ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
ஹம் ஆப்கே ஹைன் கெளன்...!

 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகள்மீது மையல் கொள்வது இயல்பான ஒரு காரியமாகி விட்டது. ஆனால் இதைத் தொடங்கிவைத்தது முகமது அசாரூதினோ கங்கூலியோ  கிடையாது.  இன்றைய யுவ்ராஜ் சிங், தோனி காதல்களுக்கு எல்லாம் முன்னோடிகள் உண்டு. கிரிக்கெட் என்பது இன்னொருவகை இலக்கியம் என்றால் அதில் காதல் இலக்கியங்களும் இடம்பெறவே செய்கின்றன.

 

இந்திய கிரிக்கெட்டிலும் பாலிவுட்டிலும் ஒருகாலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட காதல், கபில்தேவ் - சரிகாவுடையது. ரோமியுடனான காதல் முறிந்தபோது கபில்தேவ், சரிகாவை காதலிக்கத் தொடங்கியதாக செய்திகள் பரவின. இதற்கிடையே கபில்தேவின் குடும்பம் இந்தப் புதுக்காதலுக்கு அனுமதி கொடுத்த சமயத்தில் ரோமியுடனான காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார் கபில்தேவ். 1980ல் இருவரும் மணமுடித்துக் கொண்டனர். திருமணமாகி 16 வருடங்கள் கழித்து கபில்தேவ் - ரோமி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறகு சரிகா கமலை மணந்து அதன்பின் ஆன கதையெல்லாம் யாவரும் அறிவோம்.

 

விவியன் ரிச்சர்ட்ஸ் அடிக்கடி  இந்தியாவுக்கு  விஜயம் செய்தபோது எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அது எதற்கு என்று பிறகுதான் தெரியவந்தது. அப்போது இளம்நடிகையாக இருந்த நீனா குப்தாவுக்கும் ரிச்சர்ட்ஸூக்கும் காதல் அரும்பி அது குழந்தைவரை நீண்டுபோன விவகாரம் பத்திரிகைகள் வாயிலாகவே முதலில் தெரிய வந்தது.  நீண்டநாள் கழித்தே நீனா குப்தா   ரிச்சர்ட்ஸூடனான உறவை ஒப்புக் கொண்டார். தன்னால் ஒருபோதும் ரிச்சர்ட்ஸைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. நிச்சயம் எனக்கேற்ற ஆண்மகனைத் தேடவேண்டும் என்று பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நீனா குப்தா.  2008ல் டெல்லியைச் சேர்ந்த ஒருவரைக் கரம்பிடித்து மண வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டார்.   

 

இவர்களுக்கெல்லாம் முன்னுதாரணம் என்று மன்சூர் அலிகான் பட்டோடி - ஷர்மிளா தாகூரின் காதலைச் சொல்லலாம். ஆரம்பத்தில் சத்யஜித் ராயின் படங்களில் நடித்ததன் மூலமாக வெளிச்சம் பெற்ற ஷர்மிளா தாகூர் பிற்பாடு 60,70களில் ஹிந்தி திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகையானார். 1962ல், 21 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனானவர் பட்டோடி. நான்கு வருடம் முயன்று ஷர்மிளா தாகூரைக் கைப்பிடித்தார். 1969-ம்  ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய பெயரை பேகம் ஆயிஷா சுல்தான் என்று மாற்றிக்கொண்டார் ஷர்மிளா. இன்றுவரை ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய பிள்ளைகளான சாயிப் அலிகானும் சோஹா அலிகானும் பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள்.

 

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அர்விந்த் சாமியாக இருந்தவர் ரவி சாஸ்திரி. சுமாரான கிரிக்கெட் வீரராக இருந்தாலும் அவருடைய ஆதிக்கம் செலுத்தும் உடல்மொழியும் கூர்மையான கண்களும் ரசிகைகளை அவர்மீது பித்துப் பிடித்து அலையும்படி செய்தன. 1980களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் அம்ரிதா சிங். ரவி சாஸ்திரியைவிடவும் நான்கு வயது மூத்தவர்.
அம்ரிதா சிங்குடனான ரவி சாஸ்திரியின் முதல் காதல்  நிச்சயதார்த்தம் வரைக்கும் சென்று முறிந்துபோனது. அம்ரிதா சிங்கை மட்டுமல்ல டென்னிஸ் வீராங்கனை கேப்ரிலா சபாடினையையும் தான் காதலித்ததாகப் பின்னர் ஒப்புக்கொண்டார் ரவி சாஸ்திரி. பிறகு ரவி சாஸ்திரி ரிது சிங்கையும் அம்ரிதா சிங் சாயிஃப் அலிகானையும் காதலித்து மணந்துகொண்டார்கள். தன்னைவிட
12 வயது குறைவாக உள்ள சாயிஃப் அலிகானை அம்ரிதா சிங் மணந்துகொண்டது அன்று மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 2004ல் அம்ரிதா - சாயிஃப் ஜோடி பிரிந்துவிட்டது.

 

1980ம் ஆண்டின் மிஸ் இந்தியாகப் பட்டம் சூட்டப்பட்டவர் சங்கீதா பிஜ்லானி. சல்மான் கானுடனான காதல் தோல்வியில் இருந்த சங்கீதா பிஜ்லானிக்கு பெரும் ஆறுதலாக இருந்தார் முகமது அசாரூதீன். விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது பற்றிக்கொண்ட காதல் திருமணம் வரைக்கும் சென்றது. சங்கீதாவின் அழகுக்காக தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் பிரிந்தார் அசார். திருமணத்துக்குப் பிறகு ஆயிஷா அசார் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட சங்கீதா பிஜ்லானி, அசாரின் நெருக்கடியான சூதாட்ட விவகாரங்களின்போதும் உடன் இருந்தது அவர்கள் காதலை அழுத்தமாகச் சொல்லியது. இன்று தன் இரு மகன்கள் மற்றும் சங்கீதாவோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அசார்.

 

இந்திய கிரிக்கெட் - பாலிவுட் நவீன காதல்கதையை ஆரம்பித்துவைத்த பெருமை சவ்ரவ் கங்கூலிக்கு உண்டு. தன் பால்ய தோழியான டோனாவைத் திருமணம் செய்துகொண்ட கங்கூலி கேப்டனான பிறகு தன் திருமண திட்டங்களை மாற்றிக்கொண்டார். நக்மாவின் காதலில் விழுந்த கங்கூலி அவருடன் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்றதும் ஒருமுறை சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கு நக்மாவுடன் ரகசியமாக வருகை தந்ததும் அந்தச் சமயத்தில் பத்திரிகைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. கங்கூலியுடனான உறவு முறிந்தபிறகுதான் நக்மா இதுபற்றி வாய் திறந்தார். ஆனால் இன்றுவரை நக்மாவுடனான உறவு பற்றி அமைதி காத்துவருகிறார் கங்கூலி. நக்மாவின் தங்கை ஜோதிகா திருமணம் செய்துகொண்டபின்பும் நக்மா இன்னமும் திருமணம் செய்யவில்லை. ஆர்ட் ஆஃப் லிவிங் குழுமத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு புதுவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

 

தீபிகா படுகோனுக்கு முன்னால் யுவ்ராஜ் சிங் காதலித்த பாலிவுட் நடிகை, கிம் சர்மா. நான்கு வருடங்கள் காதலித்து பிறகு காதல் புளித்துபோய் இருவரும் பிரிந்துவிட்டார்கள். 'ஒரு பெண்ணுக்காக ஆண் துணை நிற்கவேண்டும். யுவ்ராஜின் பெற்றோர் என்னை வெறுத்தபோது அவர் எனக்காக பரிந்து பேசியிருக்கவேண்டும்' என்று காதல் தோல்வி குறித்து மனம் வருந்தினார் கிம் சர்மா. இதன்பின்பு , தீபிகா படுகோனை காதலித்தார் யுவ்ராஜ் சிங். பிற்பாடு அதுவும் கைகூடாமல் போனது. இதுபோன்ற நடத்தையால் அசிரத்தையாக இருந்து தனக்காகக் காத்துக்கிடந்த தலைமைப் பதவியைத் தோனிக்கு தாரை வார்த்துவிட்டார் யுவ்ராஜ் சிங்.    

 

இப்போது சொல்லவிருப்பது புதிய காதல். இங்கிலாந்துடனான இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்ய சென்றவாரம் சென்னை வந்திருந்தார் தோனி. தேர்வுக் குழு கூட்டம் முடிந்ததும் அவர் தாஜ் ஹோட்டலில் தங்கினார். இரவில் தோனியை நேரில் சந்திக்க  நடிகை லட்சுமிராய் ஹோட்டலுக்கு வருகை தந்த செய்தி உடனே அடுத்த நாள் தினசரிகளில் வெளிவந்தது.

 

பந்தோபஸ்து அதிகமாக இருக்கும் நிலையில் லஷ்மிராயை உள்ளேவிட காவல்துறையினர் மறுத்துள்ளனர். பின்னர் தோனியிடமிருந்து வந்த உத்தரவையடுத்து லஷ்மி ராய் உள்ளே போக அனுமதிக்கப்பட்டார். இரவு 12 மணிக்கு மேல் தோனி அறையிலிருந்து லட்சுமி ராய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.  

 

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடந்த போதெல்லாமல் தோனியின் ஆட்டத்தைப் பார்க்க லட்சுமி ராய் தவறாமல் வந்துவிடுவார். ஒரு முறை அவருக்கும் இன்னும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் பிறந்த நாள் விருந்தும் கொடுத்தார்.  விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தோனி தன்னை பைக்கில் அமரவைத்து சென்னை முழுக்கச் சுற்றினார் என்று கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் தோனி இதை மறுத்து இதுவரை எந்தப் பெண்ணும் என் பைக்கின் பின்னால் அமரவில்லை என்றார். அதன் நீட்சியாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

 

இதுகுறித்து தினத்தந்திக்கு லட்சுமி ராய் பேட்டி கொடுத்துள்ளார் -

 

வியாழக்கிழமை டின்னர் சாப்பிடுவதற்காக நான் தாஜ் ஹோட்டலுக்குச் சென்றேன். ஏராளமான போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதிகாரி ஒருவர் என்னிடம். எங்கே போகிறீர்கள், யாரைப் பார்க்க போகிறீர்கள் என்று கேட்டார்.

 

தோனியைப் பார்க்க வந்திருப்பதாகவும் அவருடன் விருந்து சாப்பிடுவதற்காக போகிறேன் என்றும் சொன்னேன். இதற்குள் தகவல் அறிந்த தோனி, லட்சுமி ராய் எனது ஸ்னேகிதி, உள்ளே விடுங்கள் என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். பின்னர்தான் உள்ளே விட்டார்கள்.

 

அவர் என்னை 'வருங்கால மனைவி' என்று குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. இருவரும் இதுவரை நல்ல நண்பர்கள். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

 

நான் உனக்கு என்ன உறவு என்று பத்திரிகைகள் வாயிலாக தோனியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் லஷ்மி ராய்.

 

சச்சின், திராவிட், லஷ்மண், ஷேவாக் ஆகிய வீரர்கள் ஒருபோதும் இதுபோன்ற காதல்   சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது கிடையாது. அதுவும் சச்சினின் குணத்தின்மீது இதுவரை நகக்கீறல்கூட படவில்லை. ஆனால் இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நடிகைகளை கேர்ள் ஃப்ரெண்டுகளாக வைத்துக்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. இருபது வயதில், வேண்டிய பணமும் புகழும் கெளரவமும் கிடைத்தபிறகு அன்னிச்சையாக மனம் நடிகைகளை நாடத் தொடங்கிவிடுகிறது. நடிகைகளின் சிநேகிதம் கிரிக்கெட் வீரர்களுக்கு இன்பக் கிளுகிளுப்பு ஊட்டுகிறது என்றால் கிரிக்கெட் வீரர்களை வளைத்துப் போடுவது நடிகைகளின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தொன்னைக்கு நெய்யும் நெய்க்கு தொன்னையும் ஆதாரம்.

 

தோனிக்கு அடுத்த ஒருவாரம்  சென்னையில்தான் ஜாகை. லஷ்மி ராயிடமிருந்து இன்னும் நிறைய    பேட்டிகள் வெளிவரும் என்று நம்பலாம்.