டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பாக சமீபத்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்தான் ஷாகீர் உசைனின் தபேலா தாண்டவத்தை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். ஏன் இதை ஆயிரம் பேர் மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆறு கோடி தமிழர்கள் மட்டுமல்ல, நூறு கோடி இந்தியர்கள்கூட அல்ல, மனிதப் பிறப்பு அடைந்த அத்தனை பேரும் பார்த்து பிரமிக்கவேண்டிய திறமை அல்லவா இது என்றுதான் அப்போது எண்ணினேன். தபேலாவை அவர் கையாளும் பாங்கு இசை உத்தியாக அல்லாமல் மாயவித்தைபோல இருந்தது.
ரஹ்மானுக்கு வரிசையாக விருதுகள் குவிந்து கொண்டிருக்கும் வேளையில் ஷாகீர் உசைனுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பே தாஜ் டீ விளம்பரம் மூலம் அத்தனை இந்திய இல்லங்களுக்கும் அறிமுகமானார் ஷாகீர் உசைன். இன்று சர்வதேச இசை நட்சத்திரமாக மிளிர்கிறார். மனிதருக்கு 57 வயதாம். உடலில் தேஜஸ் மின்னுகிறது.
உன் வாழ்வில் என்ன இன்பம் அடைந்தாய் என்று யாராவது கேட்டால் நான் அந்த இசை நிகழ்ச்சியைத்தான் சொல்வேன். ஷாகீர் உசைன், ஷங்கர் மகாதேவன், மாண்டலின் ஸ்ரீனிவாசன், சிவமணி என்று இசை வித்தகர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி அடுத்த வருடமும் தொடரும். தவறவிட்டவர்கள் அடுத்த டிசம்பர் சீஸனிலாவது அந்த இன்பத்தைக் கட்டாயம் அனுபவித்துவிடுங்கள்.