ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

சேதன் பகத்தும் ரஜினிகாந்தும்

கண்ணன்,

 

உங்களின் "காந்தியின் போட்டியாளர்" பதிவை படித்தவுடன் தோன்றியது இதுதான். நானும் சுஜாதா மற்றும் சேதனின் ரசிகை தான். முதல் முறையாக "Five point someone" படிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தை கீழே வைக்க மனம் இல்லாமல் இரவோடு இரவாக படித்து முடித்தேன். எனக்கு முதல் புத்தகத்தை விட "one night @ call center"  பிடித்திருந்தது.

 

நீங்கள் சுஜாதாவை இவரோடு ஒப்பிடுவது என்னை பொறுத்த வரை சரியானதாக தோன்றவில்லை. அவரின் எழுத்து படிப்பவர்களை கட்டிப் போட்டுவிடும். வாசகர்களின் ரசனையை மாற்ற முயலும்.

 

ஆனால் சேதனோ பெரிதாக எதையும் செய்யாமல் அனைவரையும் அவரின் மிக எளிதான ஆங்கில நடையில் கட்டி போட்டு விடுகிறார். இவர்கள் இருவரும் வேறு வேறு. இவர்களை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது.

 

இதை படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு விஷயம், இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது, ரஜினி மற்றும் கமலை ஒப்பிடுவது போல்தான்.

 

கமல் உயிரைக் கொடுத்து அடுத்த தலைமுறைக்கு தமிழ் சினிமாவை எடுத்துச் செல்ல முயல்கிறார். ஆனால் இந்த மாதிரி ஒரு நோக்கம் இல்லாமல் தன் ஸ்டைலை மூலதனமாக வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ரஜினி. ரஜினியின் படங்கள் நல்ல பொழுது போக்கிற்கு மட்டும்தான். சினிமா மீதான ஆர்வத்தை அதிகமாக்க அல்ல. இதை கமலின் படங்கள் தான் செய்ய முடியும்.

 

என்னதான் ரஜினி எல்லோர் மனதையும் ஆக்கிரமித்தாலும், கமல் ஒரு படி மேலே நிற்கிறார் என்று யாராலும் மறுக்க முடியாது. கமலின் கடின உழைப்பும், எண்ணங்களும் ரஜினியைக்கூட பாராட்ட வைக்கும்.

 

அது மாதிரி தான் இதுவும். சுஜாதாவின் எழுத்து எல்லோரின் ரசனையை மெருகேற்றும். ஒரு நல்ல ரசிகனை உருவாக்கும்.  ஆனால் சேத்தனோ மிக இயல்பாக எல்லோர் மனதையும் கவர்ந்து விடுகிறார். இவர் புத்தகங்களை ஒரு பொழுது போக்கிற்காக படிக்கலாம். அவ்வளவுதான்.

 

என்ன செய்வது. கசப்பான உண்மை இதுதான். கஷ்டப்பட்டு ஒரு துறையை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்பவர்களைவிட, பொழுதுபோக்கை அள்ளிக் கொடுப்பவர்களே சீக்கிரம் மக்கள் மனதை அடைந்து விடுகிறார்கள்.

 

ராஜலஷ்மி

http://rajisays.blogspot.com/

 

 ****

ஹலோ கண்ணன்,

 

சேதன் பகத் நாவல்கள் குறித்து மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். இப்பொழுது தான் சுஜாதாவின் "எப்போதும் பெண்" வாசித்தேன்.என்ன ஒரு நாவல். ஆனால் திரைப்படமாக எடுக்க முடியாது. சுஜாதாவே அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். சிறிது நாட்களுக்கு முன் சாருவின் மொட்டைமாடி கூட்டப் பேச்சில் சொன்னதை போல இன்றைய இளைஞர்களின் வாசிப்பு குறைவு. அது சேதன் பகத்தின் நாவல்களைத்தான் கொண்டாடும்.

 

சுப்பராமன். 

http://nsraman.blogspot.com