ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
செருப்பு

என் செருப்புகளில் ஒன்று நேற்று பிய்ந்து போனது. பேருந்து பிடிக்க ஓடும்போது அது தன் பலவீனத்தை காட்டிவிட்டது. நடுவழியில் செருப்பு பிய்ந்து போவதை விடவும் ஒரு ரோதனை எதுவும் இல்லை. பக்கத்தில் செருப்பு கடையோ செருப்புகளைப் பழுதுபார்க்கும் தொழிலாளியோ இருந்தால் ஆசுவாசமாகலாம். இரண்டில் ஒன்று பிய்ந்துபோனால் ஒரு செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு ஒற்றைச் செருப்போடு நடக்கமுடியாது. இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு வெறும் காலில் நடக்க மனம், மானம் இடம்கொடுக்காது. பிய்ந்ததைப் போட்டுக் கொண்டு நடந்தால் அதைவிடவும் ஒரு தர்மசங்கடம் எதுவும் இல்லை. ஆனாலும் என்னவாவது செய்து நிலைமையைச் சமாளிப்போம். நானும் அப்படித்தான் சமாளித்தேன்.

 

என் செருப்பு பிய்ந்தது என்று சொல்லமுடியாது. இரண்டாக, மேலும் கீழுமாக பிளந்துபோனது. பேருந்தைத் துரத்தியபோது செருப்பின் மேல்பகுதி காலோடு வந்துவிட்டது. எப்படியோ அதை கீழ்ப்பகுதியோடு பொறுத்தி எத்தி எத்தி நடந்து ஒருவழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

 

மதிய இடைவெளியில் டிடிகே சாலை சந்திப்பில் இருக்கும் செருப்பு தொழிலாளியிடம் சென்றேன். அங்கே இரு செருப்பு தொழிலாளிகள் இருந்தனர். அருகருகே. முதலில் யாரிடம் கொடுப்பது என்று சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களா? அல்லது தொழில் போட்டியாளர்களா? ஒருவேளை ஆட்டோ ஸ்டேண்ட் போல ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துக் கொள்வார்களா?  ஒருவரிடம் செருப்பை நீட்டினால் இன்னொருவர் என்னை மனத்துக்குள் வைவாரா? 

 

முதலில் அமர்ந்திருந்த பெரியவரிடம் செருப்பைக் கழற்றினேன். பக்கத்தில் இருந்தவர் சலனமில்லாமல் குனிந்தபடி எதையோ சரிபார்த்துக்கொண்டிருந்தார்.  பழுதான செருப்பை எடுத்து பெரியவர் முன்னால் வைத்தேன். மருத்துவர் உடலை ஆராய்வதுபோல சில நொடிகள் செருப்பை முழுவதுமாகப் பார்த்தவர் உடனே வேலையை ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்களில் அடிப்பகுதி முழுக்க தையல் போட்டு செருப்பைச் சரி செய்து கொடுத்தார். காலில் போட்டுப் பார்த்தபோது எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்தது.

 

'30 ரூபா' என்றார்.

 

'ஐயோ அதிகம்ங்க. 20 ரூபாதான்' என்று ஐம்பது ரூபாயை நீட்டினேன். பெரியவரிடம் சில்லரை இல்லை. சில்லரை மாற்ற சாலை எதிரே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அந்தச் சமயம் பார்த்து அருகே இருந்தவர் என்னிடம் சன்னமான குரலில் பேசினார்.

 

'சார், ஒரு ஜோடிக்கே முப்பது ரூபாதான் ஆகும். ஒரு செருப்புக்கு முப்பது ரூபாயெல்லாம் தராதீங்க.'

 

'ஓ! அப்டியா?'

 

'ரொம்ப அநியாயம் சார் இவன். இப்படித்தான் எல்லார்கிட்டயும் காசு புடுங்குவான். என்ன சம்பாதிச்சு என்ன சேத்து வெச்சான் சொல்லுங்க?'

 

சில்லரை மாற்றிக்கொண்டு என்னை நோக்கி நடந்துவந்தார் அந்தப் பெரியவர்.