ச.ந. கண்ணன்

ச.ந. கண்ணன்

சிங்கங்களும் முயல்களும்

 

டெஸ்ட் கிரிக்கெட் இனி ஓய்ந்துபோகும் என்று ஆசைப்பட்ட, சாபமிட்ட அனைத்து பேராசைக்காரர்களும் ஆஷஸ் தொடரைப் பார்த்து தங்கள் ஒவ்வாமையை  சொஸ்தபடுத்திக்கொள்ளலாம். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கீரியும் பாம்புமாக முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழிய டெஸ்ட் கிரிக்கெட்!

 

பொதுவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்பான கிரிக்கெட் செய்திகளுக்கு சர்வதேச அரங்கில் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும்.  அடுத்த சில வாரங்களில் டெஸ்ட் கிரிக்கெட் பூட்ஸைக் கழற்றி வைக்கப்போகிற பிளிண்டாப் இரண்டாவது டெஸ்டில் ஒரு வெறியோடு ஸ்டம்புகளைக் குட்டிக்கரணம் அடிக்கவைத்தபோது ரசிகர்கள் எழுச்சி அடைந்தார்கள்.  டெஸ்ட் கிரிக்கெட் தன் மகத்தான் நேரங்களைக் காண்கிறது என்று விமரிசகர்கள் அற்புதமான ஆஷஸ் டெஸ்ட் தொடரைக்  கொண்டாடுகிறார்கள். ஐபிஎல் போன்ற ஒரு பணமுதலை டெஸ்ட் கிரிக்கெட்டை விழுங்க நினைத்தாலும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இது பயிர் இடும் காலம். அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கான வீரர்களைக் களத்தில் இறக்கிச் சோதனை செய்து வருகிறது ஆஸ்திரேலியா. இதேபோல இந்தியா, இலங்கை, மே.இ தீவு, பாகிஸ்தான் என அத்தனை முக்கிய அணிகளும்  சிங்கங்களோடு போரிட முயல்களைத்தான்  அனுப்பிக் கொண்டிருக்கின்றன. முன்னனுபவே இல்லாத வீரர்களைக் கொண்டு பாகிஸ்தானைக் கதறடித்துவிட்டது இலங்கை. ஆனால் மே.இ தீவு வங்காள தேசத்திடம் தலை குனிந்து விட்டது. ஆகவே ஆஸ்திரேலியாவின் தோல்வியும் விழுப்புண்களும் கொஞ்ச காலத்துக்குத்தான் என்று ஆறுதல் சொல்கிறது ஆஸ்திரேலியா மீடியா. என்ன இருந்தாலும் அவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பொன்குஞ்சுதான்.

 

இங்கிலாந்தில் எந்த சந்தில் டெஸ்ட் மேட்ச் வைத்தாலும் உறுதியாக 20,000 ரசிகர்கள் திரண்டு விடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மேட்சை டிவியில் பார்ப்பதை திருட்டு விசிடியில் பார்ப்பது போல உணர்கிறார்கள். இதனால் 80,000 இருக்கைகள் கொள்ளளவு கொண்ட மெல்போர்ன் மைதானம் எப்போதும் நிரம்பியே இருக்கும்.  ஆனால் மொஹலியில் சச்சின் லாராவின் டெஸ்ட் ரன்களைத் தாண்டிய தினத்தில் நாலு பேர் எழுந்துநின்று கைதட்டினார்கள். இதுபோன்ற தவறான மைதானங்களில் டெஸ்ட் போட்டியை நடத்தவே கூடாது.

 

ஆஸ்திரேலியாவின் தொடர் தோல்விகளால் நெ.1 அணிக்கானப் போட்டி அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவிடையே பெரிய கண்ணாமூச்சி ஆட்டமே நடக்கிறது. அடுத்த வரிசையில் இலங்கையும் இங்கிலாந்தும் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

டெஸ்ட் கிரிக்கெட் அழியும் என்பதெல்லாம் சும்மா! 20-20யை விட விறுவிறுப்பாக இருக்கிறது ஆஷஸ். ஐந்து நாள் தம் கட்டி ஆடுபவர் தன்னிகரற்ற கிரிக்கெட் கலைஞனாகப் போற்றப்படுகிறார். வரலாற்றில் பிராட்மேன், கவாஸ்கர் பெயர்கள்தான் பொறிக்கப்படுகிறதே ஒழிய அஃப்ரிடியும் யூசுப் பதானும் அல்ல.