ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
தன்னைப் போல் பிறரை நேசி!

சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த கொடுமைகளைப் பற்றி ஊரே விவாதித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களில் ஒருவராக நின்று காவல்துறை வேடிக்கை பார்த்தது மாணவர்களின் நடத்தையைவிடவும் அதிர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்.

 

அதே நாளில் சென்னையில் நடந்த இன்னொரு சம்பவம் சட்டக்கல்லூரி களேபரத்தால் உருத்தெரியாமல் போய்விட்டது. சென்னை ஓட்டேரியில் தாயும் மகளும்  தூக்கில் தொங்கி மரணமடைந்த சம்பவம். அதை முதலில் பார்த்து அலறியடித்துக்கொண்டு ஊருக்குச் சொன்னது - அந்தத் தாயின் பன்னிரண்டு வயது இளைய மகள்.

 

கணவர் உயிரோடு இல்லை. அன்பும் அரவணைப்பும் தேடி பெற்றோரிடம் சென்றபோது அவர்களும்  உதாசீனப்படுத்திவிட்டார்கள். அடுத்தக் கணம், இனி வாழக்கூடாது என்று அந்தப் பெண் முடிவெடுத்து விட்டார். அவருக்கு இரண்டு பெண்கள். சிறிய பெண் அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாள். அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போது பெரிய மகளை எழுப்பி அடுத்த அறைக்குச் சென்று ஒரே சேலையில்  இருவரும் தூக்குப் போட்டுக்கொண்டார்கள். காலையில் படுக்கையில் அம்மாவும் அக்காவும் இல்லை என்று பார்த்த அந்தச் சிறுமி அடுத்த அறைக்குச் சென்று பார்த்தபோது முதலில் அவள் கண்களில் தட்டுப்பட்டது, தொங்கிக்கொண்டிருந்த  நான்கு கால்கள்.

 

இந்தி கற்றுக்கொள்கிறோம். டெய்லரிங் கற்றுக்கொள்கிறோம். பெண்கள் பேருந்து ஓட்டக்கூடப் பழகிவிட்டார்கள். ஆனால் சரியாக வாழ்வதற்கு யாரும் கற்றுக்கொள்ளவில்லை. எத்தனை அனுபவங்கள் கிடைத்தாலும் பக்குவம் ஏற்படுவதேயில்லை.  சரி படிக்காத பெண்தான் அப்படி என்றால் படித்த மாணவர்களும் வடசென்னை ரெளடிகள்போல கையில் கத்தி, கபடா வைத்து கொலைவெறியோடு சகமாணவனைத் தாக்குகிறார்கள். அடுத்தவனைக் கொல்ல நினைப்பது பாவம் என்றால் தன்னோடு இன்னொரு உயிரையும் இழுத்துக்கொண்டு சாகத் துணிவதும் இன்னொரு சிறிய உயிரை அநாதையாக்கிவிடுவதும் அதைவிடவும் மகாபாவம் அல்லவா!

 

கணவன் இல்லை. பெற்றோரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. சரி, அதற்காக உயிரை மாய்த்துக்கொள்வதா என்றால் அந்தப் பெண்ணால் அதற்கு மேல் யோசிக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். தன்னோடு துணைக்கு ஒருவரும் இல்லை என்கிற பயம் வந்தவுடன் அத்தோடு வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் துணிந்துவிட்டார். இந்த துணிச்சல் வாழ்வதற்கு வரவில்லை.

 

இங்கே இரண்டு விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்தப் பெண் தனிமனுஷியாகப் போராடி தன் இரு பெண்களையும் கரை சேர்த்திருக்கலாம். அல்லது இவரது நிலைமையை எண்ணி அவருடைய உறவினர்கள், நண்பர்கள் உதவியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக இரண்டும் நடக்கவில்லை. ஃபெலினி இயக்கிய 'லா ஸ்டிராடா' என்கிற இத்தாலி படத்திலும் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி எழுதிய 'The Most Beautiful Woman in Town' என்கிற சிறுகதையின்  முடிவிலும் அதன் இரு கதாநாயகர்களும் அடடா, அந்தப் பெண்மீது இன்னமும் அதிகமான அன்பை பொழிந்திருக்கலாமே என்று எண்ணியெண்ணி வருந்துவார்கள். ஆனால் அவர்கள் மனத்தில் அன்பு ஊற்றாக பெருகும்போது அந்தப் பெண்கள் உயிரை மாய்த்திருப்பார்கள். ஒருவர் இறந்தால் மட்டுமே அவர்மீது அடுத்தவருக்கு பச்சாதாபம் ஏற்படுகிறது.

 

தமிழ்நாட்டில் பலரும் தங்களுடைய பிறந்தநாளுக்கு ஹோமுக்குச் சென்று நிதிஉதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நம் இருக்கைக்கு அருகே உள்ளவர்களுக்கு, நம் அடுத்தவீட்டில் உள்ளவர்களுக்கு, நண்பர்களுக்கு நெருக்கடியான சமயங்களில் உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவதேயில்லை. தானுண்டு, தன் சுகமுண்டு என்கிற குறுகிய மனப்பான்மைதான் எல்லோரிடமும் தென்படுகிறது. தன்னைப் போல் பிறரையும் நேசி என்பதெல்லாம் எழுத்தில் மட்டுமே காணமுடிகிறது. இல்லாவிட்டால் எப்படி ஓர் உயிரால் இன்னொரு உயிரை வதைக்கமுடியும்?

 

கையில் கத்தி வைத்துக்கொண்டிருக்கும் அந்த மாணவர்களைப் பாருங்கள். அவர்கள் உடைகளைக்  கவனியுங்கள். உடையில் மட்டுமே நவீனம். சிந்தனையில்  நாம் இன்னமும் மிருகக்குணத்தை விட்டுவிடவில்லை. அறிவுச் செல்வம் இல்லாத ஒருகுறையினால்தான் சமூகத்தில் காணச்சகிக்காத அவலங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறன. தற்கொலை செய்துகொள்ளத் துணிபவர்களுக்கும் களேபரங்களில் ஈடுபடுவோருக்கும் ஊக்கம் கொடுப்பது அவர்கள் வாழும் சூழல். நினைத்துப் பாருங்கள். சட்டக்கல்லூரியில் நடந்ததுபோல ஒரு சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறதா? கையில் துப்பாக்கியை வைத்து பேருந்து பயணிகளை மிரட்டிய பீஹாரி ஒருவன் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டபோது ஒட்டுமொத்த பீஹாரும் காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இங்கு தன் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு உயிரை மாய்த்திருக்கிறார் ஒரு பெண்.    

 

சட்டக்கல்லூரியில் இதற்கு முன்பும் இதுபோன்ற பல வன்முறைகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் போலீஸ் முன்வந்து கலவரத்தைத் தடுக்க முயற்சிகள் எடுத்திருக்கிறது. ஆனால் அப்படி செய்த ஒவ்வொருமுறையும் காவலர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசு பணிநீக்கம் செய்திருக்கிறது. மாணவர்கள்மீது போலீஸ் கை வைப்பதை நீதிமன்றம் விரும்புவது கிடையாது. ஆகவேதான் நேற்று அவர்கள் கையைக் கட்டி வாயைப் பொத்திக்கொண்டு நின்றுவிட்டனர். இப்படி சட்டக்கல்லூரியைச் சுற்றி ஒரு கூட்டமே தவறு செய்துகொண்டிருக்கிறது. திருத்தப்படவேண்டியது காவல்துறை மட்டுமல்ல.

 

நடிகர்களின் கட் -அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் ஒரு சமூகத்தில் தற்கொலைகளும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் நடக்காமல் இருந்தால்தான் நான் ஆச்சரியப்படுவேன்.