ச.ந. கண்ணன்

இந்திய ஹாக்கி அணி அதன் ஆட்டங்களுக்காக செய்திகளில் அடிக்கடி இடம்பெறுவது இல்லை. அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகள்தான் இந்திய ஹாக்கியை இன்னமும் ஞாபகம் வைத்துக்கொள்ள உதவுகிறது. 8 தடவை ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய ஓர் அணியின் வெட்கக்கேடான நிலைமைதான் இது.

 

இந்திய ஹாக்கி அணி பீஜிங் ஒலிம்பிக்கில் ஆட தகுதி பெறவில்லை. சென்ற ஆசியப் போட்டியிலும் முதல்முறையாக  ஒரு மெடலும் வாங்காமல் திரும்பியது. இந்த வருட உலகக்கோப்பையில் அது இடம்பெற்றதற்குக் ஒரே காரணம்,  போட்டி இந்தியாவில் நடக்கிறது. இப்படியொரு மோசமான நிலையில்தான் இந்திய ஹாக்கியில் புதிதாக ஒரு சர்ச்சை  கிளம்பியிருக்கிறது.  அர்ஜெண்டினாவில் நடந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்குத் வாக்குறுதி அளித்தபடி  செட்டில் பண்ணவேண்டிய பணத்தைத் தராமல் விட்டதால் பொறுமை இழந்த ஹாக்கி வீரர்கள் ஹாக்கி ஸ்டிக்கை கீழேபோட்டு விட்டு கலகத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். வாரியத்துக்கு எதிராக ஒரே அணியில் திரண்டு நியாயம் கோரி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  

 

இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பெறுகிறார்கள். ஆனால்  இந்திய ஹாக்கி வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் - வருடத்துக்கு 25,000 ருபாய். எங்களுக்கு ஒழுங்கான சம்பளமும்  பாதுகாப்பான நிலைமையையும் உருவாக்கித் தாருங்கள் என்று ஓர் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடவேண்டிய  வீரர்கள் இறைஞ்சிக் கேட்பது இந்திய ஹாக்கி நிர்வாகத்தின் சீர்கேட்டையே உணர்த்துகிறது.

 

1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியதுதான் இந்திய ஹாக்கியின் கடைசி தங்கமெடல். அதன்பிறகு  உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் மிக மோசமாகவே ஆடிவருகிறது இந்திய ஹாக்கி அணி. இதற்குக் ஒரே  காரணம், ஹாக்கி அமைப்பின் மோசமான நிர்வாகம்தான். 1991ல் சுல்தான் அஷ்லான் ஷா ஹாக்கிப் போட்டியை இந்தியா  வென்றபோது இந்திய ஹாக்கி ஃபெடரேஷனின் தலைவரிடம், 'அணியின் வெற்றிக்குப் பாடுபட்ட வீரர்களுக்கு என்ன  சன்மானம் வழங்கப்போகிறீர்கள்?' என்கிற கேள்வி கேட்கப்பட்டது. 'என்னது சன்மானமா? அவர்களுக்கு விமான டிக்கெட்,  தங்கும் வசதி எல்லாம் அளிக்கப்பட்டது. வேறென்ன வேண்டுமாம்?' என்று முகத்தில் அடித்தாற்போல பதிலளித்தார்  தலைவர் (இத்தனைக்கும் அவர் சொன்ன இரு வசதிகளையும் தனியார் அமைப்புகள் இந்திய அணிக்கு வழங்கியிருந்தன).

 

அந்த உதாரணம் ஒரு பதம்தான். சினிமாவின் உச்சநட்சத்திரம் அனுபவிக்கும் அத்தனை சகல வசதிகளும் இந்திய  கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளைத் தவிர வேறெங்கும் இந்தியக் கிரிக்கெட்  வீரர்களை தங்கவைக்க முடியாது.  ஆனால் ஹாக்கி வீரர்களின் நிலையைப் பார்க்கும் எவருக்கும் அவர்கள்மீது  பச்சாதாபம்தான் ஏற்படும். போட்டி நடக்கும் மைதானத்தில்தான் அவர்களுக்கு தங்கும் அறைகள் ஒதுக்கப்படும். ஆடுகிற  ஆட்டத்துக்குச் சம்பளம் கேட்டால் என்ன லஞ்சம் கேட்கிறீர்களா என்று சொற்களால் குத்திக்காட்டப்படுவார்கள். இப்படி ஒரு சூழலில் மாட்டிக்கொண்டதால்தான் இந்திய ஹாக்கியால் எழ முடியாமல் தொடர்ந்து படுத்தபடுக்கையாகவே இருக்கிறது.

 

2008ல் இந்திய ஹாக்கி அமைப்பின் செயலாளர் ஜோதிகுமரன் லஞ்சக் குற்றச்சாட்டுக்காக பணியில் இருந்து  வெளியேறினார்.  இதற்காக இந்திய ஹாக்கி அமைப்பைத் தடை செய்தது இந்திய ஒலிம்பிக் கவுன்சில். சென்ற வருடம்  ஹாக்கி அணியின் கேப்டனை நீக்கியதற்காக பயிற்சியாளர் ஜோஸ் ப்ராஸாமீது எதிர்ப்புக் குரல் தெரிவித்தார்கள்  வீரர்கள்.  இன்று சம்பளப் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. ஹாக்கி வீரர்களிடம் தங்கம் வேண்டும் என்று கேட்டால்  மட்டும் போதுமா? அவர்களைச் சொக்கத்தங்கம்போல பார்த்துக்கொள்ளவேண்டாமா?

 

(கல்கிக்காக எழுதிய கட்டுரை)