மும்பை கலகங்கள் முடிந்துவிட்டன. காத்திருந்து இப்போது எல்லோரும் மீடியாமீது தாக்குதல் நடத்துகிறார்கள். தினமணி ஆசிரியர் தீவிரவாதிகளைவிடவும் அதிகமாக மீடியாவைத்தான் குற்றம் சாட்டுகிறார்.
நான் என்.டி.டி.வியைத் தவிர வேறு எந்த சானலையும் பார்க்கவில்லை. அதனால் இந்த விவாதத்தில் முழுமையாகப் பங்கேற்க இயலாமல் இருக்கிறேன். அதேசமயம் என்.டி.டி.வியில் காண்பிக்கப்பட்ட செய்திகளை ஆதாரமாக வைத்து தினமணி ஆசிரியர் கூறிய குற்றச்சாட்டுகள் சிலவற்றை என்னால் சுலபமாக மறுக்கமுடியும்.
குற்றச்சாட்டு 1 -
ஹோட்டலின் உள்ளேயும், இன்ன பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
என்னுடைய பதில் -
ஹோட்டல்களிலிருந்து தப்பித்து வந்தவர்கள் கூறியதிலிருந்து கிடைக்கும் தகவல் - 'தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் தொலைக்காட்சி இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது'. அதாவது வியாழன் காலையிலேயே தாக்குதல் நடந்த ஹோட்டல்களில் தொலைக்காட்சிகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஆகவே தினமணி ஆசிரியர் அச்சப்பட்டதுபோல தீவிரவாதிகளால் டிவி பார்த்து அதிலிருந்து புதுத்திட்டங்கள் வகுத்திருக்கமுடியாது.
மேலும் போருக்குச் சமமாக தாக்குதல் நடைபெறும் வேளையில் தீவிரவாதிகள் ஹாயாக டிவி பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்டிருப்பார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களை விடாமல் கமாண்டோக்கள் துரத்திக்கொண்டிருக்கும்போது எங்கே உட்கார்ந்து டிவி பார்ப்பது? மிஸ்டர் பீன் காமெடியில் வேண்டுமானாலும் தீவிரவாதிகள் டிவி பார்த்துக்கொண்டு அதற்கேற்றபடி காய்கள் நகர்த்தலாம்.
ஒருவேளை வெளியிலிருந்து அவர்களுக்குத் தகவல் அனுப்பப்படும் என்றாலும் டிவியில் காண்பித்ததைக் கொண்டு தீவிரவாதிகளால் ஆணிகூட பிடுங்கமுடியாது என்பதுதான் உண்மை. டிவியில் காண்பித்த காட்சிகள் அனைத்தும் சர்வசாதாரணமானவை. அவ்வப்போது ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தங்களும் ஜன்னல்கள் தீப்பிடித்து எரிவதும்தான் தொடர்ந்து விஷூவல்களாகக் காட்டப்பட்டன. இதில் என்ன பெரிய ரகசியம் கசிந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
குற்றச்சாட்டு 2
தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க இன்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், அதற்கேற்றாற்போல தங்களது அடுத்தகட்டத் திட்டங்களைத் தீட்ட முடிந்தது. தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் தப்பிக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டதைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கட்டடத்தையே தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
என்னுடைய பதில் -
கற்பனையான வாதம். முதலில் டிவி சேனல்கள் என்ன செய்தன என்று பார்க்கவேண்டும்? அவர்கள் ஹோட்டலுக்குள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டலுக்கு வெளியே அரை கிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் நிறுத்திவைக்கப்பட்டார்கள். டிவியைப் பார்த்து தீவிரவாதிகள் உஷாராகியிருப்பார்கள் என்பதெல்லாம் வறட்டு வாதம். உள்ளே என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் எந்த யோசனையும் கிடையாது. மேலும் இதுகுறித்து காவல்துறையினரும் எதுவும் தெரிவிக்கவில்லை. சில முக்கியமான நேரங்களில் என்.டி.டி.வி. தனது லைவ் நிகழ்ச்சியை நிறுத்திக்கொண்டது. அரசுக்கும் காவல்துறைக்கும் பாதகம் இல்லாமல் அதேசமயம் மக்களுக்கும் தக்க சமயத்தில் செய்தி போய்ச்சேரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியது. மீடியாமூலம் தீவிரவாதிகள் உஷாரானார்கள் என்று எந்த ஆதாரத்தில் தினமணி ஆசிரியர் சொல்கிறார் என்று தெரியவில்லை. இதனால் நாட்டுக்கு உண்டான நட்டம் என்ன?
குற்றச்சாட்டு 3
நியூயார்க் நகரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு நம்மை மெச்ச வைத்தது. பாதுகாப்புப் படையினருடன் கைகோர்த்து செயல்பட்டனர் பத்திரிகையாளர்கள். தேசிய அளவில் பீதி ஏற்படாமல் காத்தனர். ஆனால் மும்பையில் நமது பத்திரிகையாளர்கள் வெறும் வியாபாரிகளாகச் செயல்பட்டார்களே தவிர, பத்திரிகையாளர்களுக்கு உரித்தான பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.
என்னுடைய பதில் -
அமெரிக்கா அளவுக்கு இங்கு நாகரிகம் கிடையாதுதான். நான் என்.டி.டி.வி மட்டுமே பார்த்ததால் இதர டிவி சேனல்கள் இந்தச் சம்பவங்களை எப்படி அணுகின என்று தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை.
உலகளவில் நடந்த முக்கியமான போர்களையும் சம்பவங்களையும் பிபிசி டாக்குமெண்ட்ரிகளாகத் தயாரித்திருப்பதுபோல என்.டி.டி.வி.யும் தன்னுடைய மும்பை வீடியோ பதிவுகளை ஆவணமாக்க வேண்டும். அந்தளவுக்கு விரிவான தளத்தில் வைத்து தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அலசப்பட்டன.
பத்திரிகையுலகில் பேரும் புகழும் பெற்ற பிரனாய் ராய் தமிழ் சேனல்கள்போல இந்தப் பரபரப்பை வைத்துக்கொண்டு சும்மா கும்மியடிப்பார் என்று சொல்லிவிடமுடியாது.
குற்றச்சாட்டு 4
அரசு தவறு செய்யலாம். காவல்துறை தவறு செய்யலாம். நீதித்துறை தவறு செய்யலாம். ஆனால் இவர்களது தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை பெற்ற பத்திரிகைகள் தவறிழைப்பதா? தங்களுக்கிடையே உள்ள வியாபாரப் போட்டிக்காக தேசநலனை, நாட்டின் பாதுகாப்பை, பொதுமக்களின் உயிரைப் பகடைக்காயாக்குவதா? வெட்கக்கேடு!
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கையாலாகாத்தனத்தைவிடக் கொடுமையானது டெலிவிஷன் பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம்!
என்னுடைய பதில் -
அப்படியென்ன நாட்டுக்குப் பெரிய சேதாரங்களை மீடியா ஏற்படுத்திவிட்டது என்று புரியவில்லை. தீவிரவாதிகள் தினமணி படித்துவிட்டு அதற்கேற்றாற்போல தங்கள் திட்டங்களை தீட்டினார்கள் என்று சொல்வது எவ்வளவு சொத்தையாக இருக்குமோ அதுபோலவே மேலுள்ள குற்றச்சாட்டும்.
சேனல்கள் மட்டும் நிமிடம் தவறாமல் செய்திகளை வழங்காமல் இருந்திருந்தால் பொதுமக்கள் புரளிகளைத்தான் நம்பவேண்டியிருக்கும். உதாரணமாக நரிமன் ஹவுஸில் முதலில் தீவிரவாத தாக்குதல் முடிந்துவிட்டது என்று அருகில் இருந்த வேடிக்கை பார்த்த அத்தனை மக்களும் நம்பி விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். ஆனால் என்.டி.டி.வி.யின் பர்கா உடனே என்.எஸ்.ஜி அதிகாரியிடம் தகவல் கேட்டு நிலைமையை விளக்கினார். நரிமன் ஹவுஸில் என்.எஸ்.ஜியின் தாக்குதல் தொடர்கிறது என்பது என்.டி.டி.வியின் மூலமாகவே தெரியவந்தது.
மீடியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிதமாக வளர்ந்து கொண்டிருக்கும்போது தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் எல்லா சேனல்களும் துடியாய்த் துடிக்கும். அதுவும் போர்முனையில் நிற்பதற்கான தகுதியை வளர்த்துக்கொண்டிருக்கும் என்.டி.டி.வி செய்தியாளர்களால் தமிழ் சேனல்கள்போல ஆறிப்போன செய்திகளைத் தர மனம் இடம் கொடுக்காது. அவர்கள் துடிப்போடுதான் செய்திகளை முந்தித் தருவார்கள்.
தமிழ் சேனல்கள்போல ஒருபக்கம் சாய்ந்துகொண்டு செய்தி தயாரிக்கப்படவில்லை. நான் முன்பே சொன்னதுபோல இதே சம்பவங்கள் சென்னையில் நடந்திருந்து அதை சன், ஜெயா, கலைஞர் டிவிக்கள் மூன்றும் எப்படி பதிவு செய்திருக்கும் என்று ஒருநிமிடம் யோசித்துப் பார்க்கவேண்டும். அந்த நிலை ஆங்கில சேனல்களில் இல்லை. முடிந்தவரை அவர்கள் நடுநிலைமை வகிக்கிறார்கள்.
எது நடந்தாலும் அதைப் பதிவு செய்யும் மீடியாமீது ஏறிநின்று கும்மாங்குத்து குத்துவது வரவர அதிகமாகிவிட்டது. அதை நான் எதிர்க்கவில்லை. நானே என் பல பதிவுகளில் மீடியாமீது குற்றம் சுமத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது சொல்லப்படுவது ஏற்கத்தக்கதல்ல.
தீவிரவாத செயல்களை நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்யவேண்டுமா என்கிற கேள்வியில் நியாயம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு டிவி சேனல்கள் காசு சம்பாரித்தன என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் என்.டி.டி.வியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகவில்லை. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.
இன்றைய தினசரிகள் பெரும்பாலும் ஏதொவொரு அரசியல்கட்சிக்கு சார்பாக இருக்கின்றன. ஹிந்துவைகூட அப்பழுக்கற்ற மீடியா என்று சொல்லமுடியாது. செய்திகளின் அலசல் என்பது பெரும்பாலும் தினசரிகளில் குறைந்துபோய் விட்டது. தினமணி தவிர வேறு எந்த தமிழ் தினசரிகளிலும் தலையங்கம் கிடையாது. வார இதழ்களில்கூட கல்கியில் மட்டுமே தீவிரமாக நாட்டு நிலைமையை அலசுகிறார்கள். தினசரிகளைப் படித்து ஒருவர் பொதுஅறிவு வளர்த்துக்கொள்ள முடியும் என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாமல் போய்விட்டது. பார்த்திபனும் சீதாவும் பிரிந்ததை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது தினத்தந்தி. தமிழ் தினசரிகளின் போக்கு இப்படி இருக்கிறது! ஆனால் என்.டி.டி.வி. உள்பட பெரும்பாலான ஆங்கில சேனல்கள் எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அது பற்றிய செய்திகளை ஆழமாகப் பதிவு செய்கின்றன. அறிவு ஜீவுகளை வைத்து விவாதமும் நடத்திவிடுகின்றன. அரசியல் செய்திகளில் சேனல்களின் ஈடுபாடும் தீவிரமும் செய்தித்தாள்களுக்கு நிகராக இன்னும் ஒருபடி அதிகமாகவே இருக்கிறது என்றே சொல்வேன். இணையதளத்திலும் அவற்றின் பங்களிப்பு மெச்சத்தகுந்த வகையில் இருக்கிறது. ஆனால் தமிழில் இன்றுவரை சுடச்சுட செய்திகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் இணையதளம் கிடையாது. இதுபோன்ற மீடியாவின் மைனஸ்களை வேறொரு தளத்தில் வைத்துதான் விவாதிக்கவேண்டும்.
இந்தச் சம்பவங்களில் மீடியா எல்லைமீறியதாக தினமணி ஆசிரியர் கருதியிருந்தாலும் அது இறுதியாக விவாதிக்கப்பட வேண்டியதே.