன அர்த்தம்’ என்று விழாவில் பங்கேற்ற மதன் சிரித்துக்கொண்டே கேட்டார். ’அதாவது வொய்ஃபை வீதிக்குக் கொண்டு வந்துடாதீங்க என்று அர்த்தம்’ என்றார் மோகன். மதன் தொடர்ந்து சொன்னார்.
’என் நண்பர்களிலேயே பெண்களை சைட் அடிக்காத ஒரே நபர் கிரேஸி மோகன்தான். ஒரு பெண்ணைக்கூட அவர் சைட் அடித்தோ ஏன் ஓரக்கண்ணில் பார்த்து ரசித்ததுகூடக் கிடையாது. அப்படிப்பட்டவர் கேள்வி பதில் பகுதியில் பெண்களைப் பற்றி நிறைய எழுதியது உண்மையிலேயே ஆச்சரியம்தான்’.