மெரீனா கடற்கரையில் இரவில் நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து மெரீனா என்கிற ஒரு குறுநாவலை எழுதினார் சுஜாதா. அதன் ஆரம்ப வரி, 'திலீப் சாயங்கால வேளைகளில் மெரீனாவுக்குப் போகமாட்டான். ராத்திரிதான்.’
எனக்கும் சுஜாதாவின் திலீபுக்கும் துளி சம்பந்தம் கிடையாது. என் வாழ்நாளில் பத்துமுறை மெரீனாவுக்குச் சென்றிருந்தால் அதிகம். விளக்கு வைக்கும் நேரம் ஆனபிறகு மெரீனாவில் காலாட்டிக் கொண்டிருந்ததாக ஞாபகமே இல்லை. ஆனால் நண்பன் கார்த்திக் கற்பனை திலீப்பின் உயிர்பிம்பம். நடுநிசியில் மட்டுமே மெரீனாவுக்குச் செல்லும் பழக்கம் உள்ளவன்.
நானும் கார்த்திக்கும் திருவல்லிக்கேணி ரத்னா கஃபேவில் சாப்பிடலாம் என்று தயாரானபோதே இன்று கட்டாயம் மெரீனாவையும் தொட்டுவிடவேண்டும் என்று திட்டமிட்டு விட்டோம். நான் இரவில் வீட்டைத் தாண்டி எங்கும் போவது கிடையாது. எங்கள் தெரு நாய்களின் சதியால் நான் முடக்கி வைக்கப்பட்டாலும் என் இரவு வாழ்க்கை என்பது வாசிப்புக்கும் எழுதுவதற்கும் மட்டுமே நேர்ந்துவிடப்பட்ட ஒன்று. பொழுதுபோக்குகளுக்கு அவ்வேளையில் இடம் கிடையாது.
இந்த வருடம் அதற்குள் பனிக்காலம் ஆரம்பமாகி விட்டது என்பதை நேற்றுதான் முதல்முதலாக உணர்ந்தேன். பகலிலும் என் வீட்டு ஜன்னல், கதவுகளை சாத்தியே வைத்திருப்பேன். இதனால் வீடு நீண்டநாளாகவே காலியாக இருக்கிறது என்று பலபேர் வீட்டுக்காரப் பாட்டியிடம் வந்து விசாரித்தது உண்டு. மியூசிக் அகாடமி தாண்டியவுடனே முகத்தை அறைந்த கடற்கரைக் காற்றுதான் பருவகால மாற்றத்தை எடுத்துரைத்தது. ரத்னா கஃபே பற்றி பிறகு எழுதுகிறேன் (ஏனோ அதைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ராயர் கஃபே என்றுதான் மூளையில் உதிக்கிறது). தமிழ்நாட்டு குறிப்பாக சென்னை ஓட்டல்கள் பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது.
மெரீனா பக்கம் சென்றவுடன் அண்ணா சதுக்கம் அருகில் சென்று வண்டியை நிறுத்தலாம் என்று உள்ளே நுழைந்தவுடன் எனக்குக் கண்ணில் பூச்சி பறந்தது. அருகில் இருந்த அண்ணா சமாதியும் எம்.ஜி.ஆர் சமாதியும் ஜகஜோதியாக நியான் விளக்கு வெளிச்சத்தில் டாலடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெரீனா கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சுடுகாடுபோல இருள்கவிந்து இருந்தது. கடலுக்கும் கடற்கரைக்கும் வித்தியாசமே தெரியவில்லை. சாலையில் ஓடும் வாகனங்களின் வெளிச்சமும் தூரத்தில் தெரியும் சமாதி விளக்குகளின் வெளிச்சமும்தான் ஓரளவு இருட்டைப் போக்கின. இங்கு வேண்டாம், காந்தி சிலை பக்கம் போவோம் என்று அங்கிருந்து அடுத்த நொடியே கிளம்பிவிட்டோம்.
வழி நெடுக நிறைய காதல் சிட்டுகள். பகலில் மெரீனாவுக்கு வருபவர்களே வினோதமாகத் தென்படுவார்கள். ஆனால் இவர்கள் இரவிலும் சளைக்காமல் காதலித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பெண்ணுக்கு வயது அதிகம் இருந்தால் 18 இருக்கும். தன் ஆணோடு நெருக்கமாக உட்கார்ந்து அளவளாவிக் கொண்டிருந்தாள். பொட்டு வெளிச்சத்தில் அதுபோல நிறைய பேர் தென்பட்டார்கள். போலீஸ் திக்விஜயம் செய்தாலும்கூட அவர்கள் கவலைப்படுவர்களா என்று தெரியவில்லை. அங்கு காதலைக் காமம் செழிக்க வைத்துக்கொண்டிருந்தது.
நான் பார்த்து ஒரு ஜோடி மட்டும் எந்த லஜ்ஜையும் இல்லாமல் இறுகக் கட்டிக்கொண்டு காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பிரான்சில் இப்படித்தான் மக்கள் கள்ளம்கபடம் இல்லாமல் இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அதுசரி, வெட்டவெளி மெரீனாவும் இல்லாவிட்டால் இவர்களுக்கு வேறு ஏது போக்கிடம்? கடறகரையைப் படுக்கை அறையாக மாற்ற தெம்பு வேண்டும்!
திருவல்லிக்கேணி ரயிலடிக்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதி முழுக்க அப்போது கடற்கரைக் குடியிருப்பாக மாறியிருந்தது. அரை கிலோ மீட்டருக்கு குடும்பம் சகிதமாக போர்வையைப் போர்த்திக்கொண்டு கடற்கரை மணலை மெத்தையாகப் பாவித்து நிறைய பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தூக்கம் வராதவர்கள் நிமிர்ந்தால் பரந்த வானம். புரண்டு படுத்தால் கடலும் கண்சிமிட்டும் கப்பல்களும். மின்விசிறி எக்காலத்துக்கும் அவசியமில்லை. செளந்தர்ய நித்திரை.
காந்தி சிலைக்கு அருகில்தான் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. அதிக வெளிச்சம் இல்லாது போனாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சம் கிடைத்தது. அந்நேரத்தில் நிறைய பேர் குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் சிறுகதையான 'தேஜஸ்வினி' பற்றி கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு குடும்பக் கதையை சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக மாற்றுவது 'விழவில்லை... பறந்துபோனான்' என்கிற அதன் கடைசிவரிதான். அக்கதையில் வருகிற நாயகியும் நாயகனும் வேறு யாருமல்ல. சாட்சாத் சுஜாதாவேதான். தன் அறிவு விஸ்தீரணத்தை கதாபாத்திரங்கள்மீது செலுத்தியிருப்பார் அவர். இவ்வாறு சுஜாதாவின் பேராற்றலை, நுணுக்கமான உத்திகளை சிலாகித்துக் கொண்டிருந்தேன். 'ஏறக்குறைய சொர்க்கம்’ நாவலின் சுருக்கத்தையும் சொன்னேன். பேசப்பேச மீன் வாசனை நாசியை வருடிக்கொண்டிருந்தது. காற்று விடாமல் முகத்தில் அடித்து என் சட்டைக்குள் எல்லாம் புகுந்து கொண்டிருந்தது. கடற்கரையொட்டிய சில கடைகள் விழித்திருந்தன. நிறைய நாய்கள் தனித்தனியாக ஓடிக்கொண்டிருந்தன.
அப்போது ஒரு காட்சியைப் பார்த்து ஆடிப்போய் விட்டேன். கடற்கரையின் தனிச்சாலை ஓரமாக காரை நிறுத்தி அதிலுள்ள டேப்பில் பாட்டை அலறவிட்டு ஒரு ஆறு பேர் கண்டமேனிக்கு நடனமாடிக்கொண்டிருந்தார்கள். ஆம். நிஜமாகவே. ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் ஒத்திகையா என்றுகூட உத்துப்பார்த்தேன். ஆனால் ஆறு பேரின் வயதும் 40-ஐ தாண்டியிருந்தது உறுதியாகத் தெரிந்தது. என்னடா இது, கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவார்கள். வாக்கிங் போவார்கள். அல்லது வட்டமாக நின்று தேகப்பயிற்சியும் கொள்வார்கள். அதுவும் இல்லையா, வசூல்ராஜா பிரகாஷ்ராஜ்போல ஹிஹிஹிஹீஹீஹீஹீ... ஹாஹாஹாஹா என்று வாயை முழுவதும் திறந்து அதனைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கு சுளுக்கு எடுப்பார்கள். ஆனால் இதென்ன, பாட்டைப் போட்டுவிட்டு கடமுடா நடனம்! அருகில் போய் விசாரிக்க பயமாக இருந்தது. அருகில் இருந்த கார்த்திக்கைத் தவிர எல்லோருமே எனக்குப் புதிராகத் தெரிந்தார்கள். பீதியும் குழப்பமும் கூடவே பயணித்தன.
கடலை சிறிது நேரம் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இது பார்க்காத ஆதிமனிதர்களா, மாமன்னர்களா, பிரிட்டிஷ் அதிகாரிகளா, சுதந்தரப் போராட்டங்களா? எல்லா வரலாற்றுச் சம்பவங்களுக்கும் கடலுக்கும் ஏதோவொரு விதத்தில் தொடர்பு இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் மெளன சாட்சியாக இருந்திருக்கிறது கடல். வானம் எப்படி ஒரு புதிரோ அதைவிடம் பலமடங்கு புதிர் கடல். கடலுக்குள்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள், எத்தனை எத்தனை பொக்கிஷங்கள்! மொத்தக்கடலும் என்றைக்காவது வடிந்துபோகுமா? அல்லது மொத்தக் கடலும் ஊருக்குள் புகுந்தால் நம் கதி என்னவாவது?
’என்னடா கார்த்திக். கொஞ்சம்கூட வெளிச்சமே இல்லை. மக்களெல்லாம் வந்துபோக சிரமமா இருக்குமே’ என்று அவனிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன். கடற்கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன் என்கிற தகுதியில் நிறைய தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
’நீங்க வேற கண்ணன். யாரும் வர்றக்கூடாதுனுதானே இருட்டா இருக்கு. அப்புறம் லவ்வர்ஸூக்கு நாமெல்லாம் தொந்தரவா இருக்கமாட்டோமா?’ என்றான் பளிச்சென்று. இருட்டில் விளக்கு பிடிக்கிறது அரசு! தூரத்தில் நிறைய போலீஸ் ஜீப்புகள் தென்பட்டன. மணி பன்னிரண்டு ஆகிவிட்டால் அவர்கள் கடற்கரைக்குள் வந்து தூங்கிக்கொண்டிருக்கும் பொது ஜனத்தை கிளப்புவார்களாம். சதா சைரன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம். கடலுக்கு அருகில் சென்று தற்கொலைக்கு முயல்கிறவர்கள் யாராவது தட்டுப்படுவார்களா என்றும் அடிக்கடி நோட்டம் விடுவார்களாம். அப்படியே பேச்சு திசை மாறியது. பெண்கள், தமிழ் சினிமா, உலக இசை பற்றியெல்லாம் மனத்தில் பட்டத்தைப் பேசிக் கொண்டிருந்தோம்.
மணி 11.30 ஆனது. மண்ணை உதறிவிட்டு இருவரும் எழுந்தோம். கோடை காலத்தில் இந்தப் பக்கம் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் நேற்று அங்கு போனது தர்மசங்கடமாகவே இருந்தது. இனிமேல் அங்கு போகக்கூடாது என்பதல்ல அதன அர்த்தம். ஒவ்வொருமுறை வருகிறபோதும் இதுபோல கண்றாவி காட்சிகளைப் பார்த்து நடுங்கிக்கொண்டு இருக்கவேண்டுமா என்றுதான் எண்ணத் தோன்றியது. ‘மெரீனா வேளா வேளை வேஷம் மாறும்’ என்று நாடிபிடித்து எழுதியிருப்பார் சுஜாதா. பின்னே, எங்கு பார்த்தாலும் குப்பை கூளம். இருட்டு. ஜல்சாக்கள். சுகாதாரமற்ற உணவுக்கடைகள். சேரிபோல இருக்கிறது இரவுமெரீனா. கடற்கரை கடற்கரையாக இல்லாமல் பலபட்டறையாக இருக்கிறது!
ஆனால் என்ன, எனக்குத்தான் இப்போது புதிதாக ஓர் ஆசை முளைத்துவிட்டதே! ஓர் இரவு முழுக்க மெரீனா மணல்மெத்தையில் சுகமாகப் படுத்து உறங்கவேண்டும் என்கிற கடலளவு ஆசை!