தோனி என்றொரு மனிதன்
தோனி இந்திய அணியை ஆஸ்திரேலியாவுக்கு நிகரான உயரத்துக்குச் அழைத்துச் சென்றபோதெல்லாம் பதுங்கு குழியில் இருந்தவர்கள் இப்போது தூசி தட்டிக்கொண்டு எழுந்துவிட்டார்கள். ஒரு துணியை இரண்டாகக் கிழிக்க முடியும். மனிதனை அப்படிச் செய்யமுடியுமா? தோனி விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலச் செய்தி சேனல்களைப் பார்த்தால் தமிழ் மெகா தொடர்கள் பார்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. அடித்தொண்டையில் இருந்து குரலை உயர்த்தி தோனியை கைமா செய்கிறார்கள். யார் தலைமேல் வைத்து ஆடச்சொன்னது? பிறகு ஒரே நாளில் உருவபொம்மை எரிக்கச் சொன்னது? விளையாட்டை விளையாட்டாக பார்க்காததன் விளைவுதானே இது.
ஐபிஎல்-லில் இருந்தே தோனியின் அணித்தேர்வு மோசமாகி விட்டது. இங்கிலாந்தில் தோனியின் மூளை பிசகும்போதெல்லாம் பயிற்சியாளர் கிரிஸ்டன் எந்த நந்தவனத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. நேற்றைய மேட்சில்கூட பவுலிங்கின்போது தோனியின் கேப்டன்சி அபாரமாகவே இருந்தது. தென் ஆப்பிரிக்காவை எத்தனை அணிகள் 130க்குள் அடக்கியிருக்கின்றன? ஆனால் பேட்டிங்கின்போது ஒரு கேப்டனால் என்ன செய்யமுடியும்? நாலுநாள் காய்ச்சலில் ஆடுவதுபோலவே இந்தப் போட்டி முழுக்க ஆடிவிட்டார் கம்பீர். ஐபிஎல்-லில் ஆடி ஆடி களைத்துப் போயிருக்கிறார் ரோஹித் சர்மா. சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஆடிய ரைனாவா இது? முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் இந்தக் கதியில் இருந்தால் ஒரு கேப்டன் என்ன செய்யமுடியும்? தோனியின் பேட்டிங் படுமோசமாகிவிட்டது. யுவ்ராஜ் சிங் என்கிற ஒரேயொரு ஆளை நம்பி களத்துக்குள் இறங்கினால் பதிலுக்கு கோப்பையா கிடைக்கும்?
பேட்டிங்கில் மட்டுமல்ல கேப்டன்சியிலும் தோனி அவுட் ஆஃப் பார்ம். கை கொடுக்க எந்த நாதியும் இல்லாமல் திண்டாடிவிட்டார். மேற்கு இந்திய அணியில் யாரும் கேய்லின் கண்ணசைவுக்குக் காத்திருப்பது கிடையாது. அவரவர் வாங்குகிற ஊதியத்துக்கு வஞ்சகமில்லாமல் வெறித்தனமாக ஆடுகிறார்கள். எல்லாப் புகழும் கேய்லுக்குச் செல்கிறது. அந்த அர்ப்பணிப்பும் பங்களிப்பும் இந்திய அணியில் இல்லாமல் போய்விட்டது.
இந்திய அணியில் அரசாங்க ஊழியர்போல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் ராபின் சிங். பீல்டிங் மோசமா, பார்க்குறேன்... பார்க்குறேன் என்கிற மனநிலையில் ஒரு பயிற்சியாளர் இருந்தால் யாருக்குப் பயம் வரும்? ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் இருந்தார். அப்போது மும்பை அணியில் இருந்த இந்திய வீரர்கள் எப்படியெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஃபீல்டிங் செய்தார்கள்! அந்தப் பயம் ராபின் சிங்கிடம் இல்லையே. மாமு, மச்சி சகோதரத்துவம் எல்லாம் வேலையில் எடுபடாது. ராபின் சிங்கின் இருக்கை பறிக்கப்படவில்லையென்றால் ஏழேழு ஜென்மத்துக்கும் இந்திய அணி இந்த லட்சணத்தில்தான் ஃபீல்டிங் செய்யும்.
இந்த இரண்டு வருட காலத்துக்குள் தோனி அடையாத வெற்றிகள் இல்லை. வேறு எந்த இந்திய கேப்டன்களும் செய்யாத சாதனைகள் அவை. யோசித்துப் பாருங்கள், இந்த உலகக்கோப்பையையும் தோனி வென்றிருந்தால் அவர் நிலைமை என்ன ஆயிருக்கும்? ஊர் முழுக்கக் தோனி பெயரில் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கும். கும்பாபிஷேகம், தீ மிதித்தல் என்று பெரிய அசிங்கமெல்லாம் நடந்து தொலைத்திருக்கும். தோனி என்னைக் காதலிக்கிறார் என்று டஜன் பாலிவுட், கோலிவுட் நடிகைகள் பேட்டி கொடுப்பார்கள். தெண்டுல்கர்கூட அனுவிக்காத பிராபல்ய வாழ்க்கையை தோனிமீது இச்சமூகம் திணித்திருக்கும். என்னைக் கேட்டால், இந்தத் தோல்வி மிக அவசியம் என்பேன். தோனி என்கிற வி.வி.ஐ.பி. வீரரை சமநிலையில் நிற்க வைக்கும். இன்னும் பலமாக யோசிக்க ஒரு தருணம். முக்கியமான ஒரு டெஸ்ட் தொடரில் தோற்று பாடம் கற்பதைவிட 20-20 தோல்வி எவ்வளவோ மேல்.
ஐபிஎல் என்கிற ஒரு பூதத்தால் உண்டான விளைவு இது. கிரிக்கெட் வீரர்களை தினக்கூலிகள்போல நடத்தியதற்கு கிடைத்த சவுக்கடி. இந்த லட்சணத்தில் இனி வருடத்துக்கு இரண்டு ஐபிஎல்கள் என்று மோடி பேசியிருக்கிறார். ஐபிஎல் குறித்து கிரிஸ்டன் வெளிப்படையாகப் பேசியது ஆரோக்கியமான போக்கு. கிரிக்கெட் வீரர்களை வீரர்களாக இல்லாமல் நுகர்பொருளாக பாவிக்கப்பட்டதன் விளைவை இந்திய கிரிக்கெட் வாரியம் சந்தித்துவிட்டது. ஐபிஎல் என்கிற சவுக்குக் கயிறைக் கொண்டு வீரர்களின் கழுத்தை நெறிக்க இனி யோசிப்பார்கள்.
எனக்கு தோனிமீது நம்பிக்கையிருக்கிறது. 20-20 தோல்வியை ஒரு பொருட்டாக எண்ணி சாணி அடிக்கமாட்டேன். பிராட்மேன், சச்சின், பாண்டிங் என்று கிரிக்கெட் மைதானத்தில் சறுக்கி விழாதவர் எவரும் கிடையாது. இப்போது தோனி. அவ்வளவுதான். சறுக்கல் ஒருபோதும் வீழ்ச்சியாகாது.