பத்து நாள்கள் ஆகி கால்வாசி ஆட்டங்கள் முடிந்துவிட்ட இந்த நிமிடத்தில் ஐபிஎல் தனது இயல்பான பரபரப்பு நிலையை எட்டிவிட்டது. முக்கியமாக தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஐபிஎல் மிகவும் பிடித்துவிட்டது. வருடாவருடம் ஏப்ரம் மாதத்தில் இந்தியாவில் தேர்தல் நடக்கட்டும் என்று மைதானத்தில் தட்டி பிடிக்கிறார்கள்.
அதே அணிதான். ஆனால் இந்த வருடம் மட்டும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் எல்லோரும் துறுதுறுவென இருக்கிறார்கள். 20-20 க்கு இந்த குணாதிசயம் அவசியம். டெல்லிக்கு தில்ஷன், டிவில்லர்ஸ் என்றொரு இரு வைரங்கள் கைகோர்த்துக்கொண்டு அணியின் எல்லா இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி விடுகின்றன. பஞ்சாப், சென்னை, ராஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த இரு இடங்களுக்கான போட்டி நடக்கலாம். சென்னை இந்த வருடம் கவிழ்ந்துவிடுமோ என்று ஒருபக்கம் பயம் இருக்கவே செய்கிறது.
கம்ரான் கானை நேராக இந்திய அணிக்குள் நுழைத்துக் கொள்ளலாம். இரண்டு வருடங்கள் அவரை இந்திய பிட்சுகளில் முதல் தர கிரிக்கெட் ஆடவைத்து முதுகொடிய வைத்து அநியாயமாக ஒரு திறமையை வீணடித்துவிடவேண்டாம். மெண்டிஸ் ஆரம்ப புதிதில் ஏற்படுத்திய பரபரப்பையும் விநோதத்தையும் கம்ரானும் உண்டாக்குகிறார். இவர் பந்தை அணுகுவது கடினமாகத்தான் இருக்கிறது என்கிறார் சங்ககரா.
பெங்களூரு அணிக்கு மட்டும் சனியன் விடமாட்டேன் என்கிறது. ஜெயிக்கவேண்டிய ஆட்டங்களையெல்லாம் கால்கள் இடைவெளியில் நழுவவிடுகிறார்கள். லூஸிங் ஈஸ் எ ஹாபிட் என்பது இங்கே நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. பீட்டர்சனைப் பார்த்தால் கோபம் வருவதற்குப் பதில் ஆறுதல் சொல்லவே மனம் விரும்புகிறது. மிகப்பெரிய நிர்வாகி என்று சொல்லப்பட்ட ஷேன் வார்னேகூட வட்சன், தன்வீர் இல்லாமல் இந்தமுறைத் திண்டாடும்போது திறமை குறைந்தவர்களை வைத்துக்கொண்டு பீட்டர்சனால் இவ்வளவுதான் சாதிக்க முடியும். இன்னும் சில நாள்களில் பீட்டர்சன் நாட்டுப் பணிக்காக தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிவிடுவார். பிறகு பெங்களூரூ அணி என்ன செய்யப்போகிறது என்று யோசிக்கக்கூட வேண்டாம்.
பி.கு - கிரிக்கெட் பார்ப்பதே பிடிக்காது அதுவும் அதைப் பற்றி எழுதினால் இன்னுமுமே பிடிக்காது என்று எண்ணுபவர்கள் சில வாரங்கள் இந்தப் பக்கமே வரவேண்டாம். நானே பேடும் கிளவுஸும் மாட்டிக்கொண்டு எழுவதுபோலத்தான் உணர்கிறேன். பிறகு?