இந்தியாவின் சில்லறை வியாபாரம் 250 பில்லியன் டாலர்கள் (சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்). சுமார் ஒன்றரைக் கோடி குட்டிக் கடைகள் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆறு கோடிக் குடும்பங்களுக்குச் சில்லறை வியாபாரம் சோறு போடுகிறது - இவ்வாறு ஓர் ஆய்வில் இந்தியாவின் சில்லறை வியாபாரம் குறித்து மதிப்பிடுகிறது உலகப் புகழ் கொண்ட நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி.
அந்த ஆறுகோடிக் குடும்பங்களில் இப்போது தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது பிரபல அமெரிக்க பலசரக்கு நிறுவனமான வால்மார்ட். பஞ்சாபில் அதன் முதல் இந்தியக் கிளை திறக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ரிலையன்ஸ்போல நாடெங்கும் கிளைகள் பரப்ப தயாராகி வருகிறது, வால்மார்ட். ஆனால் அது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அதன் முதுகில் கல் விழுகிறது. இந்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஆல் இந்தியா கிசான் சபா, அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிர கன்ஸ்யூமர் கூட்டுறவு அமைப்பு, அகில இந்திய ட்ரேட் யூனியன் காங்கிரஸ், அப்னா பஸார் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் வால்மார்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. வால்மார்ட்டே வெளியே போ என்கிற கோஷம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதி கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ள வால்மார்ட் புத்தகத்தை அணுகவேண்டும்.
நூலை எழுதிய எஸ்.எல்.வி. மூர்த்தி. 1969 ல் அகமதாபாத் ஐஐஎம்-மில் எம்.பி.ஏ படித்து முடித்தவர். இந்தத் தகுதியில் இவர் கிழக்கின் மிகச் சிறப்பான நூல்களில் ஒன்றான ஐஐம் என்கிற புத்தகத்தை எழுதினார் (சேத்தன் பகத்தின் ’ஃபைவ் பாயிண்ட் சம் ஒன்’னில் ஐஐடி வாழ்க்கை கண்முன்னால் விரிந்ததற்குச் சமமான நூல் இது. ஆனால் மூர்த்தியினுடையது புனைவு நூல் அல்ல). கிழக்கில் தொடர்ந்து பிஸினஸ் நூல்கள் எழுதிவருகிறார் மூர்த்தி.
சரி, இப்போது வால்மார்ட்.
மூர்த்தி புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில் வால்மார்ட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறார். வால்மார்ட்டின் இந்திய மக்களுக்கு ஏன் மிகவும் அவசியமான ஒன்று என்கிற வாதத்தை முன்வைக்கிறார்.
எப்படி சத்யம் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு மிகவும் சுத்தமான சூழலை உருவாக்குவதில் அதன் அத்தனை ஊழியர்களும் மெனக்கெடுகிறார்களோ அதுபோல வால்மார்ட்டின் அணுகுமுறையே குறைந்த விலைக்கு தரமான பொருளைத் தருவதுதான். பகட்டான சூழலில் பொருள்களை விற்றாலும் குறைந்த விலை என்பதுதான் அவர்களுடைய மூச்சாக இருக்கிறது.
பஞ்சாப் அமிர்த்ஸர் நகரில் திறந்த வால்மார்ட் கடையின் முதல் அறிவிப்பு , “எங்களுடைய எல்லாப் பொருள்களின் விலையும் மொத்த வியாபாரிகளின் விலையைவிட இருபது சதவிகிதம் குறைவாக இருக்கும்.’ பிறகு ஏன் மக்கள் வந்து குவியமாட்டார்கள்?
வால்மார்ட் வரலாறு சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பரிணமளிக்கிறது. சாணக்கியர் சந்திரகுப்தருக்குச் சொல்லிக்கொடுத்த போர்முறைதான் வால்ட்டனின் வியாபார உத்தியும். எல்லைகளை முழுவதும் சுற்றிவளைத்தபிறகு மையப்பகுதியை ஆக்கிரமி.
அப்போதைய அமெரிக்க வியாபாரிகள் நகரங்களை மையமாகக் கொண்டுதான் வளரமுடியும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனால் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் புதிய பலசரக்குக் கடைகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால், சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடி என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை வால்ட்டனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் அவர் மனைவி ஹெலன். அதுபோல, வால்மார்ட்டை முதலில் சிறிய ஊர்களில் கொண்டுசென்று அங்கு தனக்கென்ற ஒரு வட்டத்தை உருவாக்கி, பிறகு மெட்ரோ சிட்டிகளுக்கு வந்து வியாபாரம் செய்தவர் வால்ட்டன். இன்று வால்மார்ட் உலகம் முழுக்கத் தன் கிளைகளைக் கொண்டுள்ளது.
வால்மார்ட்டைத் தொடங்கியபிறகு ஊழியர்களுடன் நெருங்கிப் பழகி தன் வியாபாரத்தை மேலும் விருத்தி செய்திருக்கிறார் வால்ட்டன். சேல்ஸ் மேனேஜருடன் பெட் வைப்பார் - இந்த மாதம் இவ்வளவுதான் விற்பனையாகும் என்று. ‘இல்லை, அதைவிட அதிகமாகும்’ என்று சேல்ஸ் மேனேஜர் ஒரு தொகையைச் சொல்ல தனக்குக் கீழே வேலை பார்க்கும் மேனேஜருடன் டீலா நோ டீலா ஆடுகிறார் வால்ட்டன். சொன்னதுபோலவே மேனேஜர் பெட்டில் ஜெயிக்கிறார். உடனே பெட்டில் சொன்னதை நிறைவேற்றும் விதத்தில் வால் ஸ்டிரீட் சாலையில் பெண் வேடமிட்டு நடனம் ஆடுகிறார் வால்ட்டன், சுற்றியும் ஆயிரக்கணக்கான வால்மார்ட் ஊழியர்களுக்கு மத்தியில்!
இதுபோல, புத்தகத்தில் சுவாரசியங்கள் நிறைய உள்ளன. மூர்த்தி எழுத்தாளர் மட்டுமில்லாமல் பிஸினஸ் நூல் எழுதுவதற்கான பின்புலம் கொண்டவர் என்பதால் வால்மார்ட்டின் வெற்றியை பல்வேறு கோணங்களில் அலசி, இறுதியில் வால்ட்டனின் வெற்றி ரகசியத்தை ஓர் அத்தியாயம் முழுக்கச் சொல்கிறார். அவருடைய சுவாரசிய மொழியில் எந்த ஒரு பக்கமும் போரடிக்கவில்லை என்பது பிஸினஸ் நூல்களில் காணமுடியாத ஒன்று. அதேசமயம் வால்மார்ட்டைத் தலைமேல் தூக்கிவைத்து ஆடாமல் அதன் குறைகளுக்கும் ஓர் அத்தியாயம் ஒதுக்கியிருக்கிறார்.
நம் வீட்டுக்கு அருகே ரிலையன்ஸ், மோர் போன்ற சூப்பர் மார்க்கெட் கடைகள் உள்ளதுபோல வால்மார்ட்டும் இடம்பெறாதா என்கிற ஏக்கம் புத்தகத்தைப் படித்துமுடிக்கும்போது உண்டாகிறது. தமிழின் மிகச்சிறந்த பிஸினஸ் நூல்களில் ஒன்றாக மூர்த்தி எழுதிய வால்மார்ட் வெற்றிக்கதை உருவாகியிருக்கிறது. பிஸினஸில் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் இந்நூலை நான் பரிந்துரை செய்கிறேன்.
உலகின் முதல் சிக்ஸ் பேக் நடிகர்
நான் ஒரு கத்துக்குட்டி - மிஷ்கின்
கிழக்கு (2008) - சிறந்த 10 புத்தகங்கள்