இட்லிவடைக்கு ஒரு விளக்கம்
இட்லிவடை இந்த வார முனியில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.
'நேற்று ஒரு ஆன்மிகச் சொற்பொழிவுக்கு போயிருந்தேன். "கண்ணன் குழல் ஊதும் போது ஆங்காங்கே இருந்த பட்ட மரங்கள் எல்லாம் துளிர்த்தன..." என்று சொன்னதும் பக்கத்தில் இருந்தவர் "கண்ணன் கையில் வைத்திருந்த புல்லாங்குழல் மட்டும் ஏன் துளிர்க்கவில்லை?" என்று கேட்டார். நான் நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.
வீட்டில் கலைஞர் டிவியில் கண்ணனே பேசிக்கொண்டிருந்தார். ஆனா இவர் ஜாக்கிசான், ஸ்பீல்பெர்க், டயானா பற்றி எழுதிய கண்ணன். இன்று காலை வலைப்பதிவைப் பார்த்தால் அவர் பேச்சில் மயங்கி கட்அவுட் கூட வைத்திருக்கிறார்கள். கண்ணன் கேமராவை நேராகப் பார்த்து பேசாமல், கேமராமேனையே பார்த்து பேசிகொண்டிருந்தார். கண்ணன் எப்போதும் உமனை தான் பார்ப்பார் என்று படித்ததுண்டு. அதனால் கேமராவை இயக்கியவர் உமனாக இருப்பார் என்பது என் எண்ணம். மைக்கேல் ஜாக்சன் பற்றி ஏதாவது தெரியவேண்டும் என்றால் கண்ணனுக்கு ஒரு ஃபோன் போடு என்று பத்திரிகை உலகில் பரவலாகப் பேச்சு.
மைகேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் இரவீந்தரநாத் தாகூர் எழுதிய வரிகளை படித்தார் என்று ஒரு செய்தி படித்தேன். உயிருடன் இருந்திருந்தால் இவர் பேட்டியைப் பார்த்திருப்பார். தப்பித்துவிட்டார். யார் என்று நீயே முடிவு செய்.'
சிறு விளக்கம் இட்லி,
என்னைப் போன்ற எழுத்தாளனை டிவியில் பேட்டி எடுக்க இளமையான வி,ஜேக்களும் கல்லூரி மாணவிகளும் ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் நடிகன் என்றால்தான் வாயைப் பிளந்துகொண்டு செல்வார்கள். மேலும் ஓர் எழுத்தாளனைப் பேட்டி எடுக்க இங்கு எந்த தொகுப்பாளினிக்கும் தகுதி கிடையாது. தமிழ் சேனல்களில் உள்ள பெண் விஜேக்கள் அத்தனை பேருமே அச்சுபிச்சுகள் (அனுஹாசன் விதிவிலக்கு). குறைந்தபட்சம் ஷூம் சேனல் பூஜா, சோனி டிவி மந்திராபேடி போன்ற ஆளுமையான விஜேக்கள்கூட தமிழில் சாத்தியமேயில்லை.
கலைஞர் செய்திகளில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் மருந்துக்கூட பெண்வாசம் கிடையாது. தொகுப்பாளர்கூட ஆண்தான். முதல் டிவி பேட்டி என்பதால் எனக்கு யாரைப் பார்த்து அல்லது எதைப் பார்த்துப் பேசவேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதுபோல கேமராவுமன் இருந்திருந்தால் ஒருவேளை அவரை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கிக்கொண்டு ஒழுங்காக கேமராவைப் பார்த்து பேசியிருப்பேனோ என்னவோ!