தில்ஷன் என்றொரு கோமாளி
கிரிக்கெட்டின் எல்லா நகாசு வித்தைகளையும் இந்திய கிரிக்கெட் அணி கற்றுக்கொண்டு வருகிறது. கட்டாயம் தோல்வி என்று இருந்த ஸ்ரீலங்காவுடனான 20-20 போட்டியைக்கூட இறுதியில் தட்டிச் சென்றது இதற்கு நல்ல உதாரணம்.
யுசுப் பதானை அன்றைய ஆட்டத்தில் பார்க்கிறபோது எனக்கு ரிச்சர்ட்ஸ் ஞாபகத்துக்கு வந்தார். அவர்தான் இப்படி பபிள்கம்மை மென்றுகொண்டே பந்துகளை அநாயசமாகப் பதம் பார்ப்பார். பயந்தாங்கொள்ளி என்று இந்திய அணியில் இப்போது ஒருவரைக் கூட சொல்லமுடிவதில்லை. எல்லோரும் சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைக்கத் தயாராக இருக்கிறார்ர்கள்.
ஸ்ரீலங்காவுடனான தொடரில்தான் நான் என் வாழ்நாளிலேயே மிக மோசமான அம்பரிங்கைக் காண நேர்ந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூவுக்காக அந்த ஸ்ரீலங்கா அம்பயரைக் கடுமையாகத் தண்டிக்கலாம். கிரிக்கெட் மைதானத்தில் கால் வைக்கவே அவர் லாயக்கற்றவர்.
இத்தனையும் தாண்டி நான் மிகவும் ரசித்தது 20-20 போட்டியில் தில்ஷன் கேப்டனாக செயல்பட்ட விதம். கிரிக்கெட் வீரர்கள் இதுபோல டென்ஷன் ஆவதை தெரு கிரிக்கெட்களில்தான் பார்த்திருக்கிறேன். வீரர்களின் ஒவ்வொரு பிழைக்கும் தில்ஷன் கோபத்தின் உச்சிக்குச் செல்வதும் வீரர்களைக் கடிந்து கொள்வதும் கையைக் காலை உதறுவதும் பார்க்க அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அட, சீக்கிரம் தில்ஷனை ஸ்ரீலங்காவோட முழுநேர கேப்டனாக்குங்கப்பா! இப்படியொரு கேரக்டரை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று!