தடைகளைத் தாண்டுபவர்கள்
100 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டில் 11 பேருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படும்போது வாய்ப்பைத் தவறவிட்ட வீரர்களின் மனநிலை பெரும்பாலும் காற்றில் மறைந்த பட்டமாகிவிடுகிறது. ஆனால் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் அதிகார மையத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க தயங்குவது கிடையாது. எனக்குப் பதிலாக திவாரியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களே, என்னிடம் என்ன குறையைக் கண்டீர்கள் என்று பத்ரிநாத் ஆவேசப்பட்ட சில நாள்களில் இந்திய அணி வீரர் என்கிற அடையாளத்தோடு அவர் ஸ்ரீலங்கா பறந்து சென்றார்.
ஆகாஷ் சோப்ராவை யாவரும் அறிவீர்கள். ஷேவாக்-கம்பீர் இணைக்கு முன்பு பரிசோதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஓப்பனர்களில் சோப்ரா முக்கியமானவர். முதல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்பு உயிரைக் கொடுத்து ஆடினார் சோப்ரா. சென்றவருடம் ரஞ்சி போட்டிகளில் சோப்ரா அடித்ததே அதிகபட்ச ரன்கள். ஷேவாக், கம்பீருக்குக் காயம் ஏற்பட்டால்கூட போதும,000. கிடைக்கிற ஒருவாய்ப்பையும் பொன்னாக மாற்றிக்காட்டுவேன் என்கிற நம்பிக்கையோடு இருந்துவந்தார். ஆனால் அவர் பிசிசிஐ-க்கு எந்தளவுக்கு வேண்டப்பட்டவர் என்பது படிப்படியாகத் தெரியவந்தது. இந்திய அணியில் மட்டுமல்ல இந்தியா ஏ அணியில்கூட சோப்ராவை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் வாரியம் மறுத்தது. இதுதவிர புதிதாக பிசிசியில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரேட் பிரிவிலும் சோப்ராவின் பெயர் அழிக்கப்பட்டது. நீ எத்தனை ரன்கள் வேண்டுமானாலும் உன் இஷ்டத்துக்குக் குவித்துக்கொள், இனி நீ எங்களுக்குத் தேவையில்லை என்கிற மனநிலையில் இருந்தது பிசிசிஐ. இதைக் கண்டித்து சோப்ரா கட்டுரை ஒன்றை எழுதினார். ஆனால் பத்ரிக்கு நேர்ந்த அதிசயம் எதுவும் இன்றுவரை சோப்ராவுக்கு நிகழவில்லை.
டென்னிஸ் மற்றும் இதர விளையாட்டுக்கள்போல தன்னிச்சையாக ஒரு கிரிக்கெட் வீரரால் இயங்கமுடியாது. மாநில அணியில் விளையாடவேண்டும் என்றால் முதலில் மாநிலத் தேர்வுக்குழுவுக்கு இவரது ஸ்கோர் கண்ணில் பட்டு அதன்வழியாக ஒரு பிம்பம் உருவாகியிருக்க வேண்டும். அப்படியே மாநிலத்துக்காகத் தேர்வாகி பிரமாதமாக ஆடினாலும் கூரை பிளந்துவிடாது. ரஞ்சி போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்கிற பெருமை மும்பை வீரர் முசும்தாருக்கு உண்டு. முதல் போட்டியிலேயே 260 ரன்கள் அடித்தவர் என்கிற உலகசாதனை கேடயமும் அவர்வசம்தான். ரவிசாஸ்திரி, தெண்டுல்கர், காம்பிளி, ரோஹித் சர்மா என்று இவரோடு ஆடிய அத்தனை பேரும் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை பிசிசிஐயின் கடைக்கண் பார்வை முசும்தார்மீது விழவில்லை.
தினம் ஒரு புதுத்திறமைகள் முளைக்கிற இந்த விளையாட்டில் எல்லோரையும் சாந்தப்படுத்திவிட முடியாது. இருந்தும் இதுபோன்ற அபாக்கியசாலிகள் எதன் அடிப்படையில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிவருகிறார்கள்? இனியும் பிசிசிஐயின் கதவு திறக்கப்போவதில்லை என்கிற உண்மை தெரியவந்தபிறகும் எது இவர்களை இயக்குகிறது?
காதல். கிரிக்கெட் மீதான வெறித்தனமான காதல். இந்திய அணியில் விளையாடினால் பெருமை. அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காக பேட்டைத் தூக்கி பரணில் போடமுடியுமா என்ன? காலையில் எழுந்து உடனே பயிற்சிக்குச் செல்லாவிட்டால் கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். கிரிக்கெட் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் மற்றவர்களபோல 9 டூ 6 வேலையை இவர்களால் ஜென்மத்துக்கும் செய்யமுடியாது. தொடர்ந்து ரஞ்சி ஆட்டங்களில் ஆடி மாநிலத்துக்காக ஆடுகிற சிறு சுகத்தையாவது அனுபவிக்க நினைப்பார்கள். வயது முதிர்ந்துவிட்டால் பயிற்சி நிலையம் தொடங்குவார்கள் அல்லது தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிவிடுவார்கள். ஒருசிலர் அம்பயராகி தொடர்ந்து மைதானத்தை வளையவருவார்கள். இதுவும் இல்லையா, தேர்வுக்குழு, கிரிக்கெட் நிர்வாக அமைப்போடு தங்களை பிணைத்துக்கொள்வார்கள். செய்கிற தொழில்மீது காதல் கொண்டவர்களுக்கு என்ன காயங்கள் ஏற்பட்டாலும் அது அவமானம் ஆகாது.
நன்றி - கல்கி.