ச.ந. கண்ணன்

ச.ந. கண்ணன்

கண்டேன்

கண்டேன் காதலை படத்தைப் பார்த்துவிட்டேன் படம் முழுக்க எக்கச்சக்கத் தவறுகள். இதுபோன்ற படங்களோடு ஒன்றிப்போகவேண்டும் என்றால் பார்வையாளர்களுக்குச் சுத்தமாக சுரணையுணர்வே இருக்கக்கூடாது.  ஒரு காட்சியை எப்படி அணுகவேண்டும்,  கதாபாத்திரம் ஒரு காட்சியில் எப்படிப் பேசவேண்டும், திரைக்கதையில் திருப்பம் அமைய படத்தின் கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று இயக்குநர் ஆர். கண்ணனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

 

கண்டேன் காதலை கதை போல தமிழில் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதையெல்லாம் பார்த்துத்தான் ஜப் வி மெட் உருவாகியிருக்குமோ என்னவோ. தவிர ஜப் வி மெட்டின் உரிமையை வாங்கிக்கொண்டு திரைக்கதை என்று தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார் ஆர். கண்ணன். ஆனால் பழசிராஜா விளம்பரத்தில் எழுத்தாளரின் பெயரை (எம்.டி. வாசுதேவன் நாயர்) இயக்குநருக்கு அடுத்தபடியாக போடுகிறார்கள். அதற்குப் பிறகுதான் இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் பெயர்கள் எல்லாம். கேரளாவிலிருந்து வாளிப்பான நடிகைகளை இறக்குமதி செய்தால் மட்டும் போதாது. இதுபோன்ற நாலு நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

 

ஆதவன் படத்தில் வடிவேலுவின் காமெடி பிரமாதமாக பேசப்படுவதுபோல கண்டேன் காதலிலும் சந்தானத்தின் கொட்டம்தான். அவர் உடல்மொழி இந்தப் படத்தில் அட்டகாசம். குரலில் நகைச்சுவைக்குத் தேவையான ஏற்றஇறக்கம். விவேக் சரிவைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் சந்தானத்துக்குச் சரியான திருப்புமுனை இந்தப் படம்.

 

மணிரத்னம் காண்பித்த தரத்தில் ஐந்து சதவிகிதத்தைக்கூட அவருடைய சீடர்களான ஆர். கண்ணன், சுசிகணேசன், அழகம்பெருமாள் போன்றோர்  எட்டவில்லை என்று முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாலுமகேந்திராவிடமிருந்து பாலாவும் பாலாவிடமிருந்து ஓர் அமீரும் அமீரிடமிருந்து ஒரு சசிகுமாரும் தோன்றியதைப் பார்க்கும்போது பாலுமகேந்திரா வித்யாலயாவின் கல்வித்தரமும் பயிற்சியும் நன்கு புரிகிறது.