ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
12 லட்சம்

 

ஐபிஎல் 2 நேற்றுமுதல் ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன் நடந்த அத்தனை சவசவ ஆட்டங்களையும் பயிற்சி ஆட்டங்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.  

 

ஐந்து நாள் என்பது ஐம்பது ஓவராகி அதுவும் குறுகி 20 ஓவருக்குள் முடிந்து இப்போது ஒரு ஓவரில் ஆட்டத்தின் முடிவைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நேற்று ராஜஸ்தான் அணி அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் வெற்றி கண்டிருக்கிறது. யுசூப் பதான் களத்தில் இருக்கும்போது ஸ்பின்னரை அனுப்புவது தற்கொலைக்குச் சமம்.  பொறுப்பை இஷாந்த் சர்மாவிடம் வழங்கியிருக்கவேண்டும். 

 

சென்ற வருட ஐபிஎல் போட்டியில் ஒரு இமாலய சேஸிங்கில் ராஜஸ்தான் அணியிடம் சென்னை அணி தோற்றது. நேற்று அந்த ஆட்டத்தின் இன்னொரு பிரதியைப் பார்க்கமுடிந்தது. சென்னை அணி இவ்வளவு விலை கொடுத்து பிளிண்டாப்பை வாங்கவேண்டுமா என்று ஆரம்பத்தில் நான் கேள்வி எழுப்பினேன். இங்கிலாந்து அணிக்காக எந்த ஓர் அதிசய மாற்றத்தையும் ஏற்படுத்தாத பிளிண்டாப், பீட்டர்சனால் சென்னை, பெங்களூர் அணிகளுக்காக மட்டும் என்ன பெரிய சொத்து சேர்த்துவிடமுடியும்?

 

பிளிண்டாபின் பேட்டிங்கைவிட பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம்.  முனைப்போடு பந்துவீசுவதுபோலத் தெரியவில்லை. போகிற வருகிறவர் எல்லாம் பிளிண்டாப்பை ஒரு சாத்து சாத்தத் தயாராக இருக்கிறார்கள். முதல்தர கிரிக்கெட் எதுவும் விளையாடாத உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது கம்ரான் கானை ராஜஸ்தான் அணியினர் 12 லட்சத்துக்கு விலை பேசி தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து வார்னே வைத்த நம்பிக்கைக்கு உரம் இட்டிருக்கிறார் கம்ரான். ஓர் அணி அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்குவதில் பத்திரிகைகளுக்கு வேண்டுமானாலும் ஒரு கிளுகிளுப்பு இருக்கலாம். ஆனால் செய்தியிலேயே இடம்பெறாத 12 லட்சம்தான் இறுதியில் காரியம் சாதித்துக் கொடுக்கிறது.

 

கங்குலியால் இந்திய அணியில் நிறைய இளைஞர்கள் தோன்றினார்கள். அவர்களால்தான் தோனி இன்று பழம் பறித்துக் கொண்டிருக்கிறார் என்றொரு பழி, பாவம் தோனிமீது உண்டு. ஆனால் கங்குலி அணியில் இடம்பெற்ற அத்தனை இளைஞர்களும் ரஞ்சி போட்டி உள்பட அத்தனை முதல்தரப் போட்டிகளையும் ஒரு கை பார்த்தவர்கள். கங்குலி இல்லாமல் மனிந்தர் சிங் கேப்டனாக இருந்திருந்தாலும் அவர்கள் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்கள். நின்று காட்டியிருப்பார்கள். ஆனால் கம்ரான் கானை வளர்த்து ஆளாக்கிய பெருமை எல்லாம் வார்னேவுக்குத்தான் போய்ச்சேரும். கம்ரான் இதுவரை எந்த ரஞ்சி அணியிலும் இடம் பிடித்ததில்லை. தச்சர் ஒருவரின் மகனான அவரை ஒரு 20-20 போட்டியில் பார்த்த ராஜஸ்தான் அணியின் ஆஸ்திரேலிய மேலாளர் டேரன் பெரி வார்னேவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். கம்ரானை அழைத்துச் சோதித்துப் பார்த்த வார்னே கம்ரானின் பந்து வீச்சில் பொறி இருப்பதை கண்டுகொண்டார். வார்னேவின் பார்வை எத்தனை கூர்மையானது என்பது நேற்று விளங்கியது.

 

தோனியின் அணித்தேர்வு தெளிவாக இல்லை. யாரும் இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துற என்றொரு வசனம் தமிழ் சினிமாவில் உண்டு. அணியின் திட்டத்தில் ஜொகிந்தர் சர்மாவின் பங்களிப்பு அப்படித்தான் இருக்கிறது. இந்தியா முதல்முறையாக பாகிஸ்தானுடன் 300 ரன்கள் சேஸ் செய்தபோது கனிட்கர் ஒரு ஃபோர் அடித்து வெற்றி தேடிக் கொடுத்தாரே ஞாபகம் இருக்கிறதா! பிற்பாடு கனிட்கருக்கும் இந்திய அணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் போய்விட்டது.  அவ்வாறு 20-20 உலகக்கோப்பை கடைசி ஓவரில் மிஸ்பா உல் அக்கை அவுட் செய்ததோடு ஜொகிந்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்று விட்டது. வெறும் ஒரு ஓவர் மட்டும் வீச  ஒரு வீரர் தேவையா? விஜய்யைத் தேர்வு செய்திருந்தால் பேட்டிங்காவது இன்னும் கொஞ்சம் வலு அடைந்திருக்கும்.

 

பத்ரிநாத் தன்னை நிரூபித்து நிரூபித்து சோர்வு அடைந்துவிட்டார் என்றுதான் எண்ணுகிறேன்.  ஐபிஎல்-லில் பத்ரிநாத்துக்குத் தோல்வி கிடைத்தால் இனி எழுவது கடினம். புஜாரா, விஜய், முகுந்த், நாயர் என்று இந்திய அணியில் நுழைய இப்போது நிறைய பேர் முண்டியடிக்கிறார்கள்.

 

அடுத்த ஆட்டத்திலும் பிளிண்டாபின் பந்துவீச்சும் பேட்டிங்கும் பல் இளித்தால் தோனி கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்படுவார். ஓரமை உள்ளே நுழைத்து பிளிண்டாப்பை வெளியேற்றும் துணிவு தோனிக்கு உண்டா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.