ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
விடாக்கண்டன்

சென்ற வாரம் நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டத்தைப் பார்த்தவர்கள் இன்னமும் அதுஏற்படுத்திய பீதியிலிருந்து அகலாமல் இருக்கிறார்கள். அதுவும் ரோடிக்கின் அதிரடி ஏஸ்களை எதிர்கொண்டு, கடைசி செட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி வென்ற ஃபெடரருக்கு நிகர் இனி யாரும் இல்லை என்று  டென்னிஸ் உலகம் எக்காளமிடுகிறது. மாற்றுக் கருத்தே இல்லை.  அதுதானே, 15 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள் வென்றபிறகும் என்ன கேள்வி

 

ஃஃபெடரரின் கடந்த ஒருவருட கிராப்ஷீட்டைப் பார்க்கும்போது இதுவொரு மிகப்பெரிய சாதனை என்று எண்ணத் தோன்றுகிறது. சென்ற வருட விம்பிள்டன்  இறுதி ஆட்டத்தில் நடாலிடம் தோற்ற நாள் முதல் நிறைய பேரிடம் உதை வாங்கிவிட்டார் ஃபெடரர். சூரியனுக்கு அஸ்தமன காலம் என்று நேருக்கு நேராகவே அவர் விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து நடால், ஆண்டி முரே, ஜோகோவிக் ஆகிய மூவரும் இந்த வருட காலத்துக்குள் ஃபெடரருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். பீஜிங் ஒலிம்பிக்கிலும் அவரால் கால் இறுதி வரை மட்டுமே முன்னேறமுடிந்தது.  ஒரு போட்டியின் நடுவே கோபப்பட்டு ராக்கெட்டை தூக்கி  எறிந்தார். 237 வாரங்கள் நெ. 1 வீரராக இருந்த ஃபெடரர் துலாபார நிலைக்குத் தள்ளப்பட்டது பெரிய சோகம்.  சென்ற ஆண்டு இறுதியில் யு.எஸ் ஓபன்  கிராண்ட்ஸ்லாமை வென்ற ஃபெடரர், 2009 ப்ரெஞ்ச் ஓப்பன் போட்டிக்கு முன்பு நடந்த ஒரு ஏடிபி போட்டியில் நடாலைத் தோற்கடித்தார். அதுவும் களிமண் தரையில்.

 

அதுதான் திருப்பம். இந்த ஒரு மாத இடைவெளிக்குள் ப்ரெஞ்ச், விம்பிள்டன் என்று இரண்டு கோப்பைகள் அவர் வசம். அவர் பெற்ற பரிசுத்தொகை 240  கோடிக்கு வந்து நிற்கிறது.  

 

விம்பிள்டன் டென்னிஸுக்கு இருக்கும் வரலாறு போலவே அதன் ஆட்டங்களும் சரித்திரத்தில் இடம்பிடிக்கின்றன. விம்பிள்டனில் ஆண்டி ரோடிக்கைத் தோற்கடிக்க ஐந்து மணி நேரங்கள் ஆயின. விடாக்கொண்டனுக்கும் கொடாக்கண்டனுக்கும் நடந்த உக்கிரமமான  ஆட்டமாக அது வர்ணிக்கப்படுகிறது.  

 

டென்னிஸைவிடவும் உடல் உழைப்பைக் கோருகிற விளையாட்டு எதுவும் இல்லை. அப்படியொரு விளையாட்டில் கடந்த பத்து வருடங்களாக  சலிக்காமல் சாதித்துக்கொண்டிருக்கிறார் ஃபெடரர். வரலாற்று நாயகர்கள் ஒருபோதும் ஓய்வு எடுப்பதுமில்லை. சோர்வும் கொள்வதில்லை.

 

(இந்த வார 'கல்கி' இதழில் வெளியான என் கட்டுரை)