நான் தோனியை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறேன் என்று நிறைய பேருக்கு வருத்தம். பாராட்டுடையவர்களுக்குப் பாராட்டைச் சமர்ப்பிப்பதுதானே நியாயம். தோனி தலைமை தாங்காத மேட்சுகளில் இந்தியாவின் பாடு என்னவென்று தொடர்ந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனால் இப்போது தோனியின் எதிர் அணியில் நின்று கை நீட்டிக் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.
தோனி அவ்வப்போது முன்னாள் இந்திய கேப்டன்கள் மாதிரி சிந்திப்பதை தவிர்க்கவேண்டும். நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அறுநூறு ரன்கள் லீட் வரும்வரை ஆடிக்கொண்டிருந்தது சரியான போங்கு. நியூசிலாந்து மாதிரியான ஒரு அணியோடு அதுவும் நான்காவது இன்னிங்ஸை இவ்வளவு பாதுகாப்பு உணர்வோடு அணுகவேண்டுமா? ரைடரைத் தவிர சீட்டுக்கட்டு மாதிரி சரியும் ஒரு அணியிடம் போயா இப்படி தொடை நடுங்கவேண்டும்?
கிளைமேட்டை வைத்தெல்லாம் மேட்சை அணுகமுடியாது என்று சொல்கிறார் தோனி. ஆனால் இதே தோனிதான் ஒருநாள் போட்டிகளில் மழையை எண்ணி சில முடிவுகளை மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். மழை குறித்து முனவ் பட்டேல் யோசனை செய்யவேண்டியதில்லை. ஆனால் ஒரு அணியின் தலைவன் எல்லா சாதகபாதகங்களை அலசியாகவேண்டும். ஐந்நூறு ரன் லீட் கிடைத்தபோதே டிக்ளேர் செய்திருந்தால் 2-0 என்கிற பெரும்பான்மையில் தொடரை வென்றிருக்கலாம். தாக்குதல்தான் சிறந்த பாதுகாப்பு என்பார்கள். அதைப் பிரயோகப்படுத்த தோனி தவறிவிட்டார்.
இன்னொன்று, இந்திய அணி இன்னமும் ஃபீல்டிங்கில் மந்தமாகவே இருக்கிறது. ராபின் சிங்கினால் எந்தவித பெரிய மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை. கேட்ச் ஒன்று பறந்தால் உயிரைப் பிடித்துக்கொண்டு அதன் முடிவை அணுகவேண்டியதாக இருக்கிறது. வெங்கடேஷ் பிரசாத்தும் ராபின் சிங்கும் ஒரே பிராந்தியக்காரர்கள் என்பதால் வெற்றிக்கூட்டணியைப் பிரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் யோசிக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் இந்திய அணியில் உடனடி மாற்றம் ஒன்று தேவை என்றால் அது நிச்சயம் ராபின் சிங்கின் நீக்கம்தான்.
ஐபிஎல் போட்டியையும் 20-20 போட்டியின் மகத்துவத்தையும் எண்ணி வியந்து விஸ்டன் ஆசிரியர் எழுதிய கட்டுரையை முக்கியப் பதிவாக நினைக்கிறேன். 2008-ன் விஸ்டன் சிறந்த வீரராக ஷேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் என் கணிப்பில் 2008-ன் ஹீரோ என்றால் அது கெளதம் கம்பீர்தான்.