திண்ணை காலியில்லை
பத்ரிநாத்தை ஓபனிங் அனுப்பியபோது அட, தோனி இவ்வளவு நகைச்சுவை உணர்வு கொண்டவரா என்றுதான் எனக்குத் தோன்றியது. சென்ற ஐபிஎல்-ல் தன் திறமையை நிரூபித்த பத்ரிநாத்துக்கு ஐபிஎல் 2 ரணகள வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் அவரால் காட்சுகளைக் கூட சுலபமாகத் தவறவிடமுடிகிறது. கண் முன்னால் ஒரு வீரர் தேய்ந்து கொண்டிருக்கிறார். பத்ரிநாத் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு புதிய ஜென்மம் எடுக்கவேண்டும். ஷரத் போல பத்ரிநாத்தும் பச்சாதாபத்துக்குரியவராகி வருவது வேதனை.
ஹேடன் சாதித்து முடித்த மனிதன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் கொட்டை எழுத்தில் அவர் பெயர் எழுதப்படும். ஆனால் ஸ்ரீசாந்த் நேற்று வந்த ஒரு சாதாரண பெளலர். மூன்று வருடங்களாக அணியில் ஓர் நிரந்தர இடம் பிடிக்க வழியில்லாமல் இருப்பவர். தன் தகுதி என்ன என்றெல்லாம் பாராமல் குறிப்பிட்ட ஓவரில் மூன்று சிக்ஸர்கள் கோட்டை விட்டுவிட்டு கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஹேடனைப் பார்த்து அவர் கறித்துக்கொட்டியது மன்னிக்கவே முடியாத குற்றம். அணியின் நலனுக்காகவே ஹேடன் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தச் சூழலில் ஸ்ரீசாந்துக்கு விக்கெட் அருளப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஹீ ஈஸ் என் ஓவர் ரேட்டர் ப்ளேயர் என்று பின்னர் இந்த ஸ்லெட்ஜிங் பற்றிக் கூறியிருக்கிறார் ஹேடன். ஸ்ரீசாந்த் உங்களை என்னவென்று திட்டினார் என்று கேட்டதற்கு திரும்பச் சொல்லும் அளவுக்கு அது முக்கியமானதல்ல என்கிறார். ஸ்ரீசாந்துக்குப் பிறகு அணியில் நுழைந்த வீரர்கள் எல்லாம் இப்போதைக்குத் திண்ணையைக் காலி செய்வதாக இல்லை. தியாகியும் கம்ரானும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுவார்கள் என்கிற நிலைவேறு. ஏற்கனவே டைசியுடனான காதல் விவகாரத்தில் ஸ்ரீயின் முகம் கிழிகிறது. நேற்றைய நடத்தையைப் பார்க்கும்போது ஹர்பஜன் விவகாரத்துக்குப் பின்பும் அவர் மனம் மாறவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இன்னோர் அபாயம், அபராதம், தண்டனை காத்திருக்கிறதோ என்று அச்சப்படத் தோன்றுகிறது. தொடர்ந்து வாலிப சேஷ்டைகளுக்காக பேசப்படுவதும் விமரிசிக்கப்படுவதும் ஸ்ரீசாந்துக்கு வழக்கமாகி விட்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவருக்கு துக்குளியூண்டு இடம்கூட வேண்டாம் போலிருக்கிறது.
நான் பயந்ததுபோல சென்னை சூப்பர் சிங்ஸ் பல்லிளிக்கவில்லை. சரியான சமயத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்தான் தோனிக்கு கை கொடுத்திருக்கிறது. அரையிறுதி உறுதி.
பி.கு - 20-20 உலகக்கோப்பை அணி எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. 20-20க்கு எதற்கு ஷாகீர் கானும் இஷாந்த் சர்மாவும். அதைவிடவும் முக்கியமான போட்டிகள் பின்தொடர்கின்றன அல்லவா! வேகப்பந்து வீச்சாளர்கள் கண்ணாடிபோல. போகிற இடங்களுக்கெல்லாம் கண்டபடி எடுத்துச் செல்லக்கூடாது.