ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
 பெருவிழா!

 

கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிக்கு நிகராக 2009 ஐபிஎல்- ஐ ரசிகர்கள் பரவசத்துடன் எதிர்கொள்கிறார்கள்.  அணிகளுடைய பலமும் உத்திகளும் இந்தமுறை பல பரிமாணம் கண்டிருக்கிறது. தயக்கமே இல்லாமல் சென்றவருடம் சோடை போனவர்களின் கழுத்தில் கத்தியை சொருகிவிட்டார்கள். தளர்ந்த கால்களுக்கும் பழமைவாத பேச்சுகளுக்கும் ஐபிஎல் -லில் இடம் கிடையாது. 

 

தென் ஆப்பிரிக்கா ஒரு விளையாட்டு தேசம். விளையாட்டு பிரக்ஞை உள்ள மக்கள் என்பதால் அங்கு நடக்கும் எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் மைதானம் நிரம்பி வழியும். ஐபிஎல் ஓர் இந்தியப் போட்டி என்றாலும் தென் ஆப்பிரிக்கா முழுக்க ஐபிஎல் அலை அடிப்பதை உணரமுடிகிறது. 

 

இந்த வருடம் சென்னை (ஊர் பாசமெல்லாம் கிடையாது), ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு (அல்லது மும்பை)  ஆகிய அணிகளுக்கு ஆதரவாக நான் பணம் கட்டத் தயார்.  ராஜஸ்தானோ டெல்லியோ இருவரில் ஒருவருக்குக் கோப்பை கிடைத்தால் நான் மனம் மகிழ்வேன். ஆனால் இதுபோல குறி சொல்பவர்களின் கண்ணில் மண்ணை வாரிப்போடும் பண்பு  கிரிக்கெட்டுக்கு உண்டு. ஆஸ்திரேலியா கடந்த ஒரு வருடமாகச் செல்லுமிடங்களெல்லாம் தர்ம அடி வாங்கும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்? தோனி இந்திய அணிக்கு இத்தனை பெரிய வெற்றிகளைக் கொண்டுவருவார் என்று நீங்களும் நானும் காத்திருந்தோமா? மொக்கை அணியாக வருணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று லோகத்தில் ஒருவராவது கணித்திருக்கமுடியுமா? வாழ்க்கையை சுவாரசியமாக்கும் இதுபோன்ற அசாத்தியங்கள் இந்த வருட ஐபிஎல்  லை எப்படி முடித்துவைக்கும் என்று பார்ப்போம். 

 

நல்லவேளை ஐபிஎல் இந்தியாவில் நடக்கவில்லை. நாட்டையே இரண்டாக்கியிருப்பார்கள். எஸெம்ஸ் போட்டி, இலவச டிக்கெட் அது இது என்று நம்மைச் செல்லும் இடங்களிலெல்லாம் துரத்தி காலரைப் பிடித்திருப்பார்கள்.  பாருங்கள், இப்போதும் குறைவில்லாமல் இன்றைய முக்கிய நாளிதழ்களின் முதல் பக்கத்தை ஐபிஎல் ஒரேடியாக விழுங்கியிருக்கிறது. ரிசஸன், ஆட்குறைப்பு, வருமான இழப்பு என்று இன்றைய பொருளாதார தேக்கத்துக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்கிறார்களே, அதன் சிறு பாதிப்பும் இல்லாமல் ஒரு நிறுவனமும் (பிசிசிஐ) போட்டியும் (ஐபிஎல்) இயங்குவது வினோதமாக இல்லை?