ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
வெண்பொங்கல்

 

கெட்ட கனவில்கூட இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கக்கூடாது. மற்ற அணிகளெல்லாம் மைதானத்தில் அதகளம் பண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் வெண்பொங்கல் உண்டதுபோல பாதி மயக்கத்தில் ஆடிவருகிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் (செசூகி). சென்ற வருடம் காணப்பட்ட துடிப்பில் சிறு சதவிகிதம்கூட இந்தமுறை இல்லை. ஹேடன் தவிர யாருக்கும் ஒரு முனைப்பு, அர்ப்பணிப்பு இல்லை. மற்ற அணிகளில் யாராவது ஒருவர் பொறுப்பாக  இருபதாவது ஓவர் வரைக்கும்  நின்று ஆடும்போது இங்கு மட்டும் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டே ஒவ்வொருமுறையும் வாய்ப்பை கோட்டை விடுகிறார்கள்.

 

இந்த 20-20 போட்டி முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கானது. ஒப்புக்கு ஸ்பின் போடவருகிறவர்கள்கூட நான்கு ஓவர் முழுமையாக வீசுவதை நேற்று பார்த்தோம். அல்லது மலிங்கா, கம்ரான் கான்போல அதிவிரைவு வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் பிழைக்கலாம். மற்றபடி இந்த இரண்டிலும் இல்லாத மீடியம் ஃபாஸ்ட் பெளலர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிடலாம். ஆனால் பாருங்கள், செசூகியில் உள்ள அத்தனை பேரும் மிதமாக பந்து வீசுபவர்கள். சரி என்று ஓரம், மார்கலை கழற்றிவிடமுடியாது. பேட்டிங்கில் பதினைந்து ஓவருக்குப் பிறகு இவ்விருவரை நம்பித்தான் செசூகி இருக்கிறது.

 

பத்ரிநாத், பாலாஜி, கோனி, ஜொகிந்தர் சர்மா ஆகிய நான்கு பேருக்கும் கல்தா கொடுத்துவிடலாம். பர்தீவ் படேலுக்கு இன்னொருமொரு வாய்ப்பு வழங்கலாம். நான்கு ஆட்டங்களிலும் தோனியின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. ஹேடன் முட்டை வாங்கிக்கொண்டு போனால் ஐம்பது ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகக்கூடிய அபாயம் காத்திருக்கிறது.

 

செசூகி அரையிறுதிவரை முன்னேறும் என்றெல்லாம் இப்போது கனவு காண நான் தயாராக இல்லை. அதற்கு குறைந்தது ஏழு வெற்றிகளாவது தேவை. மீதமுள்ள ஒன்பது ஆட்டங்களில் ஆறை இந்த அணி வெல்லும் என்று உங்களில் ஒருவராவது நம்பிக்கை வைக்கிறீர்களா?  பிராந்திய அபிப்ராய பேதங்கள் இன்றி  ஐபிஎல்-ஐ ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.