ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
புளிப்பு மிட்டாய்

 

நான் கிரிக்கெட் பற்றி எழுத ஆரம்பித்தாலே நிறைய பேர் பின்வாசல் வழியாக பயந்தோடி விடுகிறார்கள். இந்தியர்கள் பலருக்கும் கிரிக்கெட் என்றாலே வேப்பங்காய். அதையும் கிரிக்கெட்டை எழுத்தின் வழியாக பார்ப்பதென்றால் பலருக்கும் அலர்ஜி. இதனால்தான் தமிழில் கிரிக்கெட் பற்றிய எழுத்துக்கள் மிகக்குறைவாக இருக்கிறது. அசோகமித்திரன் கிரிக்கெட் பற்றி ஒரு புத்தகம் போட்டிருக்கிறார். அது எத்தனை பேருக்கு தெரியும்?

 

வாஸ்தவம்தான். தமிழில் கிரிக்கெட் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அப்படியும் எழுதுகிறவர்கள் எங்க காலத்துல என்று இன்னமும் பிஷன்சிங் பேடி, கபில்தேவ் புராணம் பாடுபவர்களாக இருக்கிறார்கள். தோனி என்ன செய்தாலும் ஏசுகிறார்கள். ஆஸ்திரேலியாவையே ஜெயித்து வந்தாலும் தெண்டுல்கர் அடிச்சதாலதான் இல்லாட்டி... என்று சாக்கு சொல்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் எவ்வளவு அருமையாக கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நாளெல்லாம் படித்துக்கொண்டிருக்கலாம். 

 

சென்னை சேப்பாகம் மைதான பிட்ச் வடிவமைப்பாளர் பார்த்தாசாரதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரொரு உண்மையைச் சொன்னார். பிட்ச் ரிப்போர்ட் என்று டிவிக்களில் கமெண்டேட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு. எத்தனைமுறை அவர்கள் சொல்வது நடந்திருக்கிறது? நன்றாக பேசுகிறார்கள். அதனால் குறைகள் வெளியே தெரிவதில்லை என்றார். கிரிக்கெட் பற்றிய எளிமையான புரிதலும் சூழல் அறிதலும் இல்லாததால்தான் தமிழில் கிரிக்கெட் பற்றி சரியாக எழுதுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இந்தக் குறையைப் போக்க நான் முயற்சிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து எழுதுவேன்.

 

****

 கங்குலிக்கு ஏன் இத்தனை ஈகோ என்று புரியவில்லை. தோனி தலைமையிலான அணிக்குத் தரவேண்டிய மரியாதையை இன்றுவரை கங்குலி கொடுத்தது கிடையாது.  இதுவரையிலான சிறந்த அணி என்று தெண்டுல்கர் சான்றிதழ் கொடுத்தபோதும் கங்குலியின் தராசுமுள் தோனியின் பக்கம் சாயவில்லை. ஓஹோ, நான் அப்படியொன்றும் நினைக்கவில்லையே  என்று மட்டமான தொனியில் பேட்டி கொடுக்கிறார். கங்குலி ஐந்து வருடங்கள் சாதித்துக்காட்டியதை தோனி இந்த ஒன்றரை வருடத்தில் செய்துமுடித்துவிட்டார். யாருக்கு வேண்டும் கங்குலியின் ஒப்புதல்?

 

இப்போது கங்குலி சம்பந்தப்பட்ட இன்னொரு பூசல். சென்ற வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்ன சாதித்தது என்று எல்லோருக்கும் தெரியும். தோல்விக்குப் பொறுப்பேற்று மரியாதையாக கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கவேண்டும். ஆனால் பட்டத்து அரசன்போல தனது இருக்கையிலிருந்து எழ அடம்பிடித்ததால் இப்போது அணிக்கு நான்கு கேப்டன்கள் என்கிற புதிய சித்தாந்த்தை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் புச்சனன்.

 

இப்போது மீடியா மத்தியில் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார் கங்குலி. இது என் கருத்து அல்ல, இது மற்ற வீரர்களுக்குத் தெரியாது என்று கருதுகிறேன், இது வெற்றி கொடுக்குமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும் என்று தன் அதிருப்தியை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டு கூடவே அரசியலும் செய்துவருகிறார். ஆனால் புச்சனனோ இல்லைங்க, நான் இதைப் பத்தி போனவருஷமே கங்குலிகிட்ட பேசியிருக்கிறேன் என்கிறார். ஆஸ்திரேலியர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவர்கள். கங்குலியின் பழமைவாதப் பேச்சுகள், போலி கெளரவம், மமதை போன்ற எதுவும் அவர்களைக் கவருவதில்லை. இதனால்தான் முன்பு கிரேக் சேப்பல், இப்போது ஜான் புச்சனன் என்று தொடர்ந்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களிடம் அவர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். 

 

தோல்வியை ஒப்புக்கொள்வதில் எல்லோருக்கும் சிரமம் இருக்கிறது. ஆனால் அணியின் நலம் கருதி கங்குலி தானே முன்வந்து சிம்மாசனத்தை அடுத்தவருக்கு வழங்கியிருக்க வேண்டும். ஏன் நான் மட்டும் செய்யவேண்டும் என்று கங்குலி கேட்கமுடியாது. அவருக்கு இரண்டு உதாரணங்கள்.

 

சென்ற வருடம் ஐதராபாத் ஐபிஎல் அணியின் ஐகான் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லஷ்மண். இந்தப் பதவியில் அமர்பவர்களே அணியின் அதிகபட்ச விலை கொண்ட வீரர் ஆவார். ஏலத்தில் அந்த அணி சார்பாக யார் அதிகமான விலைக்கு வாங்கப்படுகிறாரோ அவரை விடவும் ஒன்றரை மடங்கு தொகை ஐகான் வீரருக்கு வழங்கியாக வேண்டும். (இப்படியொரு விதிகளில் சிக்கியதால்தான் சச்சினால் இன்றுவரை அதிக விலைக்கு விலை போகமுடியவில்லை). ஆனால் லஷ்மண் என்ன செய்தார்? அணியின் நலனுக்காக ஐகான் வீரர் என்கிற பதவியிலிருந்து விலகினார். இதனால்தான் ஐதராபாத் அணியால் சைமண்ட்ஸ், கிப்ஸ், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய தலைகள் உள்ளே நுழையமுடிந்தது. இப்போது அந்த அணியின் தலைவராக கில்கிறிஸ்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். லஷ்மண் ஒரு சத்தம் எழுப்பவில்லை.

 

ராகுல் திராவிட் இந்திய அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய கதை எல்லோருக்கும் தெரியும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பிறகு ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டதால் அதற்குப் பொறுப்பேற்று தலைவர் பொறுப்பை உதறினார். இப்போது மீண்டும் இன்னொரு முறை தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். பெங்களூரு அணியின் கேப்டனாக பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறு சிராய்ப்பும் இல்லை.

 

பழங்கதை பேசிக்கொண்டு திரிவதால்தான் நம்மால் எதையும் உருப்படியாக சாதிக்கமுடிவதில்லை. சீனியர் வீரர்கள் ஒருநாள் அணிக்குத் தேவை இல்லை என்கிற தோனியின் துணிச்சலான எண்ணம் வேறு எந்த இந்திய கேப்டனுக்கு இருந்திருக்கிறது? அப்போது தோனியின் முடிவை கிழி கிழி என்று கிழித்தவர்கள் இன்று வாயை மூடிக்கொண்டிருக்கும் மர்மம் என்ன?

 

இந்தியா கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் கங்குலி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. அவர் கெளரவத்தை அவர்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சமகாலத்தில் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். எடுத்ததற்கெல்லாம் சிறுவன்போல கோபப்பட்டால் அது அவருக்குப் பாதகமாகவே அமையும். அமைந்துகொண்டிருக்கிறது.

 

உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. உழைப்பவனுக்கும் செய்கிற வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவனுக்கும் மட்டும்தான் மாலை, மரியாதை. நான் அன்று அதைச் செய்தேன். இதைச் செய்தேன் என்பதெல்லாம் புளித்த கதை. இன்று நீ என்ன செய்தாய்?