அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிளப் கிரிக்கெட்கூட இந்தியாவில் கிடையாது. செப்டெம்பரில்(தான்) ஸ்ரீலங்கா மும்முனை தொடர் போட்டி, தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் சேம்பியன்ஸ் டிராபி. அதுவரை கிரிக்கெட் வீரர்கள் ஜாலியாக நடிகைகளைக் காதலிக்கலாம். ஃபாஸ்ட் புட்டை உள்ளே தள்ளலாம். அல்லது ஏதாவது ஓர் அக்கப்போருக்கு டென்ஷனாகி பதில் தந்து கொண்டிருக்கலாம். காம்பிளி சச்சினுக்குக் கொடுத்த சங்கடம் போல. புச்சனனுக்கு யுவ்ராஜ் கொடுத்த சாட்டையடி போல.
ஆனால் மற்ற தேச வீரர்களுக்கு நிற்க நேரமில்லை. வெவ்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் மூன்று டெஸ்ட் தொடர்கள் நடந்துகெ¡ண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து, இலங்கை - பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு - வங்காள தேசம்.
ஆஷஸ் அமர்க்களமாக ஆரம்பித்துவிட்டது. முதல் டெஸ்ட் மயிரிழையில் டிரா. தப்பித்தோம் பிழைத்தோம் என்கிற நிலை இங்கிலாந்துக்கு. ஆஸ்திரேலியா பங்குபெரும் எல்லா தொடர்களிலும் தவறாமல் சர்ச்சைகள் இருக்கும். இங்கிலாந்திலும் அதற்குக் குறைவேயில்லை. டெஸ்ட் மேட்சை விடவும் தினமும் கொள்ளை கொண்டது கார்டிஃப் மைதானத்தின் பின்புறத்தில் இருந்த அடர்த்தியான மரங்கள். கானகத்துக்கு நடுவே மைதானம் அமைத்தது போன்ற ஒரு ரம்மியமான தோற்றம். இந்தியக் கான்க்ரீட் மைதானங்களில் ரசிகர்கள் வெந்து தனிவது ஞாபகத்துக்கு வருகிறது.
இலங்கையில் தினம் தினம் புதுப்புது வீரர்கள். முரளிதரன், வாஸ் இல்லாவிட்டாலும் வெற்றி அவர்களுக்கு தண்ணிபட்ட பாடாக இருக்கிறது. பாகிஸ்தான் வழக்கம்போல தள்ளாட்டத்தில் இருக்கிறது. 20-20தான் அவர்கள் பேட்டை. டெஸ்ட் மாட்சில் அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம். கடைசிப் படிக்கட்டில் தோற்கும் வித்தையை நன்கு கற்று வைத்திருக்கிறார்கள். எப்படி வாழ்ந்த கிரிக்கெட் தேசம் அது.
மேற்கு இந்தியத் தீவில் பெரிய கலாட்டாவே நடந்து வருகிறது. காண்டிராக்ட் இல்லாமல் எங்களை ஆடச் சொல்கிறார்கள் என்று குறை சொல்லி கேய்லே, சந்திரபால் போன்ற முக்கிய வீரர்கள் போராட்டம் நடத்தினார்கள். போங்கடா நொன்னைகளா என்று மே.இ நிர்வாகம் புது ஆட்டக்காரர்களை வைத்து வங்களாதேசத்துடன் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆடிவிட்டது. அதிகார வரம்பின் உச்சம்.
சேம்பியன்ஷிப் டிராபிக்கு மீண்டும் திராவிடை உள்ளே நுழைத்திருப்பதைப் பார்க்கும்போது இந்தியாவில் இப்படி ஒரு களேபரம் நடந்தால் மட்டுமே பத்ரிநாத், வீரத் கோலி, புஜாரா போன்ற அடுத்தநிலை வீரர்களுக்கும் கதவு திறக்கும்.