நட்சத்திரங்கள்
2008 ஐபிஎல் போட்டி முடிவடைந்தபோது யூசுப் பதான் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் வெற்றிக்கு மிக அத்தியாவசமானவர் என்று கண்டெடுக்கப்பட்டது. ரைனா என்கிற இளம் மனிதர் இவ்வளவு வலு கொண்டவாரா என்று அதிசயிக்கப் பட்டது. ஐபிஎல்-லில் ஓஜா ஹாட்ரிக் எடுத்தது இந்திய அணிக்குள் நுழையும் துருப்புச்சீட்டாக இருந்தது. மெக்ராத் போல வீசுகிறார் என்று சொல்லியே கோனியும் கூடாரத்துக்குள் நுழைந்தார். இந்த வருடம் சாதித்து இந்திய அணியின் எதிர்காலம் என்று பாராட்டுப் பெற்றவர்கள் யார் யார்?
மனீஷ் பாண்டே (வயது 19) - கர்நாடகா (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)
எப்படி ஒரு சிக்ஸர் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி எழுதியதோ அதேபோல மனீஷ் பாண்டே ஐபிஎல்-லில் அடித்த செஞ்சுரி அவருக்கு பெரிய கவனத்தைத் தேடிக்கொடுத்துவிட்டது. இளவயது திராவிடைப் பார்ப்பது போலுள்ளது அவரது டிரைவ்கள்.அடுத்த ரஞ்சி போட்டியுலும் முத்திரை பதித்தால் இந்திய அணிக்குள் ஒரு இருக்கை நிச்சயம்.
ஜகாதி (27) - கோவா - (சென்னை சூப்பர் கிங்க்ஸ்)
தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்து தன் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டார் ஜகாதி. முரளிதரனுக்கு இணையாக எதிரணியிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியத்தினார். பத்து வருடங்களாக முதல்தர கிரிக்கெட் ஆடியவருக்கு இப்போதுதான் மறுவாழ்வு. 2006ல் தேசிய அளவி நடந்த 20-20 போட்டியில் மிகக்குறைந்த ரன்கள் கொடுத்ததைப் பார்த்து சென்னை சூப்பர் சிங்ஸ் இவரைத் தேர்ந்தெடுத்தது. பியூஷ் சாவ்லா, ரொமெஷ் பவார், ஓஜா, ஜகாதி என்று நிறையவே நம்பிக்கை கொடுக்கிறது இளைய தலைமுறை.
கம்ரான் கான் (18) - உத்தர பிரதேசம் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
முதல்தர கிரிக்கெட் எதுவும் ஆடாத சென்னை 28 ரக வீரர்தான் கம்ரான் கான். எப்படியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேனேஜர் பார்வையில் பட்டு பிறகு அவருடைய ஒவ்வொரு விக்கெட்டையும் அஷாம்கர்க் கிராம மக்கள் கொண்டாடி தீர்த்தது என்று தினம்தினம் செய்திகளில் அடிபட்டார். ஆனால் அவருடைய சில பந்துகள் தவறான ஆக்ஷனைக் கொண்டிருக்கின்றன என்று பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். நல்ல பயிற்சியாளர்களால் கம்ரான் கானின் குறையை எளிதில் சரிசெய்துவிடமுடியும்.
சுதீப் தியாகி (21) - உத்தர பிரதேசம் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த தியாகியை விட்டுவிட்டு என்ன பெரிய காரணத்துகாக தோனி கோனியைத் தேர்வு செய்தார் என்று யாருக்குமே புரியவில்லை. தியாகியை அரையிறுதியில் ஆடவிடாதது தோனி செய்த பெரிய தவறு. சென்ற வருட ரஞ்சி போட்டியில் 41 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்த தியாகி இஷாந்த் சர்மாவுக்கு அடுத்து பேசப்படும் வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வருகிறார்.
இன்னும் சொல்லலாம். பாடியா, சங்வான் ( டெல்லி டேர்டெவில்ஸ்) வினய் குமார் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), சொஹல் (பஞ்சாப் கிங்க்ஸ் லெவன்). இந்தியத் திறமைகள் வெளிப்படவேண்டும். இதுவே ஐபிஎல்-லின் நோக்கம் என்றார் லலித் மோடி. ஐபிஎல் என்கிற அதிஅற்புத வாய்ப்பை தொடர்ந்து பெளலர்கள்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
(இந்த வார கல்கி இதழில் நான் எழுதியது)