இவர்களுக்கு என்ன பிரச்னை?
ஐபிஎல் தொடர்பாக இந்திய அரசோடு பிசிசிஐ மோதுவதே வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்தியாவுக்கான தேசிய அணி அல்ல என்று ஒருகாலத்தில் பிசிசிஐ திட்டவட்டமாக சொன்னது. இன்றுவரை அது தன் கருத்திலிருந்து மாறவேயில்லை. ஆனால் இந்தியா என்று தன் அணிக்குப் பெயரிட்டு ரசிகர்களின் உணர்வுகளைக் கிள்ளி அதன்வழியாக நிறைய சம்பாதித்து வரும் ஓர் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம், பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென்று அரசுமீது குற்றச்சாட்டு சுமத்துவது அதன் இயலாமையின் காரணமாகவே என்று எனக்குத் தோன்றுகிறது.
ஐபிஎல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? உள்ளூர் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி அதன் மூலமாக இந்திய கிரிக்கெட்டை வளப்படுத்த வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்டதால் வளமாக வாழ்பவர்கள் வெளிநாட்டு வீரர்களே. தோனியை விட அதிக விலைக்கு அதாவது ஏழரை கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள் ஃபிளிண்டாப்பும் பீட்டர்சனும். ஐபிஎல் 20-20 போட்டிகள் என்பது முழுக்க முழுக்க பணத்தால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு. வீசப்படும் ஒவ்வொரு பந்தும் அடிக்கப்படும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸர்களும் பணம். லட்சங்களுக்குச் சமானம். தேசியம், கலாசாரம், மரியாதை, அனுபவம் என்று எந்தக் கூறுகளுக்கும் அங்கு இடம் இல்லை. பவுண்டரி அடிக்கப்பட்டவுடன் கம்பெனி பெயரைச் சொல்லி கமெண்டேட்டர்கள் பவுண்டரியைப் பாராட்டுவது அதன் அபத்தங்களின் உச்சம். கூடவே சீர் லீடர்ஸ், பிராண்ட் அம்பாஸிடர் என்று கிரிக்கெட்டுக்கு சம்பந்தமில்லாத நவீன அங்கங்களும். இன்று அரசை ஏசும் ஐபில் அமைப்பு ஏன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நாடவில்லை? கிரிக்கெட்டின் உள்ளே பல அரசியல்கள் கூத்துகளை அனுமதித்துவிட்டு இப்போது அதே அரசியலைப் பார்த்து கை நீட்டுவது அதன் பரிதாப நிலைமையே வெளிக்காட்டுகிறது.
வெளிநாட்டில் ஐபிஎல் நடக்கப்போகிறது என்று தெரிந்தவுடன் வெகுண்டெழுந்து காங்கிரஸூக்கு எதிராக பிஜேபி அறிக்கை வெளியிட்டது இன்னொரு சந்தர்ப்பவாத அரசியல். தேசிய அவமானம் என்று மோடியின் குற்றச்சாட்டுக்கு பழுத்த கம்பியில் காய்ச்சியதுபோல பதில் கொடுத்திருக்கிறார் சிதம்பரம் (நாங்களெல்லாம் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைத்தான் தேசிய அவமானம் என்று நினைத்துக்கொண்டுள்ளோம்). ஏற்கெனவே ஒரு தேர்தல் சமயத்தில் முக்கியமான அரசியல் தலைவரை இழந்திருக்கிறோம். பெருநகரங்களில்தான் பெரிய அரசியல் தலைவர்களெல்லாம் பிரசாரம் செய்வார்கள். மும்பை தாக்குதலையொட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. இத்தனை இக்கட்டுகளுக்கு இடையே ஐபிஎல் இந்தியாவில்தான் நடக்கவேண்டும் என்று பிசிசிஐ இத்தனை நாள்களாக மெனக்கெட்டது அறிவு சார்ந்த செயலாக இல்லை.
இவர்களுக்கு என்ன பிரச்னை? ஐபிஎல் இந்தியாவில் நடக்காவிட்டால்தான் என்ன? மைதானத்துக்குச் சென்று பார்ப்பவர்கள் சொற்ப ரசிகர்களே. சராசரியாக முப்பதாயிரம் ரசிகர்கள். ஆனால் டிவி வழியாகப் பார்ப்பவர்கள் பல கோடி பேர். ஆக, ஐபிஎல் எங்கு நடந்தாலும் டிவியில் ஒளிபரப்பாவதில் சிக்கல் இல்லாவிட்டால் எந்தச் சங்கடமும் இந்தியக் கிரிக்கெட் ரசிகனுக்கு ஏற்படாது. உலகக்கோப்பை எந்த நாட்டில் நடந்தாலும் விழித்திருந்து பார்ப்பதில்லையா! அதுபோல ஐபிஎல்-ஐ நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். மேலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆட்ட நேரங்கள் நமக்கு சாதகமானவை. நியூசிலாந்திலோ ஆஸ்திரேலியாவிலோ ஐபிஎல் நடந்தால்தான் அது பாதகமாக அமையும்.
இந்திய லோக்கல் போட்டி ஒன்று எல்லை தாண்டிச் செல்வதால் அதற்கு இப்போது புதிய ரசிகர்கள் கிடைப்பார்கள். அந்த ரசிகர் கூட்டம் அப்படியே அடுத்த வருடமும் ஐபிஎல்-ஐ எதிர்பார்க்கும். இதனால் ஐபிஎல்-லின் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் பலமடங்கு பெருகுவார்கள். இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஐபிஎல்-லுக்கு சமீபத்திய மாற்றங்கள் லாபகரமாகவே முடியும். பிறகென்ன?