ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

தினக்கூலி வீரர்கள்

 

வீரர்களோடு சேர்ந்து ரசிகர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக நல்ல ஓய்வு. அதீத கிரிக்கெட் பிரியர்கள் மட்டும் ஆஷஸ் ஆட்டங்களை ஒன்றுவிடாமல் கண்டுகளித்திருப்பார்கள். ஆனால் இனி அடுத்த சில வருடங்களுக்கு ஓய்வு என்பதே இந்தியக் கிரிக்கெட்டில் இருக்கப்போவதில்லை.  தினமும் ஷட்டரைத் திறந்து கடை வியாபாரத்தைத் தொடங்குவதுபோல இந்திய கிரிக்கெட் வாரியம் தன் வீரர்களிடமிருந்து தினசரி வருமானம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது.  ஒருநாள் போட்டித் தொடர்கள், 20-20 போட்டிகள், டெஸ்ட் மேட்சுகள், சேம்பியன் லீக், மீண்டும் ஒரு ஐபிஎல் அதற்குள் இன்னனொரு 20-20 உலகக்கோப்பை என வரிசைகட்டி நிற்கின்றன கிரிக்கெட் போட்டிகள். அரைநாள் இடைவெளி கிடைத்தாலும் அதிலும் ஒரு போட்டி நடத்திட வாரியம் துடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடந்த கார்ப்பரேட் கோப்பை நல்ல உதாரணம்.

 

இன்றைக்கு கிரிக்கெட் வர்த்தகம் தன் உச்சத்தில் இருக்கிறது. முதலீடு செய்பவர்களும் பார்வையாளர்களும் கிரிக்கெட்மீது வந்து விழுகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் டாலர்களில் அளக்கப்படுகின்றன. வீரர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆட்டங்களை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். டிவி சீரியல்போல மாறிவிட்டது கிரிக்கெட்.

 

தினமும் வீட்டுக்குச் சென்றால் நேரலையாக ஒரு கிரிக்கெட் ஆட்டம் பார்ப்பது என்பது பார்வையாளர்களுக்கு சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஆனால் கிரிக்கெட்டின் மூலாதாரமான வீரர்களை யாருமே எண்ணுவதில்லை.  இப்போது இலங்கையில் மூன்று நாடுகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் நடந்துகொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன் இந்தியா ஆடும் முதலிரண்டு ஆட்டங்களுக்கு இடையே தேவையான இடைவெளி விடப்பட்டிருந்தது. திடீரென்று கார்ப்பரேட் கோப்பை என்கிற ஒரு புதிய போட்டியைக் களமிறக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் கார்ப்பரேட் கம்பெனிகளில் கெளரவ பதவி வகித்துக்கொண்டிருந்த இந்திய வீரர்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் ஆளானார்கள். விளைவு, இலங்கை போட்டியில் மாற்றம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாள்களில் இரு போட்டிகளை ஆடவேண்டிய நிர்பந்தம் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டது. அதன் விலை என்ன என்று இப்போது தெரிந்துவிட்டது. கிட்டத்தட்ட தினக்கூலிபோல நடத்தப்படுகிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

 

கந்தசாமி, அந்நியன் போன்ற திரைக்கதாபாத்திரங்கள் மட்டுமே அநியாயத்தைத் தட்டிக் கேட்டு நாம் பார்த்திருக்கிறோம். முதல்முறையாக தாத்தா வேஷம், சேவல் வேஷம் எதுவும் போடாமல் டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் நிலவிவந்த ஊழல்களை வெளிஉலகத்துக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார் வீரேந்திர ஷேவாக். தனி ஆளாக ஒரு கூட்டத்தையே எதிர்த்து வெற்றி கண்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் இது புதிது.  ஷேவாக்போல தோனியும் இந்திய கிரிக்கெட் வாரியம் தவறு செய்கிற நேரங்களிலெல்லாம் நாற்காலியைப் பற்றிக் கவலைப்படாமல் கேள்வி எழுப்பவேண்டும். நிர்வாகத்தின் முடிவுகளில் கோளாறு இருந்தால் அதை மாற்றிக் காட்டுவதுதான் ஒரு நல்ல தலைவனின் அடிப்படைப் பண்பு. கிரிக்கெட்டுக்கு வெளியேயும் போராட, புதிதாக யோசிக்க தோனி கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும். கிரிக்கெட் பலவீனப்பட்டு விட்டால் வீரர்கள் ஏது? பணம், புகழ்தான் ஏது?

 

(இந்த வார கல்கிக்காக எழுதிய கட்டுரை)