ஒரு விபரீத முயற்சி
இசைமீது எனக்கு அளவுகடந்த இச்சையே உண்டு. என்னால் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒரே சமயத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடலையும் ஜூவான்ஸ் பாடலையும் ரசிக்கமுடியும்.
என் அக்கா இசை படித்தவள். எம்.எஸ். கைக்காசு போட்டு ஆரம்பித்த, தமிழிசைக்காக பாடுபட்ட கல்கி ஆசிரியராக இருந்த கல்கி பத்திரிகையில்வேறு இரண்டாண்டு காலம் பணிபுரிந்த அனுபவம். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளாக என் வாழ்க்கை கழிந்தது கலைகள் வாழும் மைலாப்பூரைச் சுற்றியே. நாரதகான சபாவும் மியூசிக் அகாடமியும் என் அலுவலகத்தில் இருந்து மெதுநடையாகவே சென்றுவிடலாம். அட, நான் முதலில் அழகில் சொக்கி விழுந்த பெண்ணும் ஓர் இசை மாணவிதான். இப்படியொரு வசதியான பின்புலம் இருந்தும் தூரமனா என்று அந்தக் காலத்தில் பெண்களை வீட்டின் ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்களே அதுபோல இத்தனைநாளாகத் தொன்மையான தென்னிந்திய இசைவடிவமான கர்நாடக சங்கீதத்தை தள்ளிவைத்தே பழகிவிட்டேன். மொழி புரியாத ஜமைக்காவின் ரெகே பாடல்களில்கூட சொக்கிப்போகும் எனக்கு சாஸ்திரிய இசை வேற்றுகிரக இசைபோல ஆகிவிட்டது.
என் நண்பன் ராஜேஷ் ஒரு மிகச்சிறந்த கலாரசிகன். பணிபுரிவது சாஃப்ட்வேர் துறை என்றாலும் கலைமீது அதீத காதலும் கண்மூடித்தனமான வெறியும் கொண்டவன். ஹிந்துவைத் திறந்தால் இன்று மியூசிக் அகாடமியிலும் நாரதகானா சபாவிலும் யார்யார் கச்சேரி செய்கிறார்கள் என்றுதான் தேடுவான். அலுவலகம் முடிந்ததும் நேராக சபா நோக்கி படையெடுப்பான். ஜாஸ் கான்சர்ட் வரைக்கும் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டான். அப்படியும் அவனோடு ஜோடிபோட்டு நாரதகானா சபாவில் நடந்த ஹுயூமர் கிளப் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேனே தவிர கர்நாடக சங்கீதக் கச்சேரிக்காக சபாக்களில் கால் வைத்ததில்லை (ஆ, ஹியூமர் கிளப்! அதைப் பற்றியும் எழுதவேண்டுமே!). பேட்டிகளுக்காக சுதா ரகுநாதனையும் நித்யஸ்ரீயையும் சந்தித்ததுண்டு. ஆனால் என் கேள்விகள் அவர்கள் பேட்டைக்கு உட்பட்டதாக இருந்தது கிடையாது.
விஷயம் இதுதான். இதுவரை வெவ்வேறு விழாக்களுக்காக சபா பக்கம்போனவன் முதல்முறையாக இசை மழைக்காக ஒதுங்கப்போகிறேன். ஸ்வாதீனமாக கர்நாடக இசையை ரசிக்கப் போகிறேன்.
புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்டது. அதற்காக இப்பெருவிழாவை நான் இழப்பதாக இல்லை. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு ஸ்வரங்களையும் வைத்து அப்படி என்னதான் பாட்டு கட்டுகிறார்கள் என்று நேரில் பார்த்து தெரிந்துகொள்ளப்போகிறேன். இசைவிழா அட்டவணையை என் டெஸ்க்டாப்பில் பதிந்துவிட்டேன்.
என் முதல் கச்சேரி, நவம்பர் 20 அன்று. புகழ்பெற்ற டி.எம். கிருஷ்ணாவும் பாம்பே ஜெயஸ்ரீயும் இணைந்து மிரட்டப்போகும் அந்த நாளில். வளாகம் - மியூசிக் அகாடமி.
பி.கு - என்னைப் போன்ற ஞானசூன்யங்கள் கர்நாடக இசைக்கு ரசிகனாவது அதன் வளர்ச்சிக்கு நல்லதா அல்லது இதனால் கர்நாடக சங்கீதத்துக்கு ஏதாவது குந்தகம் விளையுமா என்பதெல்லாம் இன்னும் சிலவாரங்களில் தெரிந்துவிடும்.