ச.ந. கண்ணன்

ச.ந. கண்ணன்

ச்சோ ஸ்வீட் அம்பயர்!

 

ஒரு அம்பயரின் மரணச்செய்திகூட இவ்வளவுபெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.  பொதுவாக கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு ரசிகர்கள் அமைவது பெரும் கடினம். டிக்கி பேர்ட் தன் நுட்பமான தீர்ப்புகளால் நிறைய ரசிகர்களை உருவாக்கியிருந்தார். ஆனால் அவரை விடவும் டேவிட் ஷெப்பர்டுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அவர்கள்தான் இன்று ஷெப்பர்டின் மரணச்செய்தியை தன் சொந்த இழப்புபோல பாவிக்கிறார்கள்.

 

கிறிஸ்துமஸ் தாத்தா வடிவம் கொண்டவராக டேவிட் ஷெப்பர்ட் இருந்தாலும்  மைதானத்தில் அவர் ஒருபோதும் கேலிச்சித்திரமாக இருந்தது கிடையாது. கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு கழுகுக் கண்கள் வழியாகத் துல்லியமாகத் தீர்ப்புகள் வழங்குவார். தொழில்நுட்பம் கிரிக்கெட்டுக்கு நிறைய வசதிகள் ஏற்படுத்தித் தந்தாலும் அது அவ்வப்போது நடுவர்களின் மானத்தை வாங்கிவிடுகிறது. பத்துமுறை ரீப்ளே பார்த்துவிட்டு அம்பயரை கை நீட்டி குற்றம் சுமத்தும் உலகத்திலும் டேவிட் ஷெப்பர்ட் கண்ணியமாகவே தன் தொழிலைச் செய்தார். அப்படியும் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் மூன்று நோ பால்களைத் தவறவிட்டு விட்டார். அதற்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாக பல பேட்டிகளில் தன் தவறை எண்ணி வருந்தினார்.

 

மூன்று உலகக்கோப்பை இறுதி ஆட்டங்களில் அவர் நடுவராக இருந்திருக்கிறார். எந்த வீரரிடமும் எந்தவொரு கிரிக்கெட் வாரியத்திடமும் அவருக்குப் பிணக்குகள் இருந்தது இல்லை. அவர் மைதானத்தில் இருக்கும்போது எந்த ஒரு வீரராவது ஸ்லெட்ஜிங் செய்தால் உடனே ஆள்காட்டி விரலால் சம்பந்தப்பட்ட வீரரைக் கடுமையாகக் கண்டிப்பார். இறுதிவரை தன் முன்னிலையில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொண்டார் ஷெப்பர்ட். அதேசமயம் அவர் வேடிக்கையும் காட்டுவார். ஸ்கோர் 111 என்று இருக்கும்போது ஒற்றைக் காலைத் தூக்கி சில நொடிகள் நிற்பார்.  ஷெப்பர்டின் இந்த செய்கை பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

 

ஒருமுறை இந்தியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் ஜிம்பாப்வே வீர டைபு, பேட்-பேட் காட்ச் கொடுத்து ஷெபர்டின் தீர்ப்புக்குக் காத்திராமல் வெளியேறினார். அடுத்தநாள் டைபுவைச் சந்தித்த ஷெப்பர்ட், ’யங்மேன், நல்ல காரியம் செய்தாய். பந்து பேட்டில் பட்டதை நான் கவனிக்கவேயில்லைஎன்று வெளிப்படையாகப் பேசிப் பாராட்டினார். அப்போது டைபுவின் வயது 18.

 

பக்னர், ஹேர் என்று சண்டை, சச்சரவுகள் செய்த நடுவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர் வாழ்ந்து, முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார் என்பது கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அதிசயம்தான்.

 

(கல்கிக்காக எழுதிய கட்டுரை)