குபேரன்
ஒரே வாரத்தில் உலகின் இரண்டாவது தலைசிறந்த அணி என்கிற பெயரெடுத்து அந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்துத் தீர்வதற்குள் சொய்ங் என்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. ஸ்ரீலங்காவுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோற்றதால் உண்டான சறுக்கல். இப்போது மீண்டும் நியூசிலாந்துடனான ஒருநாள் போட்டியில் ஜெயித்து தன் வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறது.
ஒருவெற்றியை அடையக்கூட பெரிதாகப் போராட வேண்டிய நிலைமையில் இருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்தியாதான் இப்போது பழைய ஆஸ்திரேலிய அணிபோல எல்லா ஆட்டங்களிலும் வெல்லக்கூடிய அணியாகக் காட்சி தருகிறது. எல்லாப் பகுதிகளிலும் மாயம் செய்ததுபோல இந்திய அணியை நேர்த்தியான அணியாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தோனி. எப்படி சாத்தியமானது என்றால் அவர் கோச்சைக் கை காட்டுகிறார். கோச் தோனியைக் கை காட்டுகிறார். அணி வீரர்கள் இவ்விருவரையும் கை காட்டுகிறார்கள். ரசிகர்கள் ஒட்டு மொத்த அணிக்கும் பாலாபிஷேகம் செய்கிறார்கள். 83-ல் உலக கோப்பையை வென்ற அணிக்கு அடுத்த சிறந்த அணியாக தோனியின் பாய்ஸைக் குறிப்பிடலாம்.
அணியில் நிலவும் சுதந்தரம், கருத்து ஒற்றுமைகள் எல்லாம் ஆட்டக்களத்திலும் எதிரொலிக்கின்றன. எனக்கு மெண்டிஸ் பந்தை ஆடத்தெரியவில்லை. சச்சினிடம் சந்தேகம் கேட்டேன். அவர் எனக்கு ஆட்ட உத்திகளைக் கற்றுத் தந்தார் என்கிறா யுவ்ராஜ். எல்லாமே திட்டமிட்டு நடப்பவை. அதற்கு மாறாக யார் நடந்தாலும அவர்கள் அன்புடன் எச்சரிக்கப் படுவார்கள். சரியோ தவறோ கைவசம் ஒரு திட்டம் இல்லாமல் மைதானத்துக்குள் இறங்குவதில்லை. ஒரு திட்டம் தோற்றுப்போனால் உடனே கைவசமுள்ள மாற்றுத்திட்டத்தை (பிளான் பி) உடனடியாகச் செயல்படுத்துவேன் என்கிறார் தோனி. சென்னை டெஸ்ட் போட்டியின் போது யுவ்ராஜூக்கு வாய்வார்த்தையாக நிறைய ஊக்க மருந்துகள் வழங்கப்பட்டன. ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆடுவாயோ அதுபோலவே ஆடு என்கிற அறிவுரையின்கீழ் ஆடியதன் பலனை யுவ்ராஜூம் அணியும் அடைந்தது.
சரக்கு உள்ள கேப்டன், பக்குவமான பயிற்சியாளர், உத்திகள் தெரிந்த துணை பயிற்சியாளர்கள் (வெங்கடேஷ் பிரசாத், ராபின்சிங்) என்று அணியைச் சுற்றி வலுவான கோட்டைகள். திரைமறைவில் இருந்தாலும் வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துவீச்சு பயிற்சிகள் ஜகீர் கான், இஷாந்த் சர்மாவை சாமுராயாக மாற்றியிருக்கின்றன. இந்தியாவில் நடந்த சமீபத்திய இரு டெஸ்ட் தொடர்களில் அவ்விருவரும் மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டம் வாங்கியது நம்பமுடியாத சாதனை. ராபின் சிங்கின் ஃபீல்டிங் பயிற்சி பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அணியில் இடம் பிடித்துள்ள இளைஞர்கள் குழந்தைபோல புல்தரைகளில் உருண்டு மருண்டு பந்தைத் தாவிப் பிடித்து இப்போது ஃபீல்டிங் தரத்தையும் உயர்த்தி விட்டார்கள். அணியில் ஆல் ரவுண்டர்கள் இல்லாத குறையை ஜடேஜா தீர்த்துவைப்பார் என்கிற புதுநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அத்தனை செல்வமும் கொண்ட குபேரன்போல காட்சி தருகிறது இந்திய அணி. நியூசிலாந்திடம் 20-20 போட்டியில் தோற்றாலும் ஒருநாள் போட்டியில் வென்று தன் பலத்தை மீட்டுக் கொண்டு வந்து விட்டது. இந்த வருட இறுதியில் அதன் உண்மையான இடம் தெரிந்துவிடும்.
தென் ஆப்பிரிக்கா எதிர்பாராதவிதமாக முதல் டெஸ்டில் தோற்றிருப்பது இந்தியா-தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சுவாரசியமான போட்டியை உருவாக்கியிருக்கிறது. சமபலமுள்ள மூன்று அணிகள் கிரிக்கெட் களத்துக்குள் இறங்குவது இதுவரை அறிந்திராத ஒன்று. ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் அதை மிஞ்சக்கூடிய அளவுக்கு இரு அணிகள் (இந்தியா, தென் ஆப்பிரிக்கா) உருவாகியிருப்பது கிரிக்கெட் ஆரோக்கியமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது.